மதுரோவின் கைது குறித்து முன்கூட்டியே பந்தம் கட்டி பணம் வென்ற அமெரிக்க இராணுவ வீரர் கைது
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்யும் அதிரடி இராணுவ நடவடிக்கையில் பங்கேற்ற அமெரிக்கச் சிறப்புப் படை வீரர் ஒருவர், அந்த நடவடிக்கை குறித்து முன்கூட்டியே பந்தயம் கட்டி சுமார் 4 லட்சம் அமெரிக்க டொலர் லாபம் ஈட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க இராணுவத்தில் 'மாஸ்டர் சார்ஜென்ட்' அந்தஸ்தில் பணியாற்றி வந்த கேனன் கென் வான் டைக் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
'ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்' எனும் பெயரில் மதுரோவைக் கைது செய்யத் திட்டமிடப்பட்ட இரகசிய நடவடிக்கையில் இவர் பங்கேற்றிருந்த நிலையில், தனக்குத் தெரிந்த முக்கிய இரகசியத் தகவல்களைப் பயன்படுத்தி 'பாலிமார்க்கெட்' (Polymarket) எனும் தளத்தில் பந்தயம் கட்டியுள்ளார்.
கடந்த டிசம்பர் 27 முதல் ஜனவரி 2 வரை இவர் மேற்கொண்ட 13 பந்தயங்கள் மூலம் கிடைத்த லாபத்தை, அதிகாரிகளின் பார்வையில் இருந்து மறைக்க கிரிப்டோகரன்சி கணக்குகளுக்கு மாற்றி மோசடி செய்ததாக அரசுத்தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
வட கரோலினாவில் உள்ள 'போர்ட் பிராக்' தளத்தில் பணியாற்றி வந்த இவர் மீது அரசாங்கத் தகவல்களைத் திருடுதல் மற்றும் மோசடி உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில், அமெரிக்க இராணுவத்தால் காரகாஸில் வைத்து கைது செய்யப்பட்ட நிக்கோலஸ் மதுரோ, தற்போது நியூயோர்க்கில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்குகளை எதிர்கொண்டு வருகின்றார்.
இந்தச் சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உலகம் முழுவதும் இவ்வாறான சூதாட்ட கலாசாரம் பரவி வருவது குறித்து கவலை வெளியிட்டார்.
ஒரு இராணுவ வீரர் தனது சொந்த நடவடிக்கையிலேயே பந்தயம் கட்டுவதை, பேஸ்பால் வீரர் பீட் ரோஸ் தனது சொந்த அணிக்கே பந்தயம் கட்டிய சம்பவத்துடன் ஒப்பிட்டு அவர் சாடினார்.
இதேவேளை, முறையற்ற வர்த்தகத்தை முன்கூட்டியே கண்டறிந்து அதிகாரிகளுக்கு அறிவித்ததாக 'பாலிமார்க்கெட்' நிறுவனம் தெரிவித்துள்ளதுடன், இச்சம்பவம் முன்னறிவிப்பு சந்தைகளை (Prediction Markets) முறைப்படுத்துவது குறித்த அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.





















