வின்னிபெக் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து
கனடா
கனடாவின் வின்னிபெக்கின் சென்ட்ரல் பார்க் (Central Park) சுற்றுப்புறத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கென்னடி வீதியில் உள்ள உயரமான அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் மதியம் 1:35 மணியளவில் தீப்பிடித்ததாக தீயணைப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், கட்டடத்திலிருந்து கரும்புகையும் நெருப்பும் வெளியேறுவதைக் கண்டனர்.
ஒரு குழுவினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட, மற்றொரு குழுவினர் கட்டடத்திற்குள் எவராவது சிக்கியுள்ளனரா என்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
சுமார் 2:20 மணியளவில் தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீயணைப்புத் துறையினர் மேற்கொண்ட சோதனையின்போது, ஒரு குடியிருப்பின் உட்புறத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதாக வின்னிபெக் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
உயிரிழந்த நபர் குறித்த மேலதிக விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. பாதுகாப்பு கருதி கட்டடத்தில் இருந்த மற்ற அனைத்து குடியிருப்பாளர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
இந்தத் தீ விபத்துக்கான காரணம் குறித்து புலனாய்வு அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
தீ மற்றும் புகையினால் சேதமடையாத பகுதிகளில் வசித்தவர்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், அதிக சேதமடைந்த பகுதிகளில் வசிப்பவர்கள் தற்காலிகமாக வெளியே தங்கியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.























