நான் எம் ஜி ராமச்சந்திரன் பேசுகிறேன்.....
சினிமா
எல்லோரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது
அதற்கு கொஞ்சம் நல்ல மனது வேண்டும்!
அது நாலாயிரம் காசை நாலு பேருக்கும்
நாலு தமையன் மெஷினை நாலு பேருக்கும் தந்து விட்டு
நான் தான் அடுத்த எம்ஜிஆர் என்று தனக்கு தானே
தம்பட்டம் அடித்து கொள்ளக்கூடாது
அதிகாலை 6 மணி.
நடிகர் இயக்குனர் பாண்டியராஜன் வீட்டு டெலிபோன் ஒலித்தது. பக்கத்திலேயே அமர்ந்திருந்த பாண்டியராஜன் ரிசீவரை கையில் எடுத்தார்.
(அது லேண்ட்லைன் ஃபோன் காலம்)
மறுமுனையில், "நான் எம் ஜி ராமச்சந்திரன் பேசுகிறேன்."
உட்கார்ந்திருந்த பாண்டியராஜன் தன்னை அறியாமல் எழுந்து நின்று விட்டார். பதட்டத்தில் வார்த்தைகள் வரவில்லை பாண்டியராஜனுக்கு.
"தலைவரே... வணக்கம்...
சொல்லுங்க தலைவரே..."
இது 1987 ல் நடந்த சம்பவம்.
இதை நடிகர் பாண்டியராஜன் அவர்கள் சொல்ல, நான் அவருக்கு அருகில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன். "எதற்காக சார் எம்ஜிஆர் அந்த நேரத்தில் கூப்பிட்டார் ?"
"அது வந்து ஜான் சார், அப்போதான் எனக்கு முதல் பையன் பிறந்திருந்தான்."
"சரி."
"முந்தின நாள் இரவு பிரசவம்.
நான் அதிகாலையில்தான் வீட்டுக்கு வந்து, லேண்ட் லைன் ஃபோன் மூலமாக உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் குழந்தை பிறந்த தகவலை சொல்ல ஆரம்பித்தேன். எனக்குப் பக்கத்தில் டைரியை வைத்துக் கொண்டு அதில் இருந்த ஒவ்வொரு பெயரையும் நம்பரையும் பார்த்து ஒவ்வொருவராக அழைத்து ஃபோனில் சொல்லிக் கொண்டிருந்தேன்.
ஒரு கையில் போன் ரிசீவர்.
மறு கையில் டைரி.
இப்போது மாதிரி மொபைல் போன் இல்லையே. பெயரை save செய்து வைத்துக் கொள்வதற்கு.
உற்று உற்றுப் பார்த்து, ஒரு பெயர் கூட விடாமல் ஃபோன் செய்தேன்.
ஒரு கட்டத்தில் களைப்பாக இருந்தது.
கையில் இருந்த ரிசீவரை கீழே வைத்தேன். அப்போதுதான் டெலிபோன் மணி அடித்தது.
எனக்கு திகைப்பாக இருந்தது.
நான்தானே ஒவ்வொருவராக அழைத்து அழைத்து, குழந்தை பிறந்த விஷயத்தை சொல்லிக் கொண்டிருக்கிறேன். எனக்கு இப்போது போன் வருகிறதே. இந்த நேரத்தில் அழைப்பது யாராக இருக்கும் ?
குழப்பத்துடனே ஃபோனை கையில் எடுத்து ஹலோ என்றேன்.
மறுமனையில் எம்ஜிஆர்.
எனக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. "தலைவரே தலைவரே.." என்று அடுத்த வார்த்தை வராமல் தவித்துக் கொண்டிருந்தேன்.
"என்ன தலைவரே இவ்வளவு அதிகாலையில் கூப்பிட்டு இருக்கீங்க?"
"உனக்கு ஆண் குழந்தை பிறந்து பிறந்திருக்கிறதாமே ?"
"ஆமாங்க தலைவரே..."
"அம்மாவும் பிள்ளையும் நல்லா இருக்காங்களா ?"
"நல்லா இருக்காங்க,
இந்த நேரத்தில் கூப்பிட்டு விசாரித்ததற்கு ரொம்ப நன்றி தலைவரே !"
"சரி பத்திரமா பாத்துக்கோ"
"தலைவரே இந்த விஷயம் உங்களுக்கு எப்படி...?"
"தினத்தந்தி பேப்பரில் பார்த்து தெரிந்து கொண்டேன். ஏதாவது உதவி வேணும்னா எப்ப வேணும்னாலும் என்னை கூப்பிடு
இப்போ ஃபோனை வைக்கிறேன்"
எம்ஜிஆர் போனை வைத்து விட்டார்.
உடனடியாக பாண்டியராஜன்
அதிகாலையில் வெளிவந்த செய்தித்தாளை கையில் எடுத்து
ஒவ்வொரு பக்கமாகப் புரட்ட ஆரம்பித்தார்.
அதை பாண்டியராஜனே விவரித்தார்.
"ஒவ்வொரு பக்கமா புரட்டி புரட்டி பார்க்கிறேன் ஜான் சார். எந்தப் பக்கத்திலும் அந்தச் செய்தி என் கண்ணில் படவில்லை.
அப்புறமாக உற்றுப் பார்த்தால் ஏதோ ஒரு பக்கத்தில் ஏதோ ஒரு மூலையில் சின்னதாக ஒரு செய்தி
போட்டிருந்தார்கள்.
'நடிகர் பாண்டியராஜனுக்கு ஆண் குழந்தை பிறந்தது' அப்படின்னு...
பத்திரிகை அச்சுக்குப் போன கடைசி நேரத்தில் சேர்த்து இருக்க வேண்டும்.
ரொம்ப ரொம்ப சின்னதாக அந்த செய்தி வந்திருந்தது."
பாண்டியராஜன் தொடர்ந்து சொல்லச் சொல்ல நான் அசையாமல் ஆர்வத்தோடு கேட்டுக் கொண்டிருந்தேன்.
"ஒரு முதலமைச்சர் ஆக இருந்தபோதிலும், அதிகாலையில் செய்தித்தாளில் அந்த சின்னஞ்சிறிய செய்தியைப் பார்த்துவிட்டு, ஒரு சாதாரண நடிகனான என்னை அழைத்து வாழ்த்திய அந்த மனிதரின் அன்பையும் பாசத்தையும் எப்படி என்னால் மறக்க முடியும் ?"
பாண்டியராஜனுக்கு ஏற்பட்ட அதே ஆச்சரியம்தான் எனக்கும் ஏற்பட்டது.
அதோடு வெற்றிகரமான முதலமைச்சராக எம்ஜிஆர் விளங்கிய காரணமும் புரிந்தது.
எம்ஜிஆர் போல ஆட்சியைக் கொடுப்போம் என்று எளிதாகச் சொல்லி விடலாம். ஆனால் எம்ஜிஆரை போல வாழ்வதும் ஆள்வதும் அத்தனை எளிதான காரியம் அல்ல.
அரசியலையும் தாண்டி அவருக்கு
அனைவர் மீதும் அக்கறை இருந்தது.
எந்த நேரத்திலும் விழிப்புணர்வு.
எல்லோரிடத்திலும் அக்கறை.
அதுதான் எம்ஜிஆர்.
அதனால்தான் பாண்டியராஜன் அவர்களின் மனதில் மட்டுமல்ல,
பல லட்சக்கணக்கான மக்களின் மனதில் இன்றும் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் எம்ஜிஆர்.
John Durai Asir Chelliah























