• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கபில சந்திரசேனவின் அறையில் மீட்கப்பட்ட மாத்திரைகள் குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில சந்திரசேன சடலமாக மீட்கப்பட்ட இடத்தில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத 20 மாத்திரைகளை அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் சமர்ப்பித்து அறிக்கை பெறுமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கோட்டை நீதவான் பசன் அமரசேன நேற்று உத்தரவிட்டார்.

பிரபல கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவின் வீட்டிற்குள் கபில சந்திரசேன சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்திருந்தார்.

அவர் உயிரிழந்த இடத்தில் இருந்து இரண்டு வகையான அடையாளம் தெரியாத மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

அவற்றில் ஒரு வகையில் 9 மாத்திரைகளும், மற்றொரு வகையில் 11 மாத்திரைகளும் இருந்ததாகக் குறிப்பிட்ட அதிகாரிகள் முன்வைத்த கருத்துக்களை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

கபில சந்திரசேன வசித்து வந்த வீட்டிலுள்ள சிசிடிவி கேமராக்களில் காட்சிகள் எதுவும் பதிவாகவில்லை என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

கபில சந்திரசேன மரணமடைந்த வீட்டிற்கு இரண்டு வாகன நிறுத்துமிடங்கள் (Parking Areas) வழியாக நுழைய முடியும் என்ற போதிலும், இந்த மாதம் 5ஆம் திகதிக்கும் 7ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் வெளிநபர்கள் யாரும் அந்த வீட்டிற்குள் நுழையவில்லை என்பது சுற்றியுள்ள வீடுகள் மற்றும் கட்டடங்களின் சிசிடிவி காட்சிகளை பரிசோதித்த போது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, உயிரிழந்தவர் வசித்த வீடு மற்றும் அவர் மரணமடைந்த வீடு ஆகியவற்றின் சிசிடிவி கேமரா அமைப்புகளுடன் தொடர்புடைய டி.வி.ஆர் (DVR) இயந்திரங்களை பொலிஸ் காவலில் எடுத்து, அவற்றை அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் அனுப்பி அறிக்கை கோருவதற்கும் அனுமதி வழங்குமாறு அதிகாரிகள் கோரினர்.

இதற்கான உத்தரவுகளையும் நீதவான் பிறப்பித்தார். சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணை, கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் நேற்று மீண்டும் நடைபெற்றது.

இதன்போது கோசல ரத்னஜீவ (கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் ஆண் செவிலியர்), பராபரன் ஜெயசீலா (அரவிந்த டி சில்வாவின் வீட்டுப் பணிப்பெண்), ராஜேந்திர குமார் (அரவிந்த டி சில்வாவின் வீட்டுப் பணியாளர்), கிரிஷாந்த கமலசிறி (அரவிந்த டி சில்வாவின் வீட்டில் சிசிடிவி கேமராக்களை பொருத்திய நிறுவனத்தின் பொறியியலாளர்) ஆகியோரிடம் நீதிமன்றில் சாட்சியங்கள் பெறப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக நீதவான் சாட்சிய விசாரணை வரும் மே 22ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
 

Leave a Reply