• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கண்ணன் பெயர் இந்தியாவில் எந்த திரைப்படப் பாடல்களிலும் , தமிழ் திரைப்பட பாடல்களில் இடம் பெற்றது போல் இடம் பெற்றது இல்லை

சினிமா

கண்ணன் பெயர் இந்தியாவில் எந்த திரைப்படப் பாடல்களிலும் , தமிழ் திரைப்பட பாடல்களில் இடம் பெற்றது போல் இடம் பெற்றது இல்லை. காரணம் யார்?
பெயருக்கு ஏற்றார் போல், பாரதியாருக்கு பிறகு வாழ்ந்த ஒரே கவிஞர் கண்ணதாசன் மட்டும் தான்!!
அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகத்தில் அவர் சொல்லுவார், " நான் திரைப்படங்களில் டூயட் பாட்டு எழுதும் போது கூட கண்ணனை நினைத்து எழுதுவேன்!" எல்லோரும் காதல் பாட்டு என்று நினைப்பார்கள், நான் கண்ணன் பாட்டு எழுதுவேன்.
கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல..
கண்ணனை நினைக்காத நாளில்லையே
யமுனா நதி எங்கே ராதை முகம் எங்கே கண்ணன் போவது எங்கே
என்று பல பல பாடல்கள்!!
ஒரு மனிதனின் வாழ்க்கையில் எல்லா சம்பவங்களுக்கும் எல்லா சூழ்நிலைக்கும் மிகப் பொருத்தமாக ஆன்மீகப் பாட்டு எழுதுவது கண்ணதாசன் மட்டும்.
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா? இது உண்மையில் திரைப்படத்தில் கணவன் மனைவிக்காக கண்ணதாசன் எழுதியதாக பலர் நினைப்பார்கள்.
ஆனால் தானும் எம்ஜிஆர் ரும் கருணாநிதியும் அந்த காலகட்டத்தில் எடுத்த அரசியல் நிலைப்பாடுகளை தெளிவாக சொல்லுவார்.
நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவும் வானும் போலே.. ( இது கருணாநிதி எம் ஜி ஆர் க்கு சொல்வது )
என் நிழலும் கூட தேய்ந்து வந்தது நீ வளர்ந்ததாலே!
இருவரும் அதிகமாக உறவாடி பிரிந்து விட்டார்கள்.
இந்த இடத்தில் கண்ணதாசன் தன்னை பற்றி சொல்கிறார், " உனைப் போலே அளவோடு உறவாட வேண்டும் ", என்று அரசியலில் பயணித்து, கடைசியில், " இது கணவன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது!" என்று முடிக்க தனி திறமை வேண்டும்.
அதில் அவர் சொன்ன "மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று மானமுள்ள மனிதனுக்கு அவ்வை சொன்னது, இது அவ்வை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது!" இது வரலாற்றில் ஏற்றப்பட வேண்டிய பொன் வரிகள்!! கண்ணதாசன் தன்னை மதிக்காத திராவிட இயக்க பக்கம் போவதில்லை என்று இந்த வரிகளை எழுதி இருப்பார் போலும்!
சாதாரணமான டூயட் பாட்டுக்கு கண்ணன் பெயரை பயன்படுத்தும் ஒரு கவிஞரிடம், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் முன்னே ஒரு குழந்தை கிருஷ்ணர் வேஷம் போட்டு வந்தால், அவர் என்ன பாடுவர்? அவர் என்ன கேட்பார்?
ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா,
ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா
பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள் பார்த்தன் அவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்,
நான் இருக்கும் நிலையிலேயே உன்னிடம் என்ன கேட்பேன்?
என்றும் நன்மை செய்து துன்பம் வாங்கும் நெஞ்சம் கேட்பேன்!
கடலளவு கிடைத்தாலும் கலங்க மாட்டேன்
அது கையளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்!
என் நிழலில் கூட அனுபவத்தின் சோகம் உண்டு!!
வெறும் பாடல் எழுதுவது புத்தகம் எழுதுவது தான் அவர் திறமை என்று நீங்கள் நினைத்தால், கண்ணதாசனின் முழு பரிமாணத்தை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. அவர் தமிழ் மிக எளிமையாக இருக்கும், ஆனால் அவரது திறமை புரிந்து கொள்வதற்கு மிகவும் கடினம்.
எப்படி முடிப்பது என்று ஒரு திரைப்படத்தை முடிக்க தெரியாமல் டைரக்டர் தவித்த போது, தனது பாடல் மூலம் அந்த திரைப்படத்தை முடித்து வைத்து, ஒரு பாடலை Climax ஆக்கி, அந்த திரைப்படத்தை மிகப்பெரிய வெற்றி படமாக மாற்றியவர் ஒரே ஒருவர் தான்!
அந்த படம் பெயர் அபூர்வ ராகங்கள். அதன் டைரக்டர் கே பாலச்சந்தர்.
ஒரு அம்புலிமாமா கதை, விக்ரமாதித்தன் 1000 ஆவது கதை ஒன்று. ஒரு தந்தையும் மகனும் வளர்ந்த ஒரு பெண்ணையும், அவள் சிறு வயது மகளையும் மாற்றி கல்யாணம் செய்து கொள்கிறார்கள். இது பாலச்சந்தர் சொன்னது.
ஆனால் உண்மையில் அது ராமதாஸ் என்று ஒரு நபர், தன்னுடைய கதை திருடப்பட்டது என்று கோர்ட் படி ஏறி, நிரூபணம் செய்து அந்த கேசில் வெற்றி பெற்று நஷ்ட ஈடு வாங்கினார்!

யார் எழுதிய கதையோ, ஆனால் அந்த கதை ஒரு கண்றாவி என்று கவிஞர் அவ்வளவு லேசில் ஆர்வமாக பாட்டு எழுதவில்லை!! டைரக்டருக்கு கோபம்.
ஆனால் திடீரென்று ஒரு நாள், எக்கச்சக்க பாடல்கள் எழுதிவிட்டார். எதை எடுப்பது என்று தெரியாத அளவுக்கு பாடல்கள்.
அதில் ஒன்றுதான், " கே ஜே யேசுதாஸ் பாடும் அதிசய ராகம் ஆனந்த ராகம் என்ற பாடல்!
இதற்குப் பிறகு அந்த படத்தின் டைட்டில் சாங், " ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம் " என்ற பாடல் மூலம், டைரக்டரையே அவர் நிலைப்பாடு சரி இல்லை என்று சொல்லுவார்.
நாளை இந்த படம் ஓடுமா ஓடாதா? தவித்துக் கொண்டிருக்கும் டைரக்டர்!
நாளை பொழுது ஒன்று நமக்கெனவாக
அதை நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க
எந்த வேதனையும் மாறும் மேகத்தை போல!
டைரக்டர் பாலச்சந்தர், கற்பனையில் கோளாறு உள்ளது என்பதை, " சிலர், கற்பனை சந்தோஷத்தில் அவரவர் கவனம்!" என்று டைரக்டரையே சாடி இருப்பார்!
அந்தப் படத்தின் மூலம் தமிழ்நாட்டுக்கு ரஜினிகாந்த் கமலஹாசன் இன்று இரு பெரிய நடிகர்களை கொண்டு வந்ததே அவர்தான்!!
சரி எப்படி முடிப்பது என்று தெரியாமல் இருக்கும்போது, கடைசி காட்சியில் ஒரு பாடல் வைக்கிறார் டைரக்டர். இப்போது படத்தை முடிக்கும் பொறுப்பு கண்ணதாசன் கையில் உள்ளது.
கண்ணதாசனுக்கு திருப்பதி வெங்கடாஜலபதி கடவுள் மீது அளவு கடந்த பக்தி.
கடைசி காட்சியில் கணவன் ரஜினிகாந்த் வந்து விடுகிறான்.
தலைவன் திருச்சானூர் வந்து விட்டான்,
தாயார் தர்ம தரிசனத்தை தேடுகிறாள்.
ஸ்ரீவித்யா கீழே இருப்பார். ரஜினிகாந்த் படிகள் மேலே இருப்பார். திருப்பதியை வைத்து இந்த இடத்தில் யாராவது பாட்டு எழுத முடியுமா?
முடியும் என்று நிரூபித்து இருப்பார் கண்ணதாசன்.
அதாவது கணவனும் மனைவியும் சேர வேண்டும் என்று முடிப்பார்.
அடுத்தது தந்தை மீது கோபம் கொண்ட கமலஹாசனை சமாதானப்படுத்த,
தந்தை பழனிமலை வந்துவிட்டான்
வா முருகா , என்று முருகனைப் பற்றி பாடியிருப்பார்.
நாராயணன் சிவன் முருகன் மூவரை வைத்து, ஒரு சிக்கலான குடும்பக் கதைக்கு தீர்வு சொல்வது, எவ்வளவு கஷ்டம் தெரியுமா?
அப்போது பாலச்சந்தருக்கு அதுதான் ஆரம்பம். பாலச்சந்தர் மட்டுமல்ல, அவர் உருவாக்கிய கமலஹாசன் ரஜினிகாந்த் எல்லோருக்கும் ஆரம்பம் பிரமாதமாக அமைந்து போவதற்கு கண்ணதாசன் தான் காரணம்.
கண்ணதாசன் இல்லை என்றால் அந்த படம் தோல்வி. அந்தப் படம் தோல்வி அடைந்தால் ரஜினிகாந்த் மீண்டும் பெங்களூருக்கு பஸ் ஏறி இருப்பார். பாலச்சந்தருக்கு மூன்று முடிச்சு எடுக்கும் ஆவல் வராது!!
சில காலம் கழித்து அதே பாலசந்தர் படத்தில் மறக்காமல், (படம் : அவர்கள் ), " கதையை மட்டும் எழுதிவிட்டாள், ( பாலச்சந்தர்) முடிப்பதற்கு தெரியவில்லை!" என்று எழுதி இருப்பார்.
அவள் எழுதும் கவிதைகளை (கண்ணதாசன்) விதி புகுந்து திருத்துதம்மா!
அந்தப் பாடல் இதுதான் :
அங்கும் இங்கும் பாதை உண்டு
இன்று நீ எந்த பக்கம்?
ஞாயிறு உண்டு திங்கள் உண்டு எந்த நாள் உன் நாளோ?
ராஜேஷ் சத்யா உண்டு , மற்றவர்கள் பதிலும் உண்டு, இன்று நீங்க எந்த பக்கம்?
இதைவிட ரொம்ப முக்கியமான நான்கு வரிகள்
கண்ணா என்றாள், முருகன் வந்தான்
முருகா என்றாள், கண்ணன் வந்தான்!
நல்லவேளை நான் முருகன் கண்ணன் இருவருக்கும் பக்தன்!!
அடுத்து அதே பாலச்சந்தரின் சிஷ்யர், விசு அவர்கள் வாழ்க்கையில் திரைப்படம் எடுக்கிறார்!!
கதையை கவிஞரிடம் சொல்கிறார்.
அய்யா, பெண்கள் வேலைக்கு போவதால் ஏற்படும் பிரச்சனையை மையமாக வைத்து ஒரு படம் எடுத்துள்ளேன். இன்று சமுதாயத்தில் உருவெடுத்திருக்கும் முக்கிய பிரச்சனை! ( அப்போதுதான் தமிழ்நாட்டில் பெண்கள், பெரிய அளவில் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார்கள் )
கதையை கேட்டுக் கொண்ட கண்ணதாசன், பல வேலைகளுக்கு நடுவில் கவனம் செலுத்தியதால் விசுவுக்கு முதலில் திருப்தி இல்லை!! இசையமைப்பாளர் MS விஸ்வநாதனின் பெயரும் விசு!!
ஆனால் கதை முழுவதும் கேட்ட பிறகு,
கடகடவென்று பல வரிகள் சொல்கிறார்.
" குடும்பம் ஒரு கதம்பம், பல வண்ணம் பல வண்ணம், தினமும் மதி மயங்கும் அது எண்ணம், தேவன் ஒரு பாதை தேவி ஒரு பாதை, குழந்தை ஒரு பாதை காலம் செய்யும் ஒரு லீலை!"
விசு : பாடல் நன்றாக இருக்கிறது, ஆனால் நான் குழந்தை பற்றி கதையில் சொல்லவில்லையே!
கண்ணதாசன் : கணவன் வேலை இல்லாததால், மனைவி மட்டும் பாதிக்கப்படவில்லை மகளும் பாதிக்கப்படுகிறாள். அப்பா அம்மா இல்லாமல் குழந்தை அனாதையாக வளர்கிறது. இதை உணர்த்துவதற்கு தான், " குழந்தை ஒரு பாதை " என்று சொன்னேன்!
கடைசியில் அவர் முடிக்கும் ஹைலைட் :
இந்தியா மாறிக் கொண்டிருக்கிறது. சமூகம் மாறிக் கொண்டிருக்கிறது. பொருளாதாரம் மாறிக் கொண்டிருக்கிறது. இரண்டு பேர் வேலை செய்தால் தான் வாழ்க்கை ஓட்ட முடியும் என்ற நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது! இதை திருக்குறள் மாதிரி இரண்டே வரிகளில் சொல்கிறார்!
" பொருளாதாரத்தில் பொருள்தானா தாரம் இன்று!" இந்த வரிகளுக்கு நான் கண்டிப்பாக சமூக பிரச்சனையை அருமையாக சொன்னதாக தேசிய விருது கொடுப்பேன்!! கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகளையே, " குடும்பம் ஒரு கதம்பம்" என்று டைட்டில் வைத்து விட்டார், விசு!! இப்படி ஒரு சாதாரண நடுத்தர வருட சமூகப் பிரச்சனை படம், வெற்றி படமாக மாறியது என்று சொல்லவும் வேண்டுமா?
கண்ணதாசன் விருதுகளுக்கு அப்பாற்பட்டவராக இருக்கிறார்!!
பெண்கள் பிரச்சனை பற்றி பேசும் பொழுது, அப்பொழுது கூட ஆன்மீகம் பேசுவார்!!
கோடு போட்டு நிற்கச் சொன்னான் சீதை நிற்கவில்லையே
சீதை மட்டும் நின்று இருந்தால் ராமன் கதை இல்லையே
அடி என்னடி உலகம் ? இதில் எத்தனை கலகம் ?
பந்தம் என்பது சிலந்தி வலை பாசம் என்பது பெருங்கவலை, சொந்தம் என்பது சந்தை அடி இதில் சுற்றம் என்பது மந்தையடி!!
ஆன்மீகத்தை சர்வ சாதாரணமாக கையாளும் அவர், நினைத்தாலே இனிக்கும் படத்தில், " ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும் " என்று சொல்லுவது, பகலில் தான் மேல் ஜாதி கீழ் ஜாதி, காமம் என்று வந்து விட்டால் ஜாதிகள் இல்லையடி பாப்பா " இன்று இரண்டு வரிகளில் சொல்லி இருப்பார்!
அதேபோல் நேரடியாக ஆன்மீகம் எழுதுவதிலும் வல்லவர்!!
பரஞ்சோதி முனிவர் என்பதை எழுதிய திருவிளையாடல் காப்பியத்தை படமாக எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து, டைரக்டர் ஏபி நாகராஜன் எடுத்த படம் தான் திருவிளையாடல்!
அதில் பாண்டிய நாட்டுக்கு வரும் ஒரு இசை பாகவதர், ஹேமநாத பாகவதர் என்பவர் ஆணவத்தை அடக்கி கடவுளே பாடி பாண்டிய நாட்டை காப்பாற்றுவது போல் கதை!
இந்தப் பாடல் தான் மிக முக்கியமான பாடல். ஒரு பாடலில், பல கர்நாடக ராகங்கள் வரவேண்டும். ஆனால் அந்த கர்நாடக ராகங்களின் பெயர்கள் பாடலில் அர்த்தத்தோடு இணைய வேண்டும். ஒரு கர்வம் இருக்க வேண்டும். அது ஒரு ராஜசபையில் நடக்கும் பாட்டு!
டைரக்டர் ஏபி நாகராஜன் சொல்லி முடித்தும் கண்ணதாசனுக்கு பாடல் வரிகள் வரவே இல்லை. ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் சென்று ஒரு நாள் முழுக்க வரவில்லை!!
பொறுத்திருந்து பார்த்த ஏ பி நாகராஜன், " என்ன கவிஞரே? உங்களுக்கு ஒரு நாள் போதுமா? பாடல் எழுதுவதற்கு? என்று சலிப்பாக கேட்டுள்ளார்!!
உடனே கவிஞர் முகத்தில் ஒரு மின்னல்!! டைரக்டர் சொன்ன அந்த வரிகளையே பாடல் முதல் வரிகள் ஆக்கி, " ஒரு நாள் போதுமா இன்று ஒரு நாள் போதுமா என்று எல்லோரும் மறக்க முடியாத ஒரு தமிழ் பாடலை எழுதி விட்டார்!!
இசை கேட்க எழுந்தோடி வருவார் அன்றோ!
எனக்கு இணையாக தர்பாரில் எவரும் உண்டோ!
கலையாத மோகன சுவைதான் அன்றோ
கானடா இசை தெய்வம் நானடா! போன்ற கர்நாடக ராகங்களை அர்த்தத்தோடு பாடலில் எழுதி இருப்பார் கண்ணதாசன்!
ராகங்களைப் பற்றி நன்கு தெரிந்து உணர்ந்த ஒரு கவிஞர் மட்டும்தான் இப்படி எல்லாம் பாடல் எழுத முடியும்!
கௌரி மனோகரியை கண்டேன் ( கௌரி மனோகரி என்பது அற்புதமான ராகம் )
ஒரு ஆடவன் வடிவத்திலே
என்று மாறிய நவீன உலகத்தில் ஒரு பெண்மணி பாடும் போது, அவள் கொஞ்சம் யோசிக்கிறாள்! இன்று போல் இல்லை அந்த காலம். உலகம் என்ன சொல்லும் என்று யோசிக்கும் போது,
உலகத்தில் சிலநூறு எழுத்து
ஆனால் உறவுக்கு பல கோடி கருத்து
உன் வாழ்க்கை நீயாக நடத்து
இதில் ஊர் என்ன சொன்னாலும் திருத்து, என்று ஒரு அற்புதமான பாடல் கண்ணதாசன் எழுதியிருப்பார் !
அவரே, " பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன? 16 பாட சுவையானது " என்று ராகங்கள் 16 உருவான வரலாறு நான் பாடும்போது அறிவாய் அம்மா " என்று அதே கண்ணதாசன் எழுதுவதில் இருந்தே, எழுத்து மட்டும் இல்லை இசையில் கூட அவருக்கு ஒரு மிகப்பெரிய புரிதல் உள்ளது என்று புரிந்து கொள்ளலாம்!
ஒரே படம், ஒரே ஒரு படம் மூலம் கண்ணதாசன் மொத்த திறமைகளையும் சொல்ல முடியுமா ?
முடியும்!
அது என்ன படம்?
அதுதான் கர்ணன்!
மதம் கொண்ட மதயானை உயிர் கொண்டு நடந்தால், இணை ஏதும் கேட்காமல் நான் இங்கு மெலிந்தேன்! கண்ணுக்கு குலமேது என்ற பாடல் ( இது ஒரிஜினல் சுத்த தன்யாசி ராகம் )
பாலில் இருந்து நெய் பிறக்கும்!
பரம்பொருள் இருந்து உயிர் பிறக்கும்!
இதில் மேலென்றும் கீழ் என்றும் எங்கிருக்கும்?
கண்ணுக்கு குலமேது கர்ணா? கருணைக்கு நிகர் ஏது ? கொடுப்பவர் எல்லாம் மேல ஆவார், கைநீட்டி கேட்பவர் எல்லாம் கீழ அவார்! தர்மத்தின் தாயே கலங்காதே!!
மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா, மானிடர் ஆன்மா மரணம் எய்துவதில்லை.
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது, வல்லவன் வகுத்ததடா, கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா!
தாய்க்கு நீ மகன் இல்லை, தம்பிக்கு அண்ணன் இல்லை, ஊர் பழி ஏற்றாயடா, நானும் உன் பழி கொண்டேனடா,
கண்ணனே ஆக்கினான், கண்ணனே பார்க்கிறான், கண்ணனே கொலை செய்கின்றான், காண்டீபம் எடுக்க, உன் கை வண்ணம் தெரிய இக்களவெல்லாம் சிவக்க!!
புண்ணியம் இது என்று உலகம் சொன்னால், அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே!!
இந்த கோரா தமிழ் பதிவின் புண்ணியம் கண்ணதாசனுக்கே!
கே ஜே ஏசுதாஸ் சுதா ரகுநாதன் போன்ற பெரிய பெரிய பாடகர் எல்லாம் இலவசமாக கச்சேரி செய்வார்கள். ராம நவமி பக்திக்காக அந்த சிறிய மண்டபத்தில் கச்சேரி நடக்கும். தரையில் உட்கார்ந்து தான் கேட்க வேண்டும்!
பிராமண மாமிகள் மாமாக்கள் மட்டும் தான் வருவார்கள். கர்நாடக இசை கச்சேரி என்பதால் பெரிய கூட்டம் வராது!
கச்சேரி ஆரம்பித்தது.
இரண்டு மூன்று பக்தி பாடல்கள் பாடிய என் எஸ் விஸ்வநாதன் மற்றும் எல் ஆர் ஈஸ்வரி, பின்பு ஒரு சில திரைப்பட பாடல்கள் பாடினார்கள். ஆனால் எல்லாம் சுவாமி பாட்டு தான்!
அப்போது எம் எஸ் விஸ்வநாதன் திடீரென்று நிறுத்தி, " இந்தப் பாடலை நான் எல்லா மேடைகளிலும் பாடுவேன். காரணம் கண்ணதாசனுக்கு நான் வாக்கு கொடுத்து விட்டேன். நீ இதை கண்டிப்பாக பாட வேண்டும் எனக்கு கட்டளையிட்டுள்ளார்!
இந்த விழா ஒரு மிகப்பெரிய மகான் பற்றிய விழா என்றாலும், இந்த மகா பெரியவருக்கும் கண்ணதாசனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அது எனக்கு தெரியும். அதனால் இந்த பாடலை நான் பாடுகிறேன், என்று அவரே இசையமைத்து ( அன்று நான்கைந்து இசை கருவிகள் தான் கொண்டு வந்தார் ), அவரது குரலில், " புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே!" என்ற பாடலை பாடி முடித்தவுடன்,  ஆயிரக்கணக்கில் மக்கள், எல்லா தரப்பு மக்களும், இப்படி ஒரு கூட்டத்தை  மேற்கு மாம்பலத்தில் அயோத்தியா மண்டபத்தில் பார்த்ததே இல்லை! அப்படி ஒரு கூட்டம் சேர்ந்து விட்டது.
தமிழையும், பக்தியையும் ஆன்மீகத்தையும் பாமரனுக்கும் எடுத்துச் சென்ற கண்ணதாசனின் தெய்வீக தமிழ் திறமை .

 

Kalimuthu Raj
 

Leave a Reply