• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டித்வா புயலால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு வழங்குதல் பணிகளைதுரிதப்படுத்துமாறு பிரதமர் வலியுறுத்து

இலங்கை

‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு வழங்குதல் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை, மாவட்ட ரீதியில் துரிதப்படுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் மாகாண சபைகளுக்கு ஏற்கனவே அனைத்து நிதி ஒதுக்கீடுகளும் வழங்கப்பட்டிருப்பதால், அனர்த்தச் சேதங்கள் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளின் முன்னேற்றத்தை ஆராயுமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

‘Rebuilding Sri Lanka’ திட்டத்தின் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும் நோக்கில், பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்குத் தெளிவுபடுத்தும் வகையிலான விசேட கூட்டம் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றது.

‘டித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்களுக்காக 500 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அபிவிருத்திப் பணிகள் அனைத்தும் 2026ஆம் ஆண்டு இறுதிக்கு முன்னர் நிறைவடைய வேண்டுமென்றும் குறிப்பிட்ட பிரதமர், இழப்பீடு வழங்கல் தாமதமாவதற்குப் பிரதேச மட்டத்தில் நிலவும் சிக்கல்கள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு ஆலோசனை வழங்கினார்.

‘டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களை மறுசீரமைக்கும் பணிகளுக்குச் சுமார் 3.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுமென மதிப்பிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஜி.எம்.ஆர்.டி. அபோன்சு தெரிவித்தார்.

அதற்கேற்ப வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு, விவசாயம் மற்றும் கால்நடை வளங்கள், மீன்பிடித்துறை, தொழில் மற்றும் வாழ்வாதாரம், நீர்ப்பாசனம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு இழப்பீட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர குறிப்பிட்டார்.

25,000 ரூபா கொடுப்பனவுகளில், இதுவரை 99 வீதமானவை நிறைவடைந்துள்ளதோடு, மீள்குடியேற்றத்திற்கான 50,000 ரூபா கொடுப்பனவு வழங்கல் 95 வீதமும் முடிவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 25,000 ரூபா வழங்குதல், அனர்த்தத்தினால் உயிரிழந்த ஒவ்வொருவரினது குடும்பத்திற்கும் 1 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்குதல், பெற்றோர் எவரையாவது அல்லது இருவரையும் இழந்த சிறுவர்களுக்கான இழப்பீடு வழங்கல், விசேட தேவையுடைய பாதிக்கப்பட்ட நபர்களுக்கான இழப்பீடு வழங்கல், சேதமடைந்த விவசாயச் செயற்பாடுகளுக்கான இழப்பீடு வழங்கல், பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீள்குடியேற்றும் பணிகளைத்

துரிதப்படுத்துதல், புதிய வீடுகள் நிர்மாணிப்பதற்கான காணி ஒதுக்கீடு மற்றும் கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கைகளை விரைவாகப் பெற்றுக்கொள்ளுதல் ஆகிய விடயங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.
 

Leave a Reply