கனடாவில் இந்த வகை சோப் குறித்து வெளியான எச்சரிக்கை
கனடா
ஒன்டாரியோ மாகாணத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தின் சோப்புகளுக்கு கனடா முழுவதும் மீட்பு (recall) அறிவிப்பை ஹெல்த் கனடா வெளியிட்டுள்ளது.
மெதில் யூஜெனோல் என்ற ரசாயனப் பொருள் அதிக அளவில் உள்ளதாகக் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாறு குறித்த சோப் வகை மீளப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு அறிவிப்பின்படி, லேக் ஒப் த வுட்ஸ் சன்ரைஸ் சோப் நிறுவனம் தயாரித்த “Shades of Grey” என்ற பெயருடைய சோப்புகளில் சுமார் 400 அலகுகள், 2019 ஜனவரி முதல் 2026 ஜனவரி வரை கனடாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சோப்புகள் ஒன்டாரியோ மாகாணத்தின் கெனோரா நகரில் தயாரிக்கப்பட்டவை எனவும், 16 கிராம், 67 கிராம் மற்றும் 135 கிராம் எடையுள்ள கட்டிகளாக விற்பனை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
மீட்பு அறிவிப்பில், “மெதில் யூஜெனோல் புற்றுநோய் ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகக் கருதப்படுவதால், தூய ரசாயனப் பொருளாக பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளதே தவிர, சில தாவரச் சாற்றுகளில் இயற்கையாக இருக்கும் அளவுக்கு மட்டும், குறிப்பிட்ட வரம்புகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என ஹெல்த் கனடா விளக்கமளித்துள்ளது.
இந்நிலையில், 2026 ஜனவரி 7 வரை இந்த தயாரிப்புகளால் எந்தவிதமான விபத்து அல்லது காயம் சம்பவங்களும் பதிவாகவில்லை எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்டுள்ள சோப்புகளை உடனடியாகப் பயன்படுத்துவதை நிறுத்தி, அவற்றை முறையாக அகற்றிவிட்டு, மாற்றுப் பொருளுக்காக நிறுவனத்தை தொடர்பு கொள்ளுமாறு நுகர்வோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.





















