• Welcome to TamilsGuide
செய்திகள் 1

போர்நிறுத்தத்தை மீறி லெபனான் மீது இஸ்ரேல் குண்டுமழை - பெண்கள், குழந்தைகள் உட்பட 16 பேர் பலி

லெபனானுடனான போர்நிறுத்தத்தை மீறி அந்நாட்டின் தெற்கு நகரங்களில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 58 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதன் மூலம், கடந்த சில நாட்களில் மட்டும் இஸ்ரேலிய தாக்குதல்களால் லெபனானில் பலியானவர்களின் எண்ணிக்கை 50ஐ கடந்துள்ளது.

மாகாணங்களை இணைக்கும் முக்கியப் பாதையான அஸ்லூன் நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் கொல்லப்பட்டனர்.

மேலும், நபதியா பகுதியில் நடந்த மற்றொரு தாக்குதலில் லெபனான் ராணுவத்தைச் சேர்ந்த வீரர் ஒருவரும் பலியாகியுள்ளார்.

தெற்கு லெபனான் மட்டுமன்றி, நாட்டின் தலைநகரான பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் மீதும் இஸ்ரேல் போர் விமானங்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளன.

ஹிஸ்புல்லா அமைப்பின் பலம் வாய்ந்த தளமாகக் கருதப்படும் இப்பகுதியில், சுமார் மூன்று வாரங்களுக்குப் பிறகு இஸ்ரேல் மீண்டும் குண்டுமழை பொழிந்துள்ளது.

தாக்குதலுக்கு முன்னதாக, தெற்கு லெபனானின் Tyre உட்பட பல நகரங்களில் உள்ள மக்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் கடுமையான உத்தரவைப் பிறப்பித்திருந்தது.

இதன் மூலம், லெபனானின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் சுமார் 14 சதவீத பகுதியை இஸ்ரேல் கட்டாய இடப்பெயர்வு அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது.

ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது வீடுகளைத் துறந்து இடம்பெயர்வது கடுமையான மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.


 

Leave a Reply