உக்ரேனின் வரலாற்று சிறப்புமிக்க மடாலயம் மீது ரஷ்யா தாக்குல்
இலங்கை
கடந்த இரண்டு வாரங்களில் உக்ரேனியத் தலைநகர் மீது ரஷ்யா நடத்திய மிகக் கடுமையான வான்வழித் தாக்குதலில், உக்ரேனிய ஆன்மீக மற்றும் கலாச்சார வரலாற்றின் சின்னமான கீவ் பெச்செர்ஸ்க் லாவ்ரா (Pechersk Lavra) மடாலயம் தீப்பிடித்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர் என்று அதிகாரிகள் திங்களன்று (15) தெரிவித்தனர்.
இந்த வாரம் பிரான்சில் நடைபெறவிருக்கும் ஜி7 மாநாட்டிற்கு முன்னதாக, நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான முயற்சிகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் பேசியதாக உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த புதிய தாக்குதல்கள் நடந்துள்ளன.
1051-ல் நிறுவப்பட்டு, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக விளங்கும், மத்திய கீவ்வில் உள்ள பெச்செர்ஸ்க் லாவ்ரா மடாலயம், ஒரு நேரடித் தாக்குதலில் பலத்த சேதமடைந்தது என்று தலைநகரின் இராணுவ நிர்வாகத் தலைவர் டைமூர் தகாச்சென்கோ ஒரு டெலிகிராம் பதிவில் தெரிவித்தார்.
மடாலயத்தின் மீது வானுயர்ந்த தீப்பிழம்புகள் எழுந்தபோது, குடியிருப்பாளர்கள் நிலத்தடியில் தஞ்சம் புகுந்தனர்.
இது, ஜூன் மாதத் தொடக்கத்தில் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளால் 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு, 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததற்குப் பிறகு உக்ரேன் மீது ரஷ்யா நடத்திய மிக மோசமான தாக்குதலாகும்.
ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் பல உயரமான அடுக்குமாடிக் கட்டிடங்களைத் தாக்கியதோடு, மின்சார இணைப்புகளையும் சேதப்படுத்தியதால், சுமார் 140,000 குடியிருப்பாளர்கள் மின்சாரம் இன்றி தவித்ததாக கீவ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பின்னர், பெரும்பாலான குடியிருப்பாளர்களுக்கு மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
நேற்றிரவு உக்ரேன் மீது ரஷ்யா 70 ஏவுகணைகளையும் 611 ஆளில்லா விமானங்களையும் ஏவியதாகவும், தனது வான் பாதுகாப்புப் படைகள் பல்வேறு வகைகளைச் சேர்ந்த 50 ஏவுகணைகளையும் 582 ஆளில்லா விமானங்களையும் சுட்டு வீழ்த்தியதாகவும் உக்ரேன் இராணுவம் திங்கள்கிழமை காலை தெரிவித்தது.
இந்த தாக்குதல்களில் நான்கு பேர் உயிரிழந்ததுடன், 30 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
























