• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாரதிராஜாவை அழவைத்த - 16 வயதினிலே 

சினிமா

‘16 வயதினிலே’ படத்துக்காக 27 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் சப்பாணி கேரக்டருக்கு கமலை ஒப்பந்தம் செய்தோம். அந்தப் படத்தில் அதிகபட்ச சம்பளம் கமலுக்குத்தான். அடுத்து பரட்டை கேரக்டருக்கு ஆள் தேடியபோது ஒரு பைக்கில் வந்து இறங்கினார் ரஜினி. யார் என விசாரித்தபோது, ‘பாலசந்தர் படத்தில் நடிச்சிட்டு இருக்காரு’ என்றார்கள். கூர்மையான மூக்கு, நெற்றியில் விழும் தலைமுடி என்று துறுதுறுப்பாக இருந்தார். ‘இவர்தான் பரட்டை’ என முடிவு செய்தோம்.

‘சின்ன பட்ஜெட்டில் ஆர்ட் ஃபிலிம் மாதிரி ஒரு படம் பண்றேன்... பரட்டைன்னு ஒரு கேரக்டர், நீங்க பண்றீங்களா?’ என்றேன். ‘அப்படியா? எவ்ளோ எவ்ளோ எவ்ளோ சம்பளம் குடுப்பீங்க’ன்னு சுறுசுறுப்பு காட்டியவர், 5 ஆயிரம் ரூபாய் சம்பளம் கேட்டார். ‘அவ்வளவு முடியாது. ஒரு மூவாயிரம்...’ என நான் இழுக்க, ஓகே சொல்லிட்டார். கடைசியில் அதுவும் கொடுக்க முடியாம 2500 ரூபாய்தான் கொடுத்தோம். ஷூட்டிங்கில் நாலு வடை, இரண்டு இளநீர் வாங்கி கமலுக்கும் ஸ்ரீதேவிக்கும் கொடுப்போம். ரஜினிக்கு கொடுத்ததில்லை. நானும் ரஜினியும் சாதாரணமா வராண்டாவில் படுத்துத் தூங்குவோம். ரொம்ப சிம்பிளா இருப்பார்.

சப்பாணி கேரக்டருக்கு அரை டவுசர், நைந்துபோன சட்டைதான் காஸ்ட்யூம். கிடாரை வைத்துக்கொண்டு ரொமான்ஸ் செய்துகொண்டிருந்த காலத்தில், அழுக்கு உடை போட கமல் ஒப்புக்கொள்வாரா என்று எனக்கு சந்தேகம். இது தெரிஞ்சதும், பக்கத்தில் இருந்த கல்லில் சட்டையைத் தேய்த்து அழுக்காக்கி போட்டுக்கொண்டு, தலையைக் கலைத்துவிட்டு ‘இப்ப ஓகேவா’ன்னு கமல் கேட்டப்போ அசந்து விட்டேன். இதாவது பரவாயில்லை... ‘கோவணம் கட்டுவதுபோல ஒரு இடம் இருக்கு’ன்னு தயங்கித் தயங்கிச் சொன்னபோது, உடனே டிரஸ்ஸை கழற்றிப் போட்டு கோவணத்துடன் வந்து நின்றார். கமல் மாதிரி துணிச்சலான கலைஞனைப் பார்ப்பது அரிது.

‘இது நம்ம படம்’ என்று அக்கறை எடுத்துக்கொண்டு இசையால் படத்துக்கு ரத்தமும் நாளமுமாய் இருந்தவன் இளையராஜா. அவன் இல்லாவிட்டால் படத்தின் பாதி பெருமை குறைந்திருக்கும். என்னை இந்தப் படத்திலிருந்து நீக்க யார் யாரோ எத்தனையோ முயற்சிகள் செய்தும், நான்தான் இயக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்த என் முதலாளி எஸ்.ஏ.ராஜ்கண்ணு தான் என்னை விதையாக நட்டவர். என் மகன் தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தபோது என் வீட்டுக்கு வந்து அட்வான்ஸ் கொடுத்துச் சென்ற அந்த நாள் என் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. ஃபியட் காரில்தான் வருவார் முதலாளி. அவருக்கு மூன்று குழந்தைகள். படத்தை வாங்க யாரும் முன்வராதபோது முப்பாத்தம்மன் கோயிலில் உட்கார்ந்து, ‘கடவுளே... என் முதலாளியைக் காப்பாற்று’ என்று அழுதிருக்கிறேன். இப்படி பல சோதனைகளைச் சந்தித்து சாதனை செய்த படம்தான் ‘16 வயதினிலே’!

- அமலன்
 

Leave a Reply