இரண்டாம் எலிசபெத் மகாராணியின் 100-வது பிறந்தநாள் - நினைவைப் போற்ற புதிய அறக்கட்டளை
இலங்கை
மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் 100-வது பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு, அவரது பொதுச் சேவையை கௌரவிக்கும் வகையில் புதிய அறக்கட்டளை ஒன்றைத் தொடங்க பிரித்தானிய அரசு தீர்மானித்துள்ளது.
பிரித்தானியாவின் நீண்டகால ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத், 2022-ஆம் ஆண்டு தனது 96-வது வயதில் காலமானார்.
இந்நிலையில் ஏப்ரல் 21-ஆம் திகதி அவரது 100-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவாக ‘ராணி எலிசபெத் அறக்கட்டளை’ (Queen Elizabeth Trust) எனும் தொண்டு நிறுவனம் நிறுவப்படவுள்ளது.
இந்த அறக்கட்டளையைத் தொடங்குவதற்காக பிரித்தானிய அரசாங்கம் ஒருமுறை மட்டும் வழங்கப்படும் நிதியாக 40 மில்லியன் பவுண்டுகளை ஒதுக்கியுள்ளது.
மன்னர் மூன்றாம் சார்லஸ் இந்த அறக்கட்டளையின் காப்பாளராக (Patron) செயல்படவுள்ளார்.
இதேவேளை, பிரித்தானியாவில் சிதைந்து கிடக்கும் பொது இடங்களைச் சீரமைத்தல், பூங்காக்கள் மற்றும் சமூகக் கூடங்களை மேம்படுத்துதல் போன்ற பணிகளில் இந்த அறக்கட்டளை கவனம் செலுத்தும்.
இதேவேளை, ராணியின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு லண்டனில் பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த முக்கிய தினத்தில் மற்றொரு அறிவிப்பாக, ராணியின் உத்தியோகபூர்வ வாழ்க்கை வரலாற்றை (Official Authorized Biography) எழுதும் பொறுப்பு விருது பெற்ற வரலாற்று ஆய்வாளர் டாக்டர் அன்னா கேயிடம் (Dr Anna Keay) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 1936-இல் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் நினைவாக விளையாட்டு மைதானங்கள் உருவாக்கப்பட்டதைப் போலவே, இந்த அறக்கட்டளையும் பிரித்தானிய மக்களின் அன்றாட வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு ‘வாழும் நினைவகமாக’ அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.






















