இலங்கை/யாழ்ப்பாணம் சினிமா கலாச்சாரத்தின் பொற்காலமாகத் திகழ்ந்த திரையரங்குகளின் நினைவுகள்
இலங்கை
இலங்கை/யாழ்ப்பாணம் சினிமா கலாச்சாரத்தின் பொற்காலமாகத் திகழ்ந்த திரையரங்குகளின் நினைவுகள் உமாவின் வரைபில்…
1990-களுக்கு முந்தைய யாழ்ப்பாணம் சினிமா கலாச்சாரத்தின் பொற்காலமாகவும், யாழ்ப்பாணச் சமூக வாழ்க்கையின் முக்கிய பொழுதுபோக்கு மையங்களாக விளங்கின.
ராணி, ராஜா ,வெலிங்டன், லிடோ, வின்சர் ,றியோ, சாந்தி, ஹரன்,றீகல், மனோகரா, ஸ்ரீதர், மஹேந்திரா போன்ற பிரபலமான திரையரங்குகள் யாழ் நகரத்திலும், சுற்றுவட்டாரத்திலும் சினிமா ரசிகர்களின் கொண்டாட்ட இடங்களாக இருந்தன.
*ராணி ( யாழ் பேருந்து நிலையத்துக்கு முன்பாக மின்சார சபை வீதியில் அமைந்து இருந்தது,) இந்த திரைப்பட மாளிகையில் பல்கணி இல்லை. எம்.ஜி.ஆரின் நாளை நமதே , விவசாயி கமலஹாசனின் சகலகலாவல்லவன் சிவாஜி கணேசனின் சொர்க்கம், வி.பி.கணேசனின் 'நான் உங்கள் தோழன்' , 'புதிய காற்று', 'நாளை நமதே', 'வாடைக்காற்று' , 'பட்டணத்தில் பூதம்'& 'நீதி' போன்ற படங்கள் திரையிடப்பட்டன.திரைப்பட மாளிகையின் பெரும் பகுதி தகரத்தால் ஆனது, வசதிகள் குறைந்த திரைப்பட மாளிகை.
*ராஜா ( வின்சர் தியேட்டருக்கு முன்பாக ) எம், ஜி . ஆர் சரோசாதேவியுடன் இந்த திரைப்பட மாளிகைக்கு முன்பு வந்து சென்ற வரலாறும் உண்டு. திரையரங்கின் உள்ளே மாடிப் படிகளுக்கருகில் எம்.ஜி.ஆர் சரோசாதேவியுடன் இந்த திரையரங்கிற்கு வருகை தந்து இருந்த புகைப் படங்கள் வைக்கப் பட்டு இருந்தன இந்தப் பட மாளிகையில் மன்மத லீலை என்ற கமலஹாசனின் திரைப்படம் ஓடியது (அப்படம் வயது வந்தவர்களுக்கு மட்டும்)எஸ்,டி .தியாகராஜா. எம்.ஜி.ஆரின் நீரும் நெருப்பும்,காவல்காரன்,ஒளி விளக்கு போன்ற திரைப் படங்களும் சிவாஜிகணேசனின் பாபு என்ற திரைப் படமும் நீண்ட நாட்கள் ஓடி சாதனைகள் செய்த திரையரங்கம்.
*வெலிங்டன் ( ஸ்டான்லி வீதி , ஆஸ்பத்திரி பின் வீதி சந்தியில் அமைந்து இருந்தது,) திரைப்பட மாளிகையின் பெரும் பகுதி தகரத்தால் ஆனது, வசதிகள் குறைந்த திரைப்பட மாளிகை, இங்கு சிவாஜி வசந்தமாளிகை,ரஜனிகாந்த்தின் ஆயிரம் ஜென்மங்கள், ராஜீவின் ரயில் பயணங்கள்,போன்ற படங்கள் திரையிடப்பட்டன
வெலிங்டன் திரையரங்கில் படம் ரிலீஸ் ஆன நிலையில், கூட்டம் அலைமோதவே, அருகிலுள்ள லிடோ என்ற திரையரங்கிலும் திரையிடப்பட்டது. ஒரு பிரிண்ட்(திரைப்பட சுருள்) மட்டுமே இருந்த நிலையில் காரில் படச்சுருளை கொண்டு சென்று மாறி மாறி திரையிட்டனர். யாழ்ப்பாணம் திரையரங்கில் 207 நாள் ஓடி முதல் வெள்ளிவிழா கண்ட தமிழ்ப்படம் வசந்த மாளிகை எம்.ஜி.ஆர். சிவாஜிகணேசன் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் தான் இவ்வாறாக ஓடக்கூடியவை என்பதும் குறிப்பிடத்தக்கது,
*லிடோ ஸ்டான்லி வீதியில் அமைந்து இருந்தது, (ஸ்டான்லி வீதி கஸ்தூரியார் வீதி சந்தியில்அமைந்து இருந்தது) இந்த திரைப்பட மாளிகையில் பல்கணி இல்லை. அகலம் குறைந்த சிறிய பட மாளிகை. ஆகவே கட்டணத்தில் சிறு சலுகை காணப்பட்டது. லிடோ மற்றும் வெலிங்டன் ஆகியவை ஒரே முகாமைத்துவத்துவத்தின் கீழ் இருந்தது.இங்கு ஞானக் குழந்தை, பாட்டி சொல்லைத்த தட்டாதே, சிகப்பு ரோஜாக்கள், பாலு மகேந்திராவின் அழியாத கோலங்கள் போன்ற படங்கள் திரையிடப் பட்டன.
* றியோ ( யாழ் பழைய மாநகரசபை கட்டடத்தின் பின் பகுதியில் ( சுப்பிரமணியம் பூங்காவுக்கு முன்பாக கண்டி வீதியில் அமைந்து இருந்தது,) முத்துராமன், ஜெயலலிதாவின் "திக்குத் தெரியாத காட்டில்" என்ற திரையிடப்பட்டன.
* சாந்தி ( யாழ் போதனா வைத்திய சாலைக்கு முன்பாக உள்ள ஒழுங்கையில் அமைந்திருந்தது) இந்த திரைப்பட மாளிகையின் விசேடம் யாதெனில் சூப்பர் பல்கணி இங்கு இருந்தது, அதாவது பல்கணிக்கு மேல் இன்னுமொரு பல்கணி சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன் நடித்த பல படங்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடித்த திரைப்படங்கள் இங்கு திரையிடப்பட்டன.
* ஹரன் ( யாழ் போதனா வைத்திய சாலைக்கு முன்பாக உள்ள ஒழுங்கையில் அமைந்திருந்தது,) திரைப்பட மாளிகையின் பெரும் பகுதி தகரத்தால் ஆனது, வசதிகள் குறைந்த திரைப்பட மாளிகை.
பெரும்பாலும் பழைய படங்கள் தான் திரையிடப்பட்டன.
*றீகல் (யாழ் கோட்டைக்கு முன்பாக வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகில் அமைந்து இருந்தது) அநேகமாக ஆங்கிலப் படங்கள் தான் அதிகமாக இங்கு ஓடும். றீகல் திரையரங்கிலும் வின்சர் திரையரங்கிலும் சில சந்தர்ப்பங்களில் ஒரே படம் இரு பட மாளிகைகளிலும் 30 நிமிட இடைவெளி விட்டு ஓடும். ஜேம்ஸ் பாண்ட் 007, புரூஸ்லி போன்றோரின் திரைப் படங்களுக்கு இந்த திரையரங்குகளில் இளைஞர்கள் அலை மோதும்
*வின்சர் (கஸ்தூரியார் வீதியில் அமைந்து இருந்தது) யாழ்ப்பாணத்தில் இருந்த மிகப் பிரம்மாண்டமான கூடிய இருக்கைகள் கொண்ட பெரிய திரைப் பட மாளிகை இதுவாகும்.இங்கு சிவாஜி கணேசனின் பைலட் பிரேம் நாத் , சுதாகரின் நிறம் மாறாத பூக்கள், கமலஹாசனின் மூன்று முடிச்சு, வாடைக் காற்று என்ற ஈழத்து தமிழ் திரைப் படம் போன்ற திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
* மனோகரா ( கே.கே எஸ் வீதியில் நாவலர் வீதி சந்தியில் அமைந்திருந்தது) "A" சான்றிதழ் பெற்ற மிகச் சிறந்த , வசதிகள் கொண்ட திரைப்பட மாளிகை இதுவாகும், இங்கு மிகப் பெரிய கார் தரிப்பிடம் உண்டு.இங்கு அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் திரையிடப்படது.
* ஸ்ரீதர் ( ஸ்டான்லி வீதியில் ஆரியகுளம் சந்திக்கு மிக அருகில் உள்ள புகையிரத்தைக் கடவைக்கு அருகில் அமைந்து இருந்தது,) இந்த திரைப்பட மாளிகையில் சிவாஜி கணேசனின் கௌரவம், எம்.ஜி .ஆரின் மீனவ நண்பன். ஜெய் சங்கரின் திரைப்படம் திரையிடப்படது.
* மஹேந்திரா (யாழ் சுண்டிக்குளி வீதியில் யாழ் பரியோவான் கல்லூரிக்கு முன்பாக அமைந்து இருந்தது)பின்னர் இந்த திரைப்பட மாளிகை கட்டடத்தை யாழ் பரியோவான் கல்லூரியே வாங்கி கல்லூரி உடைமையாக்கிக் கொண்டது.
இவை தவிர யாழ்ப்பாண நகரத்துக்கு வெளியே
1.இணுவில் - காளிங்கன் திரைப் பட மாளிகை (நியூ காளிங்கன் )
2.நெல்லியடி லக்சுமி திரையரங்கு , மஹாகாத்மா திரையரங்கு.
3. சாவகச்சேரியில் தேவேந்திரா திரையரங்கு , வேல்ஸ் திரையரங்கு.
4. சுன்னாகத்தில் நாகம்ஸ் திரையரங்கு
5. காங்கேசன்துறையில் யாழ் திரையரங்கு , ராஜநாயகி திரையரங்கு.
6.வல்வெட்டித் துறையில் யோகநாயகி திரையரங்கு , ரஞ்சனா திரையரங்கு.
7.தெல்லிப்பளையில் துர்க்கா திரையரங்கு
8.அச்சுவேலியில் லிபேர்ட்டி திரையரங்கு
9.பருத்தித்துறையில் சென்றல் திரையரங்கு
10. புலோலியில் காசில் திரையரங்கு( புலோலி சினிமா)
11.மானிப்பாயில் வெஸ்லி திரையரங்கு
12. கோண்டாவில் லதா திரையரங்கு
13. சங்கானையில் சாந்தி திரையரங்கு
திரைப் பட மாளிகைக்குள் திரைப்படம் தொடங்க முன்பும் இடைவேளை நேரத்திலும் சிறிய பெட்டிகளில் இனிப்பு, கச்சான் பக்கற் , பீடா என பலவற்றையும் வைத்துக் கொண்டு அதை தோளில் வைத்து தூக்கிக் கொண்டு விற்று வருவார்கள்
திரைப் படம் ஆரம்பமாகும் போதும் இடைவேளை முடியும் போதும் கணீர் என ஒலிக்கும் மணிச் சத்தம்
தொழிலாளர் தினம் அன்று அரசு சகல திரை அரங்குகளின் கட்டணங்களையும் 1ரூபாவாக குறைக்கும் சட்டம் போடும், அன்றைய தினம் சகல திரை அரங்குகளிலும் மக்கள் அலை மோதுவார்கள். ( சில திரை அரங்க முதலாளிகள் அன்றைய தினம் மிகப் பழைய படங்களை போடுவது உண்டு).
படம் தொடங்கிய பின்பு படம் பார்க்க வரும் வேளையில் டோச் லைட் உதவியுடன் வழிகாட்டும் தியேட்டர் ஊழியர்.
மணியத்துன் அழகிய கைவண்ணத்தில்
திரைப் பட மாளிகையின் முகப்பு வாயிலில் காட்சிக்கு வைக்கப் பட்டிருக்கும் திரையிடப்படும் படத்தின் புகைப்படங்களை பல அடி உயரமான
பேனர் கட்டவுட்.
வீட்டில் ஒவ்வொருவருக்குத் தெரியாமல் படம் பார்க்க வந்து விட்டு. படம் முடியும் நேரம் மின் விளக்குகள் போடப்படும் பொழுது அகப்படும் தருணங்கள்.
படம் முடியும் தறுவாயில் துவிச்சக்கர வண்டிபார்க்கில் இருந்து வண்டியை எடுக்க பரபரத்து ஓடுபவர்களும், இரவுக்காட்சியின் இறுதி பஸ்ஸை (பட பஸ்)பிடிக்க ஓடுபவர்களும்.
இப்படியாக பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் இன்றும் நினைவுகளில்
இதே போன்று இதை வாசிக்கும் உங்களும் பல நிகழ்வுகள் நடந்திருக்கும்.
(குறிப்பு: என்னால் முடிந்தளவு திரட்டப்பட்டவை சில தவறுகள் இருக்கலாம் மன்னிக்கவும்)
Uma Umapathy
























