பிரதமராக இருந்த நேரு சென்னை வந்தபோது..
சினிமா
1958-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி அப்போது பிரதமராக இருந்த நேரு சென்னை வந்தபோது அவருக்கு திமுக சார்பில் கருப்புக் கொடி காட்ட தீர்மானிக்கப் பட்டது. எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிறுவனத்தில் நடிகர்களுக்கு உடைகள் தைப்பதற்காக இருந்த தையல் மெஷின்கள் மூலம் இரவு பகலாக கருப்பு கொடி தயாரிக்கும் பணி நடந்தது. போராட்டத்துக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது படலம் தொடங்கியது.
அப்போது, நள்ளிரவில் எம்.ஜி.ஆர். கைது செய்யப்பட்டார். மேலும், நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி, நடிகமணி டி.வி.நாராயணசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், வளையாபதி முத்துக்கிருஷ்ணன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். முதலில் எம்.ஜி.ஆரை சைதாப்பேட்டை காவல் நிலையம் கொண்டு சென்று காலையில் சென்னை மத்திய சிறையில் அடைத்தனர். எம்.ஜி.ஆர். 4 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நேரு சென்னை வந்து சென்ற பின் எம்.ஜி.ஆர். விடுவிக்கப்பட்டார்.
சிறையில் இருந்தபோது சிறைச்சாலை விதிகளை எம்.ஜி.ஆர். முழுமையாக கடை பிடித்தார். சிறையில் சிவப்பு அரிசிச் சோறுதான். மற்றவர்கள் சாப்பிட முடியாமல் சங்கடப் படுகையில் எம்.ஜி.ஆர். எந்த சலனமும் இன்றி சாப்பிட்டார். இரவில் சிறை அறைக்குள் அடைத்து விட்டு காலையில்தான் திறந்துவிடுவார்கள். தாகம் தீர்த்துக்கொள்ள மண் பானையில் தண்ணீர். அருகே தகர டப்பா. அதில் இருந்து தண்ணீர் எடுத்துக் குடிக்க வேண்டும். அறையின் மூலையில் இரண்டு சட்டிகள். அதுதான் கழிப்பிட வசதி.
அப்போதே எம்.ஜி.ஆர். திரையுலகின் உச்ச நட்சத்திரம். வாய்ப்புகளும் வசதிகளும் வந்துவிட் டன. என்றாலும் சிறையில் இந்த அசவுகரியங்களை எம்.ஜி.ஆர். பொருட்படுத்தவில்லை. இதை எல்லாம் முகமலர்ச்சியுடன் எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொண்டார். அவருக்கு பஞ்சணையும் ஒன்றுதான், கட்டாந்தரையும் ஒன்றுதான்.
சிறைக்கு உள்ளேயும் எம்.ஜி.ஆரின் வள்ளல் தன்மை வெளிப்பட்டது. எம்.ஜி.ஆர். சிறையில் இருக்கிறார் என்றதும் சட்டத்துக்கு உட்பட்டு அவருக்காக பழங்கள், உணவுப் பொருட்களை வெளியில் இருந்து கட்சியினரும், ரசிகர்களும், பொதுமக்களும் அனுப்பி வைத்தனர். அவற்றை சிறைக் கைதிகளுக்கு பகிர்ந்து அளித்துவிட்டு எல்லோருக்கும் கிடைத்ததை உறுதி செய்த பிறகே எம்.ஜி.ஆர் சாப்பிடுவார்.
கைதானவர்களில் பலரை சாதாரணமான ‘சி’ வகுப்பில் அடைத்தனர். எம்.ஜி.ஆருக்கு மட்டும் ‘பி’ வகுப்பு அளிக்க சிறை நிர்வாகம் அனுமதி அளித்தது. ஆனால், எல்லோருக்கும் ஒரே வகுப்பு கிடைத்தால்தான் தானும் ‘பி’ வகுப்பில் இருக்க முடியும் என்று எம்.ஜி.ஆர். போர்க்கொடி தூக்கினார். அதன் பிறகே, அவருடன் கைதான பலர் ‘பி’ பிரிவுக்கு அனுப்பப்பட்டனர்.
- தி இந்து





















