• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சர்வதேச தேடலில் சிக்கிய இலங்கை பாதாள உலகக் குழு முக்கிய உறுப்பினர்

இலங்கை

சர்வதேச பொலிஸாரின் (Interpol) சிவப்பு அறிவிப்பின் (Red Notice) கீழ் தேடப்பட்டு வந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் சந்தேகநபர் ஒருவர் மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

41 வயதுடைய இரத்மலானை பகுதியைச் சேர்ந்த பிரதான சந்தேகநபர், மலேசிய பொலிஸார் மற்றும் இன்டர்போலின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டார். 

அவர் திங்கட்கிழமை (10) விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பேராதனை பொலிஸ் பிரிவில் 2014 ஆம் ஆண்டு துப்பாக்கிகளை பயன்படுத்தி ஒருவரை கடத்தி தாக்கியதாகவும், 2016 ஆம் ஆண்டு அதே பகுதியில் மற்றொருவரை சுட்டுக்கொன்றதாகவும் கூறப்படும் இரண்டு வழக்குகள் தொடர்பில் கண்டி நீதிவான் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவ்வழக்குகள் தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதையடுத்து, அவருக்கு எதிராக திறந்த பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன.

மேலும், 2003 ஆம் ஆண்டு கல்கிசை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பாகவும் அவர் கைது செய்யப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தார்.  

அதேபோல், 2007 ஆம் ஆண்டு கைக்குண்டு ஒன்றை சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டில் கல்கிசை பொலிஸாரால் மீண்டும் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மலேசியாவில் பிரதான சந்தேகநபருடன் இருந்த இரத்மலானையைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரும், கல்கிசையைச் சேர்ந்த 31 வயதுடைய மற்றொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

பொலிஸ்மா அதிபரின் ஆலோசனை மற்றும் நேரடி கண்காணிப்பின் கீழ் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
 

Leave a Reply