யாழ்.போதனாவில் நிறை போதையில் சிகிச்சைக்கு வந்தவர் அட்டகாசம்
இலங்கை
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நிறை போதையில் சிகிச்சை பெற வந்தவர் , பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன் முரண்பட்டு கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
போதனா வைத்தியசாலைக்கு இன்றைய தினம் அதிகாலை 1.40 மணியளவில் நிறை போதையில் இரத்த காயங்களுடன் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் 24ஆம் இலக்க விடுதியில் தங்க வைத்து சிகிச்சை வழங்கப்பட்டது.
அதன் போது, தாதிய உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்டவர்களுடன் முரண்பட்டு , கெட்ட வார்த்தைகளை பேசி , விடுதியில் ஏனைய நோயாளர்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டுள்ளார்.
அதனை அடுத்து பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , அவர்கள் விடுதிக்கு விரைந்து குறித்த நபரை கட்டுப்படுத்த முயன்ற போது , தனது உடைமையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து , அச்சுறுத்தியுள்ளார்.
அதனை அடுத்து அவரை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை ஒரு உத்தியோகஸ்தருக்கு கைகளில் காயம் ஏற்பட்ட நிலையில் , தாக்குதலை நடாத்தியவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யபப்ட்டுள்ளது.






















