• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரித்தானியாவில் பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை - 4 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக நடந்த சம்பவம்

இலங்கை

பிரித்தானியாவின் பயங்கரவாத அச்சுறுத்தல் மட்டமானது எச்சரிக்கை நிலையில் இருந்து தீவிரம் என்ற நிலைக்கு, 4 ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று (30) முதன்முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை வடக்கு லண்டனின் கோல்டர்ஸ் கிரீன் பகுதியில் இரு யூத இனத்தவர்கள் குத்திக் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் டேன் ஜார்விஸ் (Dan Jarvis) கூறுகையில், இந்த அச்சுறுத்தல் மட்ட உயர்வு லண்டன் தாக்குதலால் மாத்திரம் ஏற்பட்டதல்ல என தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய தீவிரவாதம் மற்றும் தீவிர வலதுசாரி அச்சுறுத்தல்கள் பரந்த அளவில் அதிகரித்துள்ளதே இதற்கு முக்கிய காரணமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மெட்ரோபாலிட்டன் பொலிஸாரால் பயங்கரவாதத் தாக்குதலாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கத்திக்குத்துச் சம்பவம், பிரித்தானிய யூத சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்படும் தொடர்ச்சியான சம்பவங்களின் அண்மைய நிகழ்வாகும்.

'தீவிரம்' என்ற அச்சுறுத்தல் மட்டம் என்பது, அடுத்த ஆறு மாதங்களுக்குள் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெறுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதை உணர்த்துகிறது.

புலனாய்வு, பொலிஸ் மற்றும் அரசாங்கம் பொதுமக்களைப் பாதுகாக்க 24 மணி நேரமும் பணியாற்றி வருவதாக அமைச்சர் ஜார்விஸ் உறுதியளித்துள்ளார்.

இதனால் அங்குள்ள வழிபாட்டு இடங்கள் உள்ளிட்ட பல முக்கிய ஸ்த்தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply