எரிசக்தி அமைச்சர் பதவி விலகல் குறித்து கூட்டு எதிர்க்கட்சி அறிக்கை வெளியீடு
இலங்கை
நிலக்கரி கொள்வனவு தொடர்பான விசாரணைகள் காரணமாக அண்மையில் பதவி விலகிய எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அந்த அமைச்சின் செயலாளராக இருந்த உதயங்க ஹேமபால ஆகியோரின் பதவி விலகல் தொடர்பாக கூட்டு எதிர்க்கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, குறித்த அறிக்கையில் ,
ஒரு விடயம் தொடர்பாக அமைச்சர் ஒருவர் தமது பதவியை இராஜினாமா செய்வது என்பது, அந்த விவகாரத்தின் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டதாகவே கருதப்படும்.
எவ்வாறாயினும், ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகளுக்காக அமைச்சர் பதவி விலகியமை எந்த வகையிலும் அவசியமானதல்ல எனவும், அது ஒரு போலிச் சாக்குப்போக்கு எனவும் கூட்டு எதிர்க்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, குறித்த நிலக்கரி ஒப்பந்தம் வழங்கப்படும் போது, சம்பந்தப்பட்ட நிறுவனம் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை எனவும் இவ்வாறான ஒரு நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்க எடுத்த தீர்மானத்தின் கூட்டுப் பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும் என அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.























