அனுமதிப்பத்திரமின்றி சிப்பிகளை ஏற்றிச் சென்ற லொறி
இலங்கை
கந்தளாய் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், இன்று ( 24 ) அதிகாலை சுமார் 5.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது சட்டவிரோதமாக கடத்தப்பட்ட சிப்பிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
திருகோணமலை – கிண்ணியா பகுதியில் இருந்து வந்த லொறி ஒன்றை மறித்து சோதனை செய்தபோது, அதில் அனுமதிப்பத்திரமின்றி எடுத்துச் செல்லப்பட்ட சிப்பிகள் இருப்பது கண்டறியப்பட்டதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் தெரியவருவதாவது, கிண்ணியா நடுத்தீவு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஏற்றிச் செல்லப்பட்ட சிப்பிகள் மொத்தம் 620 மூட்டைகளாக இருந்தன.
இந்த சிப்பிகள் கிண்ணியாவிலிருந்து குளியாப்பிட்டிய பகுதிக்கு கொண்டு செல்லப்படவிருந்ததாக லொறி சாரதி வாக்குமூலம் அளித்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய லொறி சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், சந்தேகநபர்களை இன்றைய தினம் கந்தளாய் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.























