என் கணவர் எனக்கு கிடைத்த வரம்!
சினிமா
எனது அப்பா ஒரு தயாரிப்பாளர். அவர் படம் எடுத்து சொத்துக்களை கரைத்ததால் வீட்டை விற்கும் நிலை இருந்தது.
அதனால் எனது அக்காள் ஜோதிலட்சுமியும் நானும் நடிக்க வந்தோம். விட்டலாச்சாரியாவின் ஜெகன் மோகினி பெரிய பெயர் வாங்கி கொடுத்தது. கவர்ச்சியாக நடித்தாலும் கதாநாயகிகளுக்கு உள்ள முக்கியத்துவம் எனக்கும் இருந்தது. நிறைய காதல் கடிதங்கள் வந்தன.
கவர்ச்சியாக ஆடியதால் வெளியில் யாரும் என்னை குறைவாக மதிப்பிடவில்லை. இப்போது நிலைமைகள் மாறி இருக்கிறது. அன்றைக்கு நாங்கள் கவர்ச்சி நடனம் ஆட அணிந்த உடைகளை இப்போது வெளியில் பெண்கள் சாதாரணமாக அணிந்து செல்வதை பார்க்க முடிகிறது
என் வீட்டில் நான் தான் கடைக்குட்டி. எல்லோருக்குமே திருமணமாகி விட்டது, நான் தான் கடைசி.எனக்கும் சீக்கிரம் திருமணம் முடித்து நான் வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என்று என் அம்மா விரும்பினார்.
திரைத்துறையில் இருந்து சிலர் காதலிக்கிறேன் என்று புரபோஸ் செய்தார்கள் ஆனால் எனக்கு ஏனோ அந்தக் காதலில் எல்லாம் நம்பிக்கை இல்லாமல் இருந்ததால் அம்மா பார்க்கும் வரனையே மணந்து கொள்வது என்று முடிவு செய்திருந்தேன்.
என் கணவன் என் அண்ணனின் நண்பர், என்னை திரையுலகிற்கு அப்பாற்பட்டும் அவருக்குத் தெரியும். குடும்ப விழாக்கள், கோயில்களுக்குச் செல்கையில் நான் எப்படி உடையணிந்து கொண்டு செல்வேன், எனக்கு கடவுள் பக்தி அதிகம், என்பதெல்லாம் அவருக்கு முன்பே தெரியும். என்னைப் பற்றித் தெரியாத வேறு யாரையாவது திருமணம் செய்து கொள்வதென்றால் நிச்சயம் திரைப்படங்களில் நான் அணிந்த உடைகள், நடன அசைவுகள் காரணமாக எப்போதாவது வாழ்வில் கேள்விகள் முளைக்கும் அப்படியெல்லாம் இல்லாமல் என்னைப் பற்றி அறிந்த ஒரு நபரை எனக்குத் திருமணம் செய்து வைத்தால் என் வாழ்க்கை நன்றாக இருக்கும் என அம்மா நினைத்தார். அவர் நினைத்தபடியே நடந்தது.
என் கணவர் எனக்கு கிடைத்த வரம்! அவருக்கும் நடனம் என்றால் கொள்ளை இஷ்டம். நாங்கள் இருவரும் குடும்பத்தினருடன் சந்தோசமாக இருக்கும் தருணங்களில் ஆடல், பாடல் என்று தூள் பரத்துவோம். காவல்துறை அதிகாரியாக இருந்தாலும் என் கணவரும் நன்றாக நடனமாடுவார். என்று சிரிக்கிறார் ஜெயமாலினி. திருமணப் பேச்சு வார்த்தையின் ஆரம்பத்தில் கணவரது சகோதரிகளுக்கு என் திரைப்படங்களைப் பார்த்ததால் என் மீது கொஞ்சம் ஆட்சேபணைகள் இருந்தது வாஸ்தவமே, ஆனால் அதெல்லாம் தீர்ந்து சீக்கிரமே அவர்கள் சரி என்ற பிறகே எங்கள் திருமணம் என் ஆஸ்தான தெய்வமான திருப்பதி ஏழுமலையான் சன்னதியில் வைத்து இனிதாக நடந்து முடிந்தது.
- ஜெயமாலினி!
- பிரசாந்த்!






















