உலக விஷயங்கள் எது பற்றியும் கவலைப்படாத, இசை உலகம் மட்டுமே தெரிந்த மனிதர்
சினிமா
இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்பராமன் 'தேவதாஸ்’ படத்தின் இசைக் கோர்ப்பை முடிக்கும் முன்னரே இறந்துவிட, மீதி இருந்த இரண்டு பாடல்களையும் அவருடைய பிரதான உதவியாளர்களான விஸ்வநாதன் - ராமமூர்த்தி இருவரும்தான் முடித்துக்கொடுத்தார்கள். கலைவாணர் என்.எஸ்.கே., இவர்கள் இருவரையும் இணைத்து 'விஸ்வநாதன்- ராமமூர்த்தி’ எனப் பெயர் போட்டு தான் தயாரித்த 'பணம்’ படத்துக்கு இசையமைக்க வாய்ப்பு தந்தார். இசைக் குழு நண்பர்களான இருவரும் 'மெலடி பார்ட்னர்கள்’ ஆனது இப்படித்தான். ஒருகட்டத்துக்குப் பின்னர் ராமமூர்த்தி விலகிக்கொள்ள, அதன் பிறகு தமிழ்த் திரையிசையின் மன்னர், மந்திரி, தளபதி, பட்டாளம்... என அனைத்துமாக விஸ்வரூபம் எடுத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன்.
எம்.எஸ்.வி-யுடன் இசைபடப் பயணித்த புலவர் புலமைப்பித்தன், அவரை 'குழந்தை’ என்றே சொல்கிறார்...
''உலக விஷயங்கள் எது பற்றியும் கவலைப்படாத, இசை உலகம் மட்டுமே தெரிந்த மனிதர் அவர். 'காமராஜர் திரும்ப வந்துட்டார்’ என யாராவது சொன்னால், 'அப்படியா... எப்ப வந்தார்?’ என எட்டிப்பார்த்து விசாரிக்கும் அளவுக்கு வேட்டி கட்டிய வெள்ளந்திப் பிள்ளை. வீட்டில் இருந்து காலை 7 மணிக்கு ரிக்கார்டிங் தியேட்டர் வந்துவிடுவார்.வரும்போது பத்து, பன்னிரண்டு பேர் சாப்பிடும் அளவுக்கு, பஞ்சு பஞ்சாக அடுக்கிய இட்லிகளைக் கொண்டுவருவார். கூடவே குடத்தில் தண்ணீரும் வரும். 'வாத்தியார் அய்யா... சீக்கிரம் சாப்பிட வாங்க. இல்லைன்னா இட்லி எல்லாம் வித்துரும்’ என என்னிடம் சொல்லிவிட்டு, ரிக்கார்டிங் தியேட்டரே அதிரும்படி சிரிப்பார். அப்படி ஒரு பிள்ளை மனசு.
எம்.எஸ்.வி ஒரு பாடலுக்கு மெட்டு போட அமர்ந்தால், கண்ணிமைக்கும் நேரத்தில் மெட்டுக்கள் சரம் சரமாகக் கொட்டும். 'நேற்று இன்று நாளை’ படத்துக்காக நான் எழுதிய 'நீ என்னென்ன சொன்னாலும் கவிதை...’ பாடலுக்கு கடகடவென, அடுத்தடுத்து 10 மெட்டுக்கள் போட்டு எல்லோரையும் திணறடித்தார்.
அந்தப் பாடல் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் ஒலித்துக்கொண்டிருந்த சமயம், சிவாஜி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் ஒரு படத்துக்கு இசையமைக்க சிவாஜி வீட்டுக்குச் சென்றிந்தார் எம்.எஸ்.வி. எல்லோரிடமும் எப்போதும் கிண்டலாகப் பேசும் சிவாஜி, அன்று
எம்.எஸ்.வி-யிடம், 'அண்ணனும் (எம்.ஜி.ஆர்) மலையாளி, நீயும் மலையாளி... அதனால அண்ணனுக்கு நீ முத்து முத்தா பாட்டு போடுவியோ? ஏன் எனக்குப் போட மாட்டியலோ?’ எனக் கேட்க, அது கிண்டல் எனக்கூடப் புரியாமல் பதறிவிட்டார்
எம்.எஸ்.வி. 'அண்ணே... எனக்கு ஒரு சுக்கும் தெரியாது. மெட்டு போட்டது மட்டும்தான் நானு. பாட்டு எழுதினது எல்லாம் வாத்தியார் அய்யாதான். நீங்க அவர்கிட்ட கேட்டுக்கிடுங்க’ எனச் சொல்ல, சிவாஜி வாய்விட்டுச் சிரித்து எம்.எஸ்.வி-யைக் கட்டிப்பிடித்துக்கொண்டார்.
எம்.எஸ்.வி மிகச் சிறந்த இசையமைப்பாளர், பாடகர், நடிகர்... என்பதை எல்லாம் தாண்டி மிகச் சிறந்த பண்பாளர். 'தமிழ்த் திரையுலகில் இப்படி ஒரு மனிதர் இருந்திருக்கிறாரா?!’ என வியக்கவைக்கும் அளவுக்கு நயமான பண்புகளோடு வாழ்ந்திருக்கிறார்.
அப்போது தேவர் ஃபிலிம்ஸுக்குப் பிரதான இசையமைப்பாளர் திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன்தான். ஆனால், ஒரு புதுப் படத்துக்கு இசையமைப்பதற்காக, தேவர் தன் மடியில் பணத்தைக் கட்டிக்கொண்டு எம்.எஸ்.வி வீட்டுக்கு வந்து, 'தம்பி... நம்ம கம்பெனியோட புதுப் படத்துக்கு நீங்கதான் இசையமைக்கிறீங்க’ எனச் சொல்லி, பணத்தைக் கொடுத்திருக்கிறார். பதறிப்போன எம்.எஸ்.வி., 'மாமா (கே.வி.மகாதேவன்) இசையமைக்கும் கம்பெனிக்கு நான் இசையமைக்கிறது இல்லைனு முடிவுபண்ணியிருக்கேன். என்னால் இசையமைக்க முடியாது’ என மறுத்துவிட்டார். தேவர், எம்.எஸ்.வி-யின் அம்மா நாராயணி அம்மையாரிடம் சிபாரிசுக்குப் போக, அவரும் 'என் மகன் சொல்றதுதாங்கய்யா சரி. அவனை வற்புறுத்தாதீங்க’ எனச் சொல்லிவிட்டார். வளமான வாய்ப்பு கிடைக்கிறதே என வந்ததை எல்லாம் ஒப்புக்கொள்ளாமல், அதிலும் பண்பாடு காத்தவர் அவர்.
பாடல்களில் நல்ல வரிகள் எழுதிவிட்டால் சம்பந்தப்பட்ட கவிஞரைப் பாராட்டு மழையில் நனைத்துவிடுவார் எம்.எஸ்.வி. அதுவும் ஒருமுறை எனக்கு அவர் அளித்த பாராட்டு வாழ்நாளுக்கான வரம். 'வரம்’ படத்தில் ஒரு பாடலில் 'அட்சயப்பாத்திரம் பிச்சைக்கு வந்ததம்மா...’ என ஒரு வரி எழுதினேன். அதைப் படித்துவிட்டு நெகிழ்ந்துபோய், என் காலைத் தொட்டுப் பாராட்டினார். 'இப்படி நீங்க செஞ்சா, நான் இனி பாட்டு எழுத மாட்டேன்’ எனக் கடிந்துகொண்டேன். அதற்கு அவர், 'வாத்தியார் அய்யா.. இவ்வளவு நல்ல வரிக்கு இந்த மரியாதைகூட பண்ணலைன்னா, அப்புறம் நான் இசையமைச்சு என்ன பிரயோஜனம்?’ என்றார். அந்த அளவுக்கு வார்த்தைகள் மீது காதல்கொண்ட மகா கலைஞன் அவர். ஒரு பாடல் நன்கு வந்துவிட்டால் அதற்கான பெருமையை, 'வாத்தியார் அய்யா உங்களுக்கு 75 சதவிகிதம்; எனக்கு 25 சதவிகிதம்’ எனப் பிரிப்பார். அவ்வளவு குழந்தை மனசுக்காரர். ஆனால், அவர் பாட்டு போட்ட அளவுக்கு, துட்டு வாங்கியது கிடையாது.
10 ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் அதே உழைப்புதான்; 25 ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் அதே உழைப்புதான்.
டி.எம்.எஸ் போல பிரமாதமான பாடகர் கிடையாது. ஆனால், அவருக்கு அவ்வளவு சுலபத்தில் பாடல் ட்யூன் பிக்கப் ஆகாது.
டி.எம்.எஸ்., ட்யூன் கற்றுக்கொள்ளும் வரை விட மாட்டார் எம்.எஸ்.வி. திரும்பத் திரும்பச் சொல்லிக்கொடுப்பார். எம்.எஸ்.வி போட்ட மெட்டில் 70 சதவிகிதம் மட்டுமே பாடகர்கள் பாடுவார்கள். அவர் மெட்டில் வைத்திருக்கும் முழு சங்கதிகளோடு எவரும் பாடியது கிடையாது. ஆனாலும், அவர்கள் பாடி முடித்ததும் உச்சி முகர்ந்து பாராட்டுவார் எம்.எஸ்.வி.
அது அண்ணா அவர்கள் இறந்த சமயம். 'மணிப்பயல்’ படத்தில் அண்ணாவுக்காக நான் எழுதிய 'காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்... கொண்ட கருணையினால் எங்கள் நெஞ்சில் நிறைந்தான்...’ பாடலை அழுதுகொண்டே மெட்டு அமைத்துப் பாடினார் எம்.எஸ்.வி.
நாங்கள் இருவரும் இணைந்து எம்.ஜி.ஆர் அவர்களுக்கு உருவாக்கிய அ.தி.மு.க பிரசாரப் பாடல்களும், தொண்டர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். 1977-ம் ஆண்டு அ.தி.மு.க முதன்முறையாகப் போட்டியிட்ட தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காக, எம்.எஸ்.வி இசையமைக்க நான் எழுதிய, 'வாசலெங்கும் ரெட்டையிலை கோலமிடுங்கள்... காஞ்சி மன்னவனின் காலடியில் மாலையிடுங்கள்...’ பாடல், ஒலிக்காத ஊரே கிடையாது. 1984-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காக இரண்டே மணி நேரத்தில் ஒன்பது பாடல்களுக்கு மெட்டு அமைத்து, இரண்டு நாட்களில் பதிவுசெய்தும் அனுப்பிவைத்தவர் எம்.எஸ்.வி
- Vikatan EMagazin
























