தொண் டர்களின் ஆரவாரத்தால் குலுங்கியது மதுரை
சினிமா
1977-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. அந்தத் தேர்தலில் அருப்புக் கோட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்.ஜி.ஆர். வெற்றி பெற்றார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன், மதுரை மேம்பாலம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வந்தார். சிலையின் பீடமே 10 அடி உயரம் இருக்கும். அதற்கு மேலே சுமார் 8 அடி உயரத்தில் அண்ணா சிலை கம்பீரமாக நிற்கும்.
இப்போது இருப்பது போல சிலைக்கு மாலை அணிவிக்க படி வசதி எல்லாம் அப்போது கிடையாது. எம்.ஜி.ஆர். வரப்போகிறார் என்பதை அறிந்ததும் அந்தப் பகுதியே ஜன சமுத்திரமாக காட்சியளித்தது. மாலை அணிவிப்பதற்காக வந்த எம்.ஜி.ஆர்., காரை விட்டு இறங்கியதும் சில தொண்டர்கள் எங்கிருந்தோ மர ஏணி ஒன்றைக் கொண்டு வந்தனர். தொண்டர்கள் சிலர் ‘‘நீங்கள் ஏணியில் ஏறி சிரமப்பட வேண்டாம். மாலையை தொட்டுக் கொடுங்கள். நாங்கள் சிலைக்கு அணிவிக்கிறோம்’’ என்று எம்.ஜி.ஆரிடம் கூறினர்.
அதை எல்லாம் எம்.ஜி.ஆர். கவனிக் காமல், சிலையையும் ஏணியையும் ஒரு பார்வை பார்த்தார். ‘எப்படி ஏறலாம்? எப்படி மாலையை தனது அண்ணனுக்கு அணிவிக்கலாம்? ’ என்று அவரது மனம் கணக்கு போட்டது. இதெல்லாம் சில விநாடிகள்தான். உடனே, வேகமாக ஏணியில் ஏறி சிலையின் குறுகலான பீடத்துக்கு சென்று பிடிமானத்துக்காக சிலையை கைகளால் தொட்டபடி நின்று கொண்டார். கொஞ்சம் தவறினாலும் கீழே விழும் அபாயம் உண்டு. என் றாலும் துணிச்சலாக எம்.ஜி.ஆர். ஏறிவிட்டார்.
சிலைக்கு பின்னால் இருந்து ஒருவர் பெரிய மாலையை கொடுக்க அதை லாவகமாக தூக்கி அண்ணா சிலை யின் கழுத்தில் சரியாக விழும்படி எம்.ஜி.ஆர். அணிவித்தபோது, தொண் டர்களின் ஆரவாரத்தால் மதுரை மாநகரமே குலுங்கியது.
- தி இந்து























