2.5 மில்லியன் டொலர் மோசடி - பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்கிய மத்திய வங்கி
இலங்கை
நிதி அமைச்சுக்கு சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான மோசடிப் பரிமாற்றம் எனக் கூறப்படும் சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுக்கவும், அமைப்புகளை வலுப்படுத்தவும் இலங்கை மத்திய வங்கியும் (CBSL) நிதி அமைச்சும் இணைந்து செயல்பட்டு வருகின்றன என்று CBSL ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
இன்று (13) மத்திய வங்கியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றியபோது ஆளுநர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
இரு நிறுவனங்களும் தற்போதுள்ள நடைமுறைகளை மீளாய்வு செய்து வருவதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்த தங்கள் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி வருவதாகவும் இதன்போது மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டார்.
மேலும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த ஆளுநர், கணக்குதாரர்களால் வழங்கப்படும் பணம் செலுத்தும் வழிமுறைகளை மாற்றுவதற்கோ அல்லது சரிபார்ப்பதற்கோ மத்திய வங்கிக்கு நேரடிப் பொறுப்பு இல்லை என்று கூறினார்.
ஒரு பணம் செலுத்தும் வழிமுறை வழங்கப்படும்போது, கணக்கு விவரங்கள் மற்றும் பணம் செலுத்தும் முறைகள் சரியாகச் சரிபார்க்கப்பட்ட பிறகு, அந்தப் பரிவர்த்தனையைச் செயல்படுத்துவதோடு மத்திய வங்கியின் பொறுப்பு நின்றுவிடுகிறது என்று அவர் விளக்கினார்.























