சுஜாதா - கமல்ஹாசன் முதல் சந்திப்பு ...
சினிமா
கமல் அப்போது மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு நட்சத்திரம். அவருடைய இந்த செய்கை ஆச்சரியத்தை உண்டுபண்ணியது. இது சராசரி நடிகர்களுக்கு வரமுடியாத இலக்கிய தாகம். அப்போது மிக உச்சத்திலிருந்த எழுத்தாளர் சுஜாதா. அவரை ஒரு நடிகர் இப்படியெல்லாம் முயன்று பார்க்கத்துடிப்பார் என்பதே வியப்பை உண்டுபண்ணுகிற விஷயம்தான். ஆனால் கமல் ஒரு புதுமை விரும்பி. அவரைத் தெரிந்தவர்களுக்கு இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்ற எண்ணம் இருந்தபோதும் அதையும் தாண்டி ஆச்சரியமாகவே இருந்தது.
சுஜாதாவிடம் போன் செய்து விஷயம் சொல்லியபோது “யோவ் வருவாராய்யா? அப்புறம் அவர் பாட்டுக்கு வராமலிருந்துட்டார்னா என்னுடைய புரோகிராம் எல்லாம் வேஸ்ட்டாயிரும். எனக்கு சாவியை சந்திக்க வேண்டியிருக்கு. போன தடவை கூட அவரைப் பார்க்கலை. அதற்கே அவர் கோவிச்சுட்டார்” என்றார்.
“இல்லை நிச்சயம் வந்துருவார். உங்களை சந்திக்க அவர் ரொம்பவும் துடிச்சிட்டிருக்கார்” என்றேன்.
“சரி எல்டாம்ஸ் ரோட்டுல அந்தக் கார்னர் வீடு தானே? அதான் கமல் வீடுன்னு கேள்விப்பட்டிருக்கேன். அங்கே வந்துர்றேன். நீங்க அங்க வந்துருங்க. கொஞ்சம் வெளிலயே நில்லுங்க. நான் வந்துர்றேன்” என்றார்.
மிகச்சரியாக பதினொன்றே கால் மணிக்கெல்லாம் நானும் நண்பர் அகிலன் கண்ணனும் கமலஹாசன் வீட்டிற்குச் சென்றோம். கமல் வந்துவிட்டாரா என்று பார்ப்பதற்காக உள்ளே போனபோது வீட்டிற்குள் ஏதோ படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. நல்ல வேளை கமல் இங்கேயே நடித்துக்கொண்டிருக்கிறாரே என்று பார்த்தால் இது கமல் நடிக்கும் படம்தான். ஆனால் இன்றைய படப்பிடிப்பில் கமல் இல்லை. கே.பாலச்சந்தரின் படம். கேபியும் அன்றைக்கு அங்கே இருக்கவில்லை. அவருக்கு பதிலாக அனந்து படப்பிடிப்பை நடத்திக்கொண்டிருந்தார். அவர்களிடம் சென்று கேட்டதற்கு கமல் மகாபலிபுரம் போயிருக்கிறார் என்றும் இப்போது வரக்கூடும் என்றும் சொன்னார்கள். சரிதான் எல்லாம் நல்லபடியாகத்தான் இருக்கிறதென்று தோன்ற காம்பவுண்டிற்கு வெளியே வந்து நின்றுகொண்டோம்.
சிறிது நேரத்தில் தூரத்தில் ஒரு ஆஸ்டின் கார் வந்தது. (ஆஸ்டினா மாரிஸ் மைனரா என்பது நினைவில்லை.)பழைய மாடல் கார். சுஜாதாதான் ஓட்டிவந்தார். ஏற்கெனவே அந்தக் காரைப்பற்றி அவர் சொல்லியிருந்ததாலும் பத்திரிகைகளிலும் எழுதியிருந்ததாலும் தூரத்திலிருக்கும்போதே கண்டுபிடிக்க முடிந்தது. சுஜாதாவும் எங்களைப் பார்த்து சைகை செய்தார். எங்களருகில் வந்ததும் கார் நின்றது. “என்னய்யா கமல் வந்துட்டாரா?” என்றார் சுஜாதா.
“இல்லை வந்துருவார் என்று சொன்னார்கள். வாங்க உள்ளே போயிருவோம்” என்றேன்.
“காம்பவுண்டுக்குள்ள காரை நிறுத்தலாம் இல்லை?”
“ஓ...தாராளமாய் நிறுத்தலாம். ரொம்பப் பெரிய காம்பவுண்ட்” என்றேன்.
சுஜாதா காரைக் கிளப்பினார்.
கார் நகரவில்லை. என்னென்னமோ செய்து பார்த்தார். ஒன்றும் பலிக்கவில்லை. கார் நகர மாட்டேன் என்றது.
“எப்பவாச்சும் இப்படி ஆயிரும். மாமனாருடையது. மாமனார் யாரையும் தொடவிட மாட்டார். எனக்கு மட்டும்தான் அனுமதி. நல்ல கண்டிஷன்லதான் இருக்கு. ஆனா எப்போதாவது மக்கர் பண்ணும். இப்பப்பார்த்து.......” என்று சொல்லிக்கொண்டே இன்னமும் ஏதேதோ செய்தார்.
கொஞ்சம் குலுங்கி அதிர்ந்து நிறைய புகை விட்டுவிட்டு அமைதியானதே தவிர கிளம்பவில்லை.
மொத்தமாக அணைத்து திரும்பவும் ஆன் செய்து இக்னிஷனைப் போட்டு கியரை மாற்றி எந்த சாகசம் செய்தபோதும் அந்தக் கார் பிடிவாதமாய் மறுத்துவிட்டது.
ஒரு சங்கடச் சிரிப்புடன் “மெல்க்யூ கொஞ்சம் தள்ளுறீங்களா” என்று கேட்டார் சுஜாதா. அவர் எப்போதும் என்னுடைய இயற்பெயரைச் சொல்லித்தான் அழைப்பார்.
சரியென்று சொல்லி நானும் கண்ணனும் காரின் பின்புறம் வந்து காரைத் தள்ள ஆரம்பித்தோம். ஒரு முப்பது அடி தூரம் தள்ளினால் கேட் வந்துவிடும். கேட்டிற்குள் நுழைய வேண்டும்.
தள்ளினவுடன் ஸ்டார்ட் ஆகும் என்று பார்த்தால் ஆகவில்லை. முழுவதும் தள்ளிக்கொண்டுதான் போகவேண்டும் போலிருந்தது. எங்களுடைய புஜபலம் அவ்வளவாகப் போதவில்லை போலிருக்கிறது. எவ்வளவு தள்ளியும் அங்குலம் அங்குலமாகத்தான் கார் நகர்ந்தது.
இதோ ஆயிற்று. இன்னமும் ஒரு ஐந்தடி தள்ளினால் கேட் வந்துவிடும் என்று நினைத்துக்கொண்டே தள்ள, சர்ர்ர்ரென்று பின்புறம் ஒரு அம்பாசிடர் கார் வந்து நிற்க கண் இமைக்கும் நேரத்தில் கதவைத் திறந்துகொண்டு ஓடிவந்தார் கமல்.
எங்களுக்கு நடுவில் வந்தவர் சட்டென்று காரைப்பிடித்துத் தள்ள ஆரம்பிக்க திடீர் வேகத்தில் சரசரவென்று நகர்ந்தது கார்.!
காருக்கு திடீரென்று வேகம் வந்தவுடன் அனிச்சையாகத் திரும்பிப் பார்த்த சுஜாதா கமல் காரைத் தள்ளிக்கொண்டிருக்கிறார் என்பதை அறிந்தவுடன் பதறிவிட்டார். “கமல் நீங்க.....நீங்க....வேணாம் விட்டுருங்க” என்று ஏதேதோ சொல்லவந்தவரை-
“சார் பிரேக்கை கீக்கைப் பிடிச்சுரப் போறீங்க. காரு நின்னுருச்சின்னா அப்புறம் தொந்தரவாயிரும் பேசாம வாங்க” என்று வந்ததும் ஜோக் அடித்தார் கமல்.
நல்லவேளையாக கார் நிறுத்துமிடம் உடனடியாக வந்தது. காரிலிருந்து இறங்கிய சுஜாதா “சாரி கமல்..நீங்க வந்து” என்று திணற-
“நோ......இட்ஸ் எ ப்ளஷர்” என்று கைகுலுக்கினார் கமல். “ஒரு பிரபல எழுத்தாளரின் காரைத் தள்ளுகின்ற பாக்கியம் எந்த நடிகனுக்குக் கிடைக்கும்? எனக்குக் கிடைச்சிருக்கு” என்ற கமல் அப்போதே ஏதோ நெடுநாள் பழகியவரிடம் பேசுவதைப் போல மிக இயல்பாகப் பேச ஆரம்பித்துவிட்டார்.
எல்லோரும் கமலுடைய அறைக்குள் சென்றோம்.
கமலுடைய அறையைப் பார்த்ததும் எல்லாருக்கும் அதிர்ச்சி; வியப்பு! அத்தனை சாதாரணமாக இருந்தது அறை. வெள்ளை விரிப்பு மெத்தையுடன் கூடிய சின்னதொரு கட்டில், தண்ணீர் பானை, நிறைய புத்தகங்கள், சுவரில் மைக்கேல் ஜாக்சன் படம் என்று மிக எளிமையாக இருந்த அறையைப் பார்த்து வியப்பு.
கட்டிலின் தலைமாட்டில் மாட்டப்பட்டிருந்த ‘அலங்காரப்பொருளைப்’ பார்த்து அதிர்ச்சி. “என்னய்யா இது இதை எதுக்கு வச்சிருக்கீங்க?” என்று அதிர்ந்து போய்க் கேட்டார் சுஜாதா.
“சும்மாதான் ஒரு வித்தியாசத்துக்கு இருக்கட்டுமேன்னு வெச்சிருக்கேன்” என்றார் கமல்.
காரணம் கமலின் கட்டிலின் தலைமாட்டில் இருந்தது ஒரு மண்டை ஓடு. நிஜ மனிதனின் மண்டை ஓடு! மிகவும் சிரமப்பட்டு எங்கோ ஒரு சுடுகாட்டில் இருந்து வாங்கிவந்து மாட்டி வைத்திருந்தாராம்.
பின்னர் இருவருக்குமிடையிலான பேச்சு மிகவும் சுவாரசியமாய் அமைந்திருந்தது. வீட்டிற்குள் சென்று தன்னுடைய அண்ணன் சாருஹாசனையும் படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருந்த அனந்துவையும் கூட்டிவந்து எல்லோருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார் கமல்.
அன்று அப்படி ஆரம்பித்த கமல் – சுஜாதா நட்பு சுஜாதாவின் இறுதிக்காலம்வரை மிகவும் நெருக்கமானதாக அமைந்திருந்தது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். 'விக்ரம்' படம் ஆரம்பித்து நிறைய படங்களில் இருவரும் இணைந்திருந்தது மட்டுமல்லாமல் கமல் முதன் முதலாகத் தம்முடைய வீட்டிற்கு கம்ப்யூட்டர் வாங்கியபோது சுஜாதாவைக் கூப்பிட்டுத்தான் பொருத்தித் தரச்சொன்னார் என்பதுவரை மிக நெருக்கம்.
அன்றைக்குப் பேசிக்கொண்டிருந்து விடை பெற்றபோது வாசல்வரை வந்து வழியனுப்பிய கமல் “சார் நானும் கூடவே வரட்டுமா?” என்றார்.
“இல்லை நீங்க ஷூட்டிங் போகணுமில்லையா?” என்று கேட்ட சுஜாதாவிடம்-
“இல்லை வழியில கார் நின்னுருச்சின்னா தள்ளணுமில்ல” என்று கமல் கேட்டது கமலின் அக்மார்க் குறும்பு!
(அமுதவன் பக்கங்கள் தொகுப்பிலிருந்து






















