மட்டக்களப்பு புனானை வனவிலங்கு காரியாலயத்தை உடைத்து துப்பாக்கி உட்பட்ட பொருட்களை திருடிய ஒரு பெண் உட்பட 3 பேர் கைது
இலங்கை
மட்டக்களப்பு புனானை வனவிலங்கு காரியாலயத்தை உடைத்து துப்பாக்கி உட்பட இலத்திரனியல் பொருட்களை திருடிய சம்பவம் தொடர்பாக சித்தாண்டியைச் சேர்ந்த இரு சகோதரர்கள் மற்றும் திருட்டுப் பொருட்கள் வைத்திருந்த பெண் ஒருவர் உட்பட 3 பேரை நேற்று இரவு கைது செய்துள்ளதுடன் திருடப்பட்ட துப்பாக்கி உட்பட பொருட்களை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
கடந்த 2ம் திகதி வாழைச்சேனை கொழும்பு வீதி புனாணையில் அமைந்துள்ள பூட்டியிருந்த வனவிலங்கு பாதுகாப்பு காரியாலயத்தின் கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த சொட்கண் துப்பாக்கி ஒன்று அதற்கான 3 தோட்டாக்கள், துளை கருவியான ரில்லர் ஒன்று, எரிவாயு அவன் ஒன்று மின்விசிறி ஒன்று ஆகிய பொருட்கள் திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிசார் அந்த பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்டுவந்த சித்தாண்டியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரை கைது செய்து விசாரணையில் திருடப்பட்ட துப்பாக்கியை அந்த பகுதி காட்டு பகுதியில் மறைத்து வைத்திருந்த நிலையில் இருந்து துப்பாக்கியை மீட்டனர்.
இதனை தொடர்ந்து புனானை பிரதேசத்தில் உள்ள விகாரைக்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் மறைத்து வைத்திருந்த மின்விசிறி உட்பட்ட பொருட்களை மீட்டதுடன் திருட்டுப் பொருளை வைத்திருந்த வீட்டின் உரிமையாளரான பெண் ஒருவர் உட்பட 3 பேரை கைது செய்ததுடன் ஒருவர் தலைமறைவாகி உள்ளதாகவும் இதில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.























