எதையும் தாங்கும் இதயம், அண்ணாவுக்கு மட்டும் அல்ல. மக்களுக்கும்தான்.
ராமாவரம் தோட்டம். 23 நாட்கள் முதல்வராக இருந்தவர். எம்.ஜி.ஆரின் மனைவி வி.என்.ஜானகியின் சமாதி அங்கேதான் இருந்தது. யாரிடமாவது அனுமதி வாங்க வேண்டி இருக்குமோ என்ற எண்ணத்துடனே சென்றேன். பெரிய கேட்டுக்கு அடுத்து வாசலே இல்லாமல் திறந்திருந்தது ஒரு வழி. உள்ளே சென்றதும் ஒருவர் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். வாங்க என்று உடல்மொழியிலேயே அன்பாய் அழைத்துவிட்டு அவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். நூறடி தூரத்தில் எம்.ஜி.ஆர் வீடு. தமிழ்நாட்டையே இன்னமும் தன் பெயரால் ஆண்டுகொண்டிருக்கும் அவர் வாழ்ந்த வீடு, எந்தக் களேபரங்களும் இல்லாமல் இருந்தது.
‘அது ஜானகியம்மா அடக்கம் பண்ணின இடம்’ என்றார் அந்தத் தோட்டக்காரர். பார்த்தேன். சாதாரண அளவிலான புகைப்படம் ஒன்று வைக்கப்பட்டிருக்க சலவைக்கல் மேடையுடன் இருந்தது சமாதி.
தோட்டக்காரரிடம் பேச்சுக் கொடுத்தேன். ‘ஐயா இருக்கறப்ப இருந்து இருக்கேனுங்க’ என்றவரிடம் இன்றைய அரசியல் சூழல் குறித்துக் கேட்டால், ‘அதைப் பத்தியெல்லாம் பேச எனக்கு தகுதி இல்லைங்க. ஒண்ணே ஒண்ணுங்க. எல்லாம் தலைவரோட போச்சுங்க. இதப் பாருங்க. இந்த மாதிரி கிழிஞ்ச லுங்கி கட்டிருந்தாலும் சரி, அழுக்கு வேட்டி கட்டிருந்தாலும் சரி.. தலைவர் கூப்டுப் பேசுவாருங்க. இப்ப வெள்ள வேட்டி கட்டிகிட்டா மட்டும்தான் பேசறாங்க. ஏழபாழைங்ககிட்ட யார்ங்க நெருங்கிப் பேசறாங்க?’ என்று ஆதங்கப்பட்டார்.
இன்னொருவர் சசிகலாவைப் பற்றிச் சொல்லும்போது, ‘மொத்தமே 3, 4 வாட்டிதான் வந்திருக்காங்க. ஜெயலலிதா இல்லாம வந்தது, இப்ப ஜெயிலுக்குப் போறதுக்கு முந்தி மட்டும்தான். அதுக்கு முன்ன தலைவர் இருந்த இடம் யாருக்குத் தெரிஞ்சிருக்கு? ஓட்டுக்காக வர்றதுதான்’ என்றார். முதலமைச்சர் யார் என்று தெரியுமா என்று கேட்டால், கையெடுத்துக் கும்பிடுகிறார்கள். ‘தலைவர்தாங்க. அவ்ளோதான். அவர் இடத்துல யார் இருக்காங்கனு கேட்டு நோகடிக்காதீங்க’ என்கின்றனர்.
வெளியே வந்தேன். அண்ணா சமாதியில் ‘எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது’ என்று எழுதப்பட்டிருந்தது நினைவுக்கு வந்தது. எதையும் தாங்கும் இதயம், அண்ணாவுக்கு மட்டும் அல்ல. மக்களுக்கும்தான்.
- Vikatan Emagazine






















