1962 தமிழக சட்டமன்ற தேர்தல் நேரம்...
தமிழ்நாடு
பிரச்சாரம் ஓய்வதற்கு சில தினங்களே இருந்தன. எம்.ஜி.ஆர் திமுகவுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் செய்துவந்தார். அப்போது எம்ஜிஆரின் மனைவி சதானந்தவதி (ஏற்கெனவே காசநோயால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பவர்) ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட செய்தி வர தலைவர் சென்னை விரைகிறார். மருத்துவர்கள் சதானந்தவதியின் இறப்பிற்கு மணிக்கணக்கில் நேரம் குறித்துவிட்டனர். அதே நேரம் தஞ்சாவூரில் போட்டியிடும் கருணாநிதிக்கு சரியான சவாலாக காங்கிரஸ் வேட்பாளர் பரிசுத்த நாடார் இருந்தார். பணபலமும், மக்கள் செல்வாக்கு, ஆளும் கட்சி வேட்பாளர் என்ற மூன்று அம்சங்களும் கருணாநிதியை திணறடித்தன. எம்ஜிஆர் வந்து பிரச்சாரம் செய்தால்தான் கருணாநிதி வெற்றிக்கனியை சுவைக்க முடியும் என்ற நிலை.. அண்ணாவும், கருணாவும் கேட்டுக்கொண்டதால் எம்ஜிஆர், மனைவியை எமனின் வாசலில் விட்டுவிட்டு கனத்த நெஞ்சத்தோடு தஞ்சாவூர் சென்றுகொண்டிருந்தார். தஞ்சையை அடைய சிலமைல்களே இருந்தநிலையில் தலைவரின் நெஞ்சை பிளக்கும் மனைவியின் மரணச்செய்தி மற்றொரு கார் மூலம் நடிகர் கே.கண்ணன், திருப்பதிசாமியால் தெரிவிக்கப்பட்டது.
தன் துயரத்தை அடக்கிக்கொண்டு, யாரிடமும் இந்த செய்தியை தற்போது தெரிவிக்க வேண்டாம் என்று வந்தவர்களிடம் சொல்லி விட்டு மேடையை நோக்கி பயணிக்கிறார் எம்ஜிஆர். கூட்டம் தலைவரை பார்த்ததும் ஆர்ப்பரிக்கிறது. எம்ஜிஆர் மனதில் துக்கத்தை அடக்கிகொண்டு புன்னகையுடன் கருணாவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய தயாரானார். அப்போது ஒரு ஆளுயர மாலையை கருணாநிதி எம்ஜிஆருக்கு அணிவிக்க முற்படுகிறார். எம்ஜிஆர் அதை நாசூக்காக மறுக்க கருணாநிதி மற்றொரு மைக்கில் நான் போடும் மாலையை எம்ஜிஆர் ஏற்க மறுக்கிறார். இதற்கு எனக்கு காரணம் வேண்டும்? என்று கூறுகிறார். அப்போது தான் எம்ஜிஆர் தன்னையும் மீறி கட்டிய மனைவியை பிணக்கோலத்தில் விட்டுவிட்டு பிரச்சாரத்திற்கு வந்திருக்கிறேன். இந்த நிலையில் எப்படி என்னால் பூமாலையை கழுத்தில் தாங்கிக்கொள்ள இயலும்? என்று மக்களிடமே கேட்டார். கருணாநிதியும் அந்த இடத்திலேயே எம்ஜிஆரிடம் மன்னிப்பு கேட்டார். மக்களோ தலைவரை பார்த்து நீங்கள் உடனே உங்கள் மனைவியை பார்க்க செல்லுங்கள். கருணாநிதியை நாங்கள் ஜெயிக்க வைக்கிறோம் என்று உறுதி கூறினர். அப்படியே நடந்தது. இது வரலாறு...
தான் சார்ந்த கட்சிக்காக மெய்வருத்தம் பாராது உழைத்தவர் எம்ஜிஆர்.
Paranji Sankar





















