உலக பொருளாதாரம் பதற்றத்தில் - ஈரான் மோதலில் ட்ரம்ப் அடுத்த கட்ட ஆலோசனை
அமெரிக்கா–ஈரான் மோதல் தொடர்பாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது உயர்மட்ட பாதுகாப்பு ஆலோசகர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் முட்டுக்கட்டையை எட்டியுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
குறிப்பாக, தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிவிவகாரக் கொள்கை தொடர்பான உயர்மட்ட அதிகாரிகளும் இதில் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, இம்மாதம் பாகிஸ்தானில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததற்கு அமெரிக்காவே காரணம் என ஈரானின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய கிழக்கில் நீடித்து வரும் இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முக்கிய முயற்சியாக அந்த பேச்சுவார்த்தைகள் பார்க்கப்பட்டிருந்தன.
ஆனால், இஸ்ரேலின் அழுத்தம் காரணமாக அமெரிக்கா எடுத்த நிலைப்பாடே பேச்சுவார்த்தை தோல்விக்குக் காரணம் என்றும், ஈரான் மீது சில திட்டங்களை திணிக்க முயன்றதே சிக்கலை அதிகரித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மோதலைத் தணிக்கும் நோக்கில் ஈரான் முன்வைத்துள்ள புதிய ஒப்பந்தம் அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு அமைவதாக இல்லை எனவும் கூறப்படுகிறது.
அந்த ஒப்பந்தத்தில் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது, அங்கு அமெரிக்க கடற்படை மேற்கொண்டுள்ள முற்றுகையை நீக்குவது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளதுடன், அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைகளை பின்னர் நடத்த வேண்டும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தைகள் முடங்கும் என எதிர்பார்க்கப்படாத சூழலில், ஈரான் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் என்றும், அது நேரடி சந்திப்பாக இல்லாவிட்டாலும் தொலைபேசி மூலமாக கூட இருக்கலாம் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த சூழல், மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளதுடன், உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.






















