தாய்லாந்தில் ரயில் மீது கிரேன் வீழ்ந்து விபத்து - 22 பேர் உயிரிழப்பு, 55 நபர்கள் காயம்
இலங்கை
வடகிழக்கு தாய்லாந்தின் நக்கோன் ராட்சசிமா (Nakhon Ratchasima) மாகாணத்தில் புதன்கிழமை (14) பயணிகள் ரயில் பெட்டிகளின் மீது கட்டுமானப் பணிகளில் இருந்த கிரேன் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் குறைந்தது 22 பேர் உயிரிழந்ததுடன், 55 பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உள்ளூர் நேரப்படி காலை 9:05 மணியளவில் பேங்கொக்கிலிருந்து உபோன் ரட்சதானிக்குச் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலானது இந்த விபத்தினை சந்தித்துள்ளது.
விபத்தினை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவசரகால மீட்புப் படையினர், இடிபாடுகளில் சிக்கிய பயணிகளை மீட்டனர்.
காயமடைந்த பயணிகள் சிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
தாய்லாந்து துணைப் பிரதமரும் போக்குவரத்து அமைச்சருமான பிபாட் ரட்சகிட்பிரகார்ன் விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.






















