• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எம்.ஜி.ஆரின் எச்சில் நாக்கில் என் பாடல்கள் ஏறுமுன் – என் முகத்தில் காலம் உமிழ்ந்த எச்சில்கள் கொஞ்சமா நஞ்சமா?

சினிமா

எம்.ஜி.ஆரின் எச்சில் நாக்கில் என் பாடல்கள் ஏறுமுன் – என் முகத்தில் காலம் உமிழ்ந்த எச்சில்கள் கொஞ்சமா நஞ்சமா?
ஏச்சுகளையும் எள்ளல் பேச்சுகளையும் எதிர் கொள்ள முடியாமல் – எப்பொழுதோ நான் திருச்சிக்குத் திரும்பியிருப்பேன் – கோடம்பாக்கம் நமக்குக் கொஞ்சமும் ஒத்து வராதென்று! வழிமறித்து நின்று என்னை ஆற்றுப்படுத்தியது எம்.ஜி.ஆரின் வரலாறுதான்; அதனால்தான் – அவரை நான் அப்படியே விழுங்கி என் உயிர் நாடியில் உட்கார்த்தி வைத்திருக்கிறேன்!
நடிகர் எம்.கே.ராதா அவர்களின் தந்தையார் திரு.கந்தசாமி முதலியார். அவர் திரு.எஸ்.எஸ்.வாசன் எழுதிய ‘சதிலீலாவதி’ கதையை வாங்கிப் படமெடுத்தார்.
‘சதிலீலாவதி’யில் எம்.ஜி.ஆர். ஒரு சப்–இன்ஸ்பெக்டராக வருகிறார்.
பின் –
‘பிரகலாதா’வில் ஒரு சிறிய வேடம்.
பின்
‘சாலிவாகனன்’ படத்தில் வில்லனாக வருகிறார்.
இந்தப் படத்தில் திரு.ரஞ்சன் கதாநாயகன். ரஞ்சனுக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஒரு அற்புதமான கத்திச் சண்டை அந்தப் படத்தில் உண்டு.
அதில் – எம்.ஜி.ஆர். Risk எடுத்துக் கத்தியைச் சுழற்றியதில், பெரும் புகழ் அவருக்கு வரக்கூடும் என்ற காழ்ப்பின் காரணமாக –
அந்தக் காட்சியின் நீளம், அதுவும் எம்.ஜி.ஆர். பங்கு பெறும் Shot - கள் குறைக்கப்படுகிறது!
பிறகு –
தியாகராஜ பாகவதர் அவர்கள் நடித்த ‘அசோக்குமார்’ படத்திலும்; ‘ராஜமுக்தி’ படத்திலும் சிறிய வேடங்களில் வருகிறார். இந்த வேடங்களை அவர் பெறக் காரணமாக இருந்தவர் டைரக்டர் திரு.ராஜாசந்திரசேகர் அவர்கள். இவர், திரு. டி.ஆர்.ரகுநாத் அவர்களின் தமையனார்.
ஜூபிடர் ‘அபிமன்யு’வில் – அர்ஜுனனாக வருகிறார்!
ஜூபிடர் ‘ஸ்ரீமுருக’னில் – சிவதாண்டவம் ஆடுகிறார்!
ஜூபிடர் ‘ராஜகுமாரி’யில் தான் கதாநாயகனாகிறார். இந்தப் படத்தில்தான் திரு.ஏ.எஸ்.ஏ.சாமியின் உதவி வசன கர்த்தாவாகக் கலைஞர் அவர்கள் பணியாற்றுகிறார்கள்! பிறகு
‘மருதநாட்டு இளவரசி’;
‘மந்திரிகுமாரி’;

‘மலைக்கள்ளன்’ – இப்படித் தொடர்ந்து பெரும் பெயர் பெறுகிறார்!
‘மலைக்கள்ள’னில் எம்.ஜி.ஆர். புகழின் உச்சிக்குப் போகிறார்.
‘நாடோடி மன்னன்’ மூலம் – இனி, உயர உயரமில்லாத உயரத்தில் போய் உட்காருகிறார்!

 

- காவியக்கவிஞர் வாலி .

Leave a Reply