கனடாவின் தலைவர் நான்தான் - ட்ரம்புக்கு நினைவூட்டிய மன்னர் சார்லஸ்
கனடா
பிரித்தானிய மன்னர் சார்லஸ் அமெரிக்காவுக்கு அரசு முறைப்பயணத்துக்கு திட்டமிட்டபோது, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மன்னரை கேலி செய்துவிடுவாரோ அல்லது அவமதித்துவிடுவாரோ என்ற அச்சம் பிரித்தானிய தரப்புக்கு இருந்தது.
இப்போது பார்த்தால், எல்லாம் தலைகீழாக நடக்கிறது. ஆம், மன்னர் சார்லஸ்தான் ட்ரம்பை கேலி செய்துகொண்டிருக்கிறார்!
கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக ஆக்கப்போவதாகக் கூறி கனேடியர்களுக்கு எரிச்சலூட்டிக்கொண்டே இருந்தார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்.
அப்போதெல்லாம், தங்கள் நாட்டின் தலைவர் என்னும் முறையில், மன்னர் சார்லஸ் ட்ரம்புக்கு பதிலடி கொடுக்கவில்லையே என்னும் ஆதங்கம் கனேடியர்கள் பலருக்கு இருந்தது.
ஆனால், மன்னர் ஒன்றும் அமைதியாக இல்லை, அவர் தக்க தருணத்துக்காக காத்திருந்தார் என்பது இப்போது தெளிவாகிவிட்டது.
ஆம், ட்ரம்ப் அளித்த அரசு விருந்தில் உரையாற்றிய மன்னர் சார்லஸ், கனடாவின் தலைவர் தான்தான் என்பதை சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டார்.
இன்னும் சில வாரங்களில், அமெரிக்காவும் கனடாவும், (மெக்சிகோவுடன்) FIFA உலகக்கிண்ண கால்பந்து போட்டியை இணைந்து நடத்த உள்ளன.
ஒரு வகையில் கூறினால், அந்தந்த நாட்டின் தலைவர் என்னும் முறையில், நாம் இருவரும் கால்பந்து போட்டியை இணைந்து நடத்த இருக்கிறோம் என்றார் மன்னர் சார்லஸ்.
அதாவது, அமெரிக்காவின் தலைவர் நீங்கள், கனடாவின் தலைவர் நான், ஆக, இரண்டு நாடுகளின் தலைவர்களும் இணைந்து FIFA உலகக்கிண்ண கால்பந்து போட்டியை இணைந்து நடத்த இருக்கிறோம் என்று கூறினார் சார்லஸ்.
அது மட்டுமல்ல, இன்னும் ஒரு படி மேலே சென்று, ட்ரம்ப் வெறும் அமெரிக்காவுக்கு மட்டும்தான் தலைவர். தான் அப்படி அல்ல, தான் பல நாடுகளின் தலைவர் என்பதையும் பதிவு செய்துவிட்டார் மன்னர்.
போட்டிகளில் பங்கேற்கும் ஐந்து நாடுகளின் தலைவர் என்னும் முறையில் நானும் மிக்க ஆவலுடன் விளையாட்டுப் போட்டிகளைக் கண்டு ரசிக்க இருக்கிறேன் என்றும் கூறிவிட்டார் மன்னர்.
மன்னர் சார்லஸ், பிரித்தானியாவுக்கு மட்டுமல்ல, மேலும் 14 காமன்வெல்த் நாடுகளுக்கும் மன்னர் என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னரின் உரை கனேடியர்களை குஷிப்படுத்தியுள்ளது. ஆர்தர் (Arthur Milnes) என்னும் வரலாற்றாளர், மன்னர் சார்லஸ், கனடாவின் தலைவர் யார் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி, தெளிவாக ட்ரம்புக்கு நினைவூட்டிவிட்டார்.
அதை அவர் நகைச்சுவையாக தெரிவித்ததன் மூலம், தன் கருத்தை திறம்பட முன்வைத்துவிட்டார் என்கிறார் ஆர்தர்.
ஒரு நாட்டின் மன்னர் என்னும் முறையில் சார்லஸ் சில விடயங்களை பேசலாம், சில விடயங்களை பேசக்கூடாது என விதி உள்ளது.
ஆனால், மன்னர் சார்லஸ் தன் வாழ்நாள் முழுவதுமே ஒரு சமூக ஆர்வலராகத்தான் இருந்துவந்துள்ளார்.
ஆக, அவர் அரசியலில் தலையிடக்கூடாது என்றாலும், சொல்லவேண்டிய தன் கருத்தை எப்படி முன்வைப்பது என்பதை அவர் நன்கு அறிந்துவைத்துள்ளார் என்று கூறும் ஆர்தர், இந்த மனிதர் எதை பேசினாலும் கவனமாகத்தான் பேசுகிறார் என்றும் ஆச்சரியத்துடன் கூறியுள்ளார்.























