கனடா அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் வினோதப் போராட்டம்
கனடா
பிரதமர் மார்க் கார்னியின் (Mark Carney) அரசாங்கத்திற்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், சில கனடியர்கள் இந்த ஆண்டுக்கான சனத்தொகை மதிப்பீட்டுப் படிவங்களை நிரப்ப மறுத்து வருகின்றனர்.
சிலர் தமது படிவ உறைகளில் "அனுப்புநருக்கே திருப்பி அனுப்புக" (Return to Sender) என எழுதி திருப்பி அனுப்பி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலின் பின்னர், லிபரல் கட்சி பெரும்பான்மை அரசாங்கத்தை அமைப்பதற்கு உதவிய கட்சித் தாவல் சம்பவங்கள் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
நான் ஒரு சிறுபான்மை அரசாங்கத்திற்கே வாக்களித்தேன், பெரும்பான்மை அரசாங்கத்திற்கு அல்ல; அரசாங்கத்தால் நான் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறேன் என ஒன்டாரியோவின் பிராம்ப்டன் நகரைச் சேர்ந்த நினா குமுடோரோஸ் என்ற பெண்மணி தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் சில கனடியர்கள் தமது மதிப்பீட்டு அட்டைகளை எரிக்கும் மற்றும் கிழிக்கும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த எதிர்ப்பு நடவடிக்கை தவறான வழிகாட்டுதலால் முன்னெடுக்கப்படுவதாக லிபரல் நாடாளுமன்ற உறுப்பினர் மார்க் கெரட்சன் தெரிவித்துள்ளார்.
இந்தத் தரவுகள் மூலம் தான் மருத்துவமனைகள், உட்கட்டமைப்பு வசதிகள் எங்கு அமைக்கப்பட வேண்டும் என்ற முடிவுகள் எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
படிவங்களை நிரப்ப மறுப்பது ஒட்டாவா அரசாங்கத்தைப் பாதிப்பதற்குப் பதிலாக, சம்பந்தப்பட்ட மக்களின் சொந்தச் சமூகத்தையே பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சனத்தொகை மதிப்பீட்டைப் பூர்த்தி செய்வது சட்டப்படி கட்டாயமானதாகும்.
இதனைத் தவறவிடுபவர்களுக்கு தொலைபேசி அழைப்புகள் அல்லது நேரடிச் சந்திப்புகள் மூலம் நினைவூட்டப்படும். அப்படியும் பூர்த்தி செய்ய மறுப்பவர்களுக்கு 500 டாலர் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு மதிப்பீட்டில் 98 சதவீதப் பங்களிப்பு கிடைத்ததாக கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மக்களின் தனிப்பட்ட தரவுகள் மற்றும் அந்தரங்கம் குறித்து எழுந்துள்ள அச்சங்களுக்குப் பதிலளித்த புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் உதவி தலைமை அதிகாரி ஜியோஃப் போல்பி, அனைத்துத் தரவுகளும் சட்டப்படி இரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்றும், அவை திணைக்களத்திற்கு வெளியே பகிரப்படாது என்றும் உறுதியளித்துள்ளார்.























