நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றிய பஞ்சு அருணாசலத்தின் கட்டுரை.
சினிமா
'எண்'ணுக்குப் பெருமை தந்த மன்னவன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இப்படி கூறுகிறார் பஞ்சு அருணாசலம்.
தினகரன் நாளிதழ் 27/01/1979-இல் நடிகர் திலகத்தின் 200-வது படக் காவியமான 'திரிசூலத்திற்கு' ஒரு சிறப்பு மலர் வெளியிட்டது. அந்தச் சிறப்பு மலரில் பஞ்சு அருணாசலம் எழுதிய கட்டுரை இது.
100, 150, 175, 200 - இவை வெறும் எண்கள் அல்ல; திரையுலகில் பலருடைய லட்சியம். தன் படம் 100 நாட்கள் ஓடாதோ, 25 வாரங்கள் போகாதோ என்ற ஏக்கப் பெருமூச்சு பலரிடமும் உண்டு. ஆனால், பட எண்ணிக்கையாலேயே 100, 150, 175 என்று விரைந்து வெற்றி நடை கண்டு 200-ஐ அடைந்திருக்கிறார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இந்த எண்களுக்கே பெருமை சேர்த்த மன்னவன் அவர்.
சிவாஜி நடித்த 200 படங்களிலும் அவரை மிஞ்சும் எந்த பாத்திரப் படைப்புகளும் அந்தந்தப் படங்களில் வந்ததில்லை எனும்படி கதைநாயகமான பாத்திரங்களிலேயே நடித்திருக்கிறார். அப்படி இப்படி என்று 50 படங்களைத் தள்ளிவிட்டாலும், மற்ற 150 படங்களிலும் தனித்தனி நபர்களை உலவவிட்டிருக்கிறார்.
ஒரே ஒரு:
குணசேகரனை
மனோகரனை
தூக்குத் தூக்கியை
ரங்கனை
தியாகராஜனை
ரஹீமை
ராஜசேகரனை
வீரபாண்டிய கட்டப்பொம்மனை
பரதனை
உயர்ந்த மனிதனை
வ.உ.சி-யை
கர்ணனை
மோட்டார் சுந்தரம் பிள்ளையை
அப்பரை
லாரன்ஸை
பிரெஸ்டிஜ் பத்மநாபனை
பாரிஸ்டர் ரஜினிகாந்தை
எஸ்.பி. சௌத்ரியை
மூக்கையா சேர்வையைத் தான் இதுவரை தமிழ்ப் பட உலகம் சந்தித்திருக்க முடியும்.
இன்று எந்த ஒரு நடிகர் தன்னை கதாபாத்திரமாக்கி ஐக்கியப்படுத்திக் கொள்ளும் போதும், சிவாஜியின் நடிப்பு வரப்பை மிதிக்காமல் இருக்க முடியாது. அவரது ஜீவனான நடிப்பு நிழல் படாமல் ஒதுங்க இயலாது; அவ்வளவு மாறுபட்ட குணச்சித்திரங்களைக் காட்டிவிட்டவர் அவர்.
தமிழ் சொற்களை எதுகை மோனைகளோடு அடிக்கிக் கொடுத்துவிட்டால், உணர்ச்சிகளை வார்த்தைகளில் ஒதுக்கிக் கொடுத்துவிட்டால், கை ஏற்ற இறக்கங்களோடு பொருள் நயம் பிசகாமல் பேசும் எவரிடமும் சிவாஜியின் வசன நடையின் வாடை வீசும். அப்படி ஒன்றை உருவாக்கிவிட்டவர் அவர்.
ஆ, ஊ, ஏ என்று பொருளற்ற உயிர் எழுத்துக்களுக்கும் பொருள்படர்ந்த பெருமூச்சுகளின் உயிர்ப்பைத் தந்தவர் சிவாஜி. பேசத் திணறுவது போல், வார்த்தை வாயிலிருந்து வரத் தவிப்பது போல் இன்று யார் பேசினாலும் 'சிவாஜி பாணி' என்று சொல்லும் அளவிற்கு வளமான பரம்பரை படைத்தவர் அவர். இசைக்கேற்ப நடந்துவிட்டாலோ கேட்கவே வேண்டாம்.
இப்படி எங்கும் எதிலும் சிவாஜியின் நடிப்புப் பள்ளி என்ற மறையாத மரபு ஏற்படுத்தி, இன்னும் அவரே கூட அதனோடு கடுமையாகப் போட்டியிட்டு தன்னை மாறுபடுத்திக் காட்ட முயற்சித்துக் கொண்டிருக்கும் வளர்ச்சி இருக்கிறதே... அந்தச் சாதனையை வேறு எங்கு கண்டோம்?
தன் முழு கவனத்தையுமே படப்பிடிப்பில் ஈடுபடுத்தி, கேரக்டராக மாறும் இன்றைய நிலையிலும் சிவாஜி ஒருவர்தான். அமர்ந்த இடத்திலேயே மணிக்கணக்காக அமர்ந்து எவரிடமும் எதுவும் பேசாமல், விளக்கு வெப்பத்தில் வற்றிடும் விழிநீரைத் தொடர்ந்து வரவழைத்துக் கொண்டு நின்ற பல சோகமயமான காட்சிகள் இன்னும் இதனைச் சிறப்பாக விளக்குகிறது.
இந்த முழுமையான ஈடுபாடு, ஆழமான சிந்தனை, தன் நடிப்பாற்றலால் கதாபாத்திரங்களுக்கு அமைத்துத் தரும் நெளிவு சுளிவுகள் - இவைதான் வசனத்தை அவர் ஞாபகம் வைத்துக் கொள்ளும் அரிய திறனைத் தருகிறது.
கேமரா எப்படி எந்தக் கோணத்தில் இயங்கினாலும் தான் எப்படி இருக்க வேண்டும், எப்படித் திரையில் அது பிரதிபலிக்கும் என்பதை முழுமையாக உணர்ந்து அதற்கேற்ப தன்னை பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறார். எந்த இயக்குநரானாலும், ஒளிப்பதிவாளர் ஆனாலும் அவர் விரும்புவதைச் செய்ய வந்திருக்கும் வேலையாள் தான் என்ற உணர்வு சிவாஜிக்கு எப்போதுமே உண்டு.
நேர மேலாண்மை
ஆறு மாதம் கழித்து அதே காட்சியில் இன்னொரு ஷாட் எடுப்பதாக இருந்தாலும் கூட, தன் நடையிலே, அசைவிலே கூட கொஞ்சமும் மாற்றமின்றித் தொடர்ச்சியை அப்படியே கொண்டுவர சிவாஜி ஒருவரால் தான் முடியும்.
நேரத்தோடு செயல்படுவது அவருக்கு இருக்கும் இன்னொரு சிறப்பு. பல வேளைகளில் மேக்கப்புடன் வெளியே காத்திருக்கும் சிவாஜி, படத்தின் டைரக்டரை வரவேற்பதைக் கூடக் கண்டிருக்கிறோம். கொடுத்த நேரத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள எந்தக் காலத்திலும் சிவாஜியின் நட்சத்திர அந்தஸ்து தடையாக இருந்ததில்லை.
எத்தனையோ சொல்லலாம், எல்லாமே சொல்லியாகிவிட்டவை தான். ஆனால் அவர் வெற்றியைப் பற்றி நினைப்பவர்கள் கூட அவரைப் பின்பற்ற சிரமப்படுகிறார்கள். அப்படி தன்னை நடிப்பிற்கென அர்ப்பணித்துக் கொண்டதாலேயே அற்புதங்கள் பல படைக்க அவரால் முடிகிறது. அந்த அரிய சக்தி அவரிடம் அணையாது சுடர்விட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன்.
நன்றி, வணக்கம்.
Senthilvel Sivaraj






















