நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்த விருந்த 91 லட்சம் ரூபா மதிப்பிலான 7 லட்சம் வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்
இலங்கை
ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் கடற்கரை வழியாக இலங்கைக்குக் கடத்த முயன்ற 91 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டுச் சிகரெட்டுகளை மெரைன் பொலிஸார் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் கடற்கரை வழியாக இலங்கைக்கு நாட்டுப் படகுகள் மூலம் சட்டவிரோதப் பொருட்கள் கடத்தப்படவுள்ளதாக மெரைன் பொலிஸார் மற்றும் கீழக்கரை சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில், இன்று அதிகாலை ஒரு மணி அளவில் அதிகாரிகள் அந்தப் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
புதுமடம் கடற்கரையில் சரக்கு வாகனம் ஒன்றிலிருந்து சில நபர்கள் மூட்டைகளை இறக்கிப் பதுக்கி வைத்திருப்பதை அதிகாரிகள் அவதானித்தனர்.
அதிகாரிகளைக் கண்டதும் கடத்தல்காரர்களில் சிலர் தப்பியோடிய நிலையில், மெரைன் பொலிஸார் ஒருவரை மடக்கிப் பிடித்தனர்.
அங்கு வைக்கப்பட்டிருந்த 35 சாக்கு மூட்டைகளைச் சோதனை செய்தபோது, அவற்றில் 7 லட்சம் வெளிநாட்டுச் சிகரெட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது.
7 லட்சம் வெளிநாட்டுச் சிகரெட்டுகள், சுமார் 91 லட்சம் ரூபாய், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு சரக்கு வாகனம் என்பன பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாகப் புதுமடம் மேற்குத் தெருவைச் சேர்ந்த முருகன் (38) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையில், இந்தச் சிகரெட்டுகளை இன்று அதிகாலை கடல் வழியாக இலங்கைக்குக் கடத்தத் திட்டமிட்டிருந்தது உறுதியானது.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை மெரைன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தப்பியோடிய ஏனைய நபர்களைத் தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.























