பெண்களின் புகைப்படங்களை பயன்படுத்தி பணமோசடி - பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை
இலங்கையர்களை இலக்குவைத்து சமூக வலைத்தளங்களில் முன்னெடுக்கப்படும் மோசடி குறித்து இலங்கை கணனி அவசரநிலை ஆயத்தக்குழு (SLCERT) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த சட்டவிரோத நடவடிக்கை இந்தியாவிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக இதுவரை திரட்டப்பட்ட தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த மோசடி நடவடிக்கை சமூக வலைத்தளங்கள் மற்றும் குறுஞ்செய்தி செயலிகள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
மோசடியாளர்கள் பாதிக்கப்படுபவர்களின் தகவல்களை முன்னதாகவே திரட்டி பெண்களின் புகைப்படங்களைக் கொண்ட இன்ஸ்டகிராம் கணக்குகள் மூலம் 'Hi' என குறுந்தகவல் (மெசேஜ்) அனுப்பி மோசடி வலையில் சிக்கவைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து சில நாட்கள் நம்பிக்கையை ஏற்படுத்திய பின்னர், அவர்களின் அந்தரங்கப் படங்கள் அல்லது காணொளி அழைப்புகளைப் பதிவுசெய்து, பணத்தைத் தராவிட்டால் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பிவைப்பதாக மிரட்டிப் பணம் பறித்து வருகின்றனர்.
எனவே, அறிமுகமில்லாத சமூக வலைத்தளக் கணக்குகள் அல்லது தொலைபேசி இலக்கங்களிலிருந்து வரும் அழைப்புகள் மற்றும் செய்திகளுக்குப் பதிலளிக்கும் போது பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
முகநூல் மெசஞ்சர், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் மக்களின் நிர்வாண புகைப்படங்களையும் காணொளிகளையும் வெளியிடுவதாக அச்சுறுத்தி, அவர்களை ஏமாற்றும் மோசடி மீண்டும் பரவி வருவதாகவும், இது தொடர்பாக ஏராளமான முறைப்பாடுகள் தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும் இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு மன்றம் தெரிவித்துள்ளது.






















