• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரிட்டன் அரசை கடுமையாக விமர்சித்த கன்சர்வேட்டிவ் தலைவர் கெமி பேடனொக்

இலங்கை

ஈரான் தாக்குதல் தொடர்பான பிரிட்டன் அரசின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்து, கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் கெமி பேடனொக்(Kemi Badenoch), பிரதமருக்கு எதிராக தனது கருத்துக்களை முன்வைத்தார்.

ஹாரோகேட்  (Harrogate ) நகரில் நடைபெற்ற கன்சர்வேட்டிவ் கட்சியின் வசந்தகால மாநாட்டில் உரையாற்றிய அவர், ஈரான் தொடர்பான பிரச்சினையில் அரசாங்கம் தெளிவான முடிவெடுக்காமல் ‘வேலியின் மீது அமர்ந்து கொண்டிருக்கிறது’ என குற்றம் சாட்டினார்.

உலகின் பல நாடுகள் தங்கள் பாதுகாப்புத் தயாரிப்புகளை வலுப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், பிரிட்டன் அரசு பலவீனமான அணுகுமுறையை பின்பற்றுகிறது எனவும் அவர் கூறினார்.

மேலும் தற்போதைய அரசு ‘முன்னாள் காலத்தில் இருந்த தேசபக்தி கொண்ட தொழிலாளர் கட்சியைப் போன்றதல்ல’ என்றும், அவர்கள் முக்கியமான சர்வதேச பிரச்சினைகளை கூட மாணவர் அரசியலைப் போல நடத்துகின்றனர் என்றும் பேடனொக் (Badenoch), விமர்சித்தார்.

பிரதமர் தற்போது இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்களின் அழுத்தத்திற்குள் சிக்கியுள்ள ‘அரசியல் பிணைக்கைதி’ போல செயல்படுகிறார் என்றும் அவர் குற்றம் சாட்டினார். உலகின் தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலையின் தீவிரத்தைக் கூட அவர்கள் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை,  பிரிட்டனின் கூட்டணி நாடுகள் இப்போது பிரிட்டனை நம்ப முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ‘நமது கூட்டாளிகள் இந்த வாரம் பிரிட்டனை பலவீனமான நாடாகவே விவரித்துள்ளனர். நாங்கள் அவர்களை விட்டு விலகிவிட்டோம்,  போராட்டத்தில் காணாமல் போய்விட்டோம் என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்’ எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும்,  மெடிட்டரேனியன்  (Mediterranean) கடலில் உள்ள பிரிட்டன் இராணுவத் தளங்களை பாதுகாப்பதற்காக கூடுதல் படைகளை அனுப்ப அரசு மறுத்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

இதே நேரத்தில் அமெரிக்கா, கிரீஸ் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் தங்களது கப்பல்களை அப்பகுதிக்கு அனுப்பியுள்ள நிலையில், பிரிட்டனின் கப்பல் போர்ட்ஸ்மவுத் (Portsmouth) துறைமுகத்திலேயே தொழிற்சங்க பிரச்சினை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.

இந்த நிலைமை பிரிட்டனின் சர்வதேச மதிப்பை பாதிக்கக்கூடும் எனவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
 

Leave a Reply