கனடாவில் திரும்பப்பெறபப்டும் டொயோடா வாகனங்கள்
கனடா
டிஜிட்டல் திரையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, கனடாவில் விற்பனை செய்யப்பட்ட 11,000-க்கும் மேற்பட்ட கேம்ரி மாடல் கார்களைத் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
வாகனத்தைத் தொடங்கும் போது திரையில் ஏற்படும் பிரச்சனையால் சிக்னல் விளக்குகள், அவசரகால விளக்குகள் மற்றும் எச்சரிக்கை ஒலிகள் போன்றவை வேலை செய்யாமல் போகக்கூடும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 6 நாளிட்ட அறிவிப்பின்படி, கனடாவில் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டு மாடலைச் சேர்ந்த சுமார் 11,159 டொயோட்டா கேம்ரி வாகனங்கள் இந்தத் திரும்பப் பெறும் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள 7 அங்குல 'காம்பினேஷன் மீட்டர்' திரை, வாகனம் ஸ்டார்ட் செய்யும்போது திடீரென செயலிழந்து காலியாக மாறக்கூடும்.
இதனால் வேகமானி, டர்ன் சிக்னல், ஹஸார்ட் லைட் மற்றும் சீட்பெல்ட் எச்சரிக்கை ஒலிகள் செயல்படாமல் போகும் ஆபத்து உள்ளது.
முக்கியமான தகவல்களும் எச்சரிக்கைகளும் தெரியாமல் போவது, குறிப்பிட்ட சூழ்நிலைகளில் விபத்து அல்லது காயங்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என அந்நிறுவனம் எச்சரித்துள்ளது.
பாதிக்கப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அக்டோபர் மாதத் தொடக்கத்திற்குள் முறைப்படி தகவல் தெரிவிக்கப்படும். வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை அருகில் உள்ள டொயோட்டா டீலர்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். அங்கு காம்பினேஷன் மீட்டருக்கான மென்பொருள் முற்றிலும் இலவசமாகப் புதுப்பித்துத் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.






















