நடிகர் திலகமும்.. நவீன தொழில்நுட்பமும்!
சினிமா
இதுலே நாம பார்க்கப்போறது ஒரு சாதாரண நடிகரை பத்தி இல்ல... இந்திய சினிமாவோட 'தொழில்நுட்பப் புரட்சி'யை தன் தோள் மேல சுமந்த ஒரு சகாப்தத்தை பத்தி. அவர்தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். 1952-ல ஆரம்பிச்சு 90-களோட இறுதி வரைக்கும்,
டெக்னாலஜி விஷயங்கள் சிவாஜி படங்கள்லே எப்படி யூஸ் பண்ணுணாங்க அப்படிங்கறத பத்திதான்.
டெக்னாலஜி வளர வளர அவர் எப்படி தன்னை மாத்திக்கிட்டார்னு விரிவா பார்ப்போம்!
முதல்ல 1952-ல 'பராசக்தி' வந்தப்போ இருந்த டெக்னாலஜி ரொம்ப கம்மி. அப்போல்லாம் இப்ப இருக்கிற மாதிரி குட்டி மைக் கிடையாது. பெரிய மைக்ரோபோன் தான். அதுவும் தூரத்துல தான் இருக்கும்.
சிவாஜி என்ன பண்ணுவார் தெரியுமா? அந்த மைக்ரோபோன் எவ்வளவு தூரத்துல இருக்கு, நாம எவ்வளவு சத்தமா பேசினா அது ரெக்கார்ட் ஆகும்னு ஒரு கால்குலேஷன் வச்சிருந்தாரு. 'பராசக்தி' கோர்ட் சீன்ல அவர் பேசுற அந்த வேகம், அந்த மாடுலேஷன்... அப்போ இருந்த சவுண்ட் இன்ஜினியர்களுக்கே ஒரு பெரிய ஆச்சரியம். எடிட்டிங் கத்தரிக்கோலுக்கு வேலையே வைக்காம, ஒரே டேக்ல பேசி அந்த காலத்து 'டைரக்ட் ரெக்கார்டிங்' முறையை மிரள வச்சவர் நம்ம சிவாஜி.
இந்த டெக்னாலஜி மத்த படங்கள்லயும் இருந்துச்சுதான்.ஆனா சிவாஜி அதை கச்சிதமா கணிச்சு நடிச்சதுதான் டெக்னிகல் டேலண்ட்.
அன்றைய தேதியில சத்தமே வராத உலகத்தரம் வாய்ந்த 'மிட்செல்' கேமராக்களையும், 'வெஸ்ட்ரெக்ஸ்' சவுண்ட் சிஸ்டத்தையும் ஏவிஎம் பயன்படுத்தியதாலதான், சிவாஜி கணேசனின் கணீரென்ற குரலை நம்மால் இன்னைக்கும் இவ்வளவு தெளிவாகக் கேட்க முடியுது".
இந்த படத்தை பொறுத்த வரைக்கும் சிவாஜி சாரே தமிழ் சினிமாவுக்கு கிடைச்ச பெரிய டெக்னாலஜி அப்படின்னுதான் சொல்லணும்.
இன்னைக்கு நாம ஒரு படம் வர்றதுக்கு முன்னாடி 'டிரெய்லர்' பார்க்கிறோம் இல்லையா? அதுக்கு விதை போட்டது 'திரும்பிப்பார்' படம் தான்.
அந்த காலத்துல படத்தோட முக்கியமான காட்சிகளை மட்டும் வெட்டி எடுத்து, அதை ஒரு தனி 'ரீல்' ஆக மாத்தி படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடியே தியேட்டர்கள்ல ஓட விட்டாங்க.
இது அந்த காலத்துலே பெரிய வேலை. எடிட்டிங் டேபிள்ல ஒரு முழு நீளப் படத்துல இருந்து சுவாரசியமான துண்டுகளை மட்டும் பிரிச்சு எடுத்து, அதை ஒரு தனிச் சின்னக் கதையா கோக்குற அந்த 'ப்ரோமோ எடிட்டிங்' (Promo Editing) தொழில்நுட்பம் முதன்முதலா முறையா இந்தப் படத்துல தான் கையாளப்பட்டது.
அந்த காலத்துல தமிழ் படங்கள்னா தமிழ் தான் விளம்பரம் வரும். ஆனா 'திரும்பிப்பார்' படத்துக்கு ஒரு பெரிய வித்தியாசம் செஞ்சாங்க.
ஆங்கில வார்த்தைகளை போட்டு பேப்பர் விளம்பரம் ,போஸ்டர் விளம்பரம் கொடுத்து ஒரு 'கார்ப்பரேட் லெவல்' மார்க்கெட்டிங் டெக்னாலஜியை அப்பவே செஞ்சாங்க.
அந்த நாள் (1954): 1950-களின் டெக்னாலஜி அதிசயம்!
" 1954-லேயே ஹாலிவுட் படங்களுக்கு சவால் விட்ட படம் தான் 'அந்த நாள்'. இதுல அப்படி என்ன டெக்னாலஜி ஸ்பெஷல் தெரியுமா?"
அந்த காலத்துல பாட்டு இல்லாம படம் ஓடும்னு யாருமே நம்பல. ஆனா, கதையோட வேகம் குறையக்கூடாதுன்னு பாட்டே இல்லாம வெறும் பின்னணி இசையை (Background Score) மட்டும் வச்சு படத்தை நகர்த்துனாங்க. இது ஒரு பெரிய 'டெக்னிக்கல்' தைரியம்!
ஒரு கொலையை மூணு பேர் மூணு விதமா சொல்லுவாங்க. ஒவ்வொருத்தர் சொல்லும்போதும் கேமரா ஆங்கிள் மாறும். இது உலகத்தரம் வாய்ந்த ஒரு திரைக்கதை தொழில்நுட்பம்.
படம் முழுக்க ஒரு மர்மம் இருக்கணும்னு, முகத்துல ஒரு பக்கம் மட்டும் வெளிச்சம் தெரியுற மாதிரி 'சைடு லைட்டிங்' கொடுத்தாங்க. இது படத்துக்கு ஒரு 'த்ரில்லர்' லுக்கைக் கொடுத்துச்சு.
பாட்டு இல்லாததால, துப்பாக்கிச் சத்தம், மழைச் சத்தம் இதெல்லாம் நிஜமா கேக்குற மாதிரி இருக்கணும்னு 'வெஸ்ட்ரெக்ஸ்' (Westrex) அப்படிங்கிற நவீன ஒலிக் கருவியை வச்சு ரெக்கார்ட் பண்ணாங்க.
சிவாஜி சார் இதுல கத்திப் பேசாம, மைக்கிற்கு பக்கத்துல வந்து ரொம்ப மெதுவா ரகசியம் பேசுற மாதிரி பேசுவாரு. அந்த மெல்லிய சத்தத்தையும் துல்லியமா பதிவு செஞ்சதுதான் அந்த காலத்து சவுண்ட் டெக்னாலஜி!
"மொத்தத்துல சொல்லணும்னா, 70 வருஷத்துக்கு முன்னாடியே ஒரு 'சவுண்ட் அண்ட் கேமரா மேஜிக்' செஞ்சிருக்காங்கன்னா அது இந்தப் படம் தான்!"
. 'மாஸ்கிங்' மேஜிக் ...
அடுத்து 1958-ல 'உத்தமபுத்திரன்'. அப்போ கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் கிடையாது . ஒரு சிவாஜி இன்னொரு சிவாஜிக்கு கை கொடுக்கணும்னா 'மாஸ்கிங்' அப்படிங்கிற ஒரு வித்தையை பயன்படுத்துவாங்க.
இதுல என்ன ட்ரிக்னா, ரெண்டு சிவாஜியும் ஒரே இடத்துல ஜாய்ண் ஆகறப்போ ,அதாவது ரெண்டு உருவமும் ஒரே பிரேமுல தொடறது ,கட்டிபிடிக்கறது ,
சண்டை போடற மாதிரி காட்சிகள்.இதுலே ஒரு இன்ச் விலகினாலும் அந்த ஷாட் சொதப்பிடும். ஆனா சிவாஜி அந்த இடத்துல ஆளே இல்லாமலேயே, அங்க ஒருத்தர் இருக்கிறதா நினைச்சு துல்லியமா செஞ்சிருப்பார்.இதுக்கு முன்னால வந்த படங்கள்லயும் ரெண்டு வேஷம் எடுக்கப்பட்டிருக்கு. ஆனாலும் உத்தம புத்திரன் ரொம்பவே ஷார்ப்.அது சிவாஜியோட ஆக்டிங்காலே.
இந்த படத்துலேயே இன்னொரு சிறப்பு விஷயம் ,தமிழ் சினிமாலே அதுக்கு முன்னாலே எந்த படத்திலயும் செய்யப்படாத ஒரு டெக்னாலஜியை வெச்சு படம் எடுத்திருக்காங்க. அது என்னான்னா "ஜூம் லென்ஸ்" காமிராவுலே எடுக்கப்பட்ட ஒரு பாடல் காட்சி. உன்னழகை கன்னியர்கள் கண்டதினாலே பாட்டுலே இந்த ஜூம் லென்ஸ் டெக்னாலஜியை வெச்சு சில வரிகளை ஷூட் பண்ணியிருக்காங்க. அப்ப தமிழ்லே இந்த காமிரா தொழில் நுட்ப வசதி கிடையாது. மைசூர் பிருந்தாவன் கார்டன்லே சூட்டிங்கை வேடிக்கை பார்த்தவெளி நாட்டுக்காரர் ஒருத்தர் வெச்சிருந்த காமிராவை வாங்கி இந்த காட்சியை எடுத்தாங்க. இந்த பாடல் காட்சி தான் முதன் முதலா ஜூம் லென்ஸ்லே படம் பிடிக்கப்பட்ட காட்சி.
தமிழ் படங்கள் எல்லாம் கறுப்பு வெள்ளையிலே எடுத்துட்டு இருந்த காலம்.ஆனா, கட்டபொம்மன் படத்தை "டெக்னிகலர்" (Technicolor)-ல எடுத்தாங்க. இது ரொம்ப காஸ்ட்லியான விஷயம்.
படத்தை லண்டனுக்கு அனுப்பிதான் பிராசஸ் பண்ணுனாங்க.
இங்கே இந்தியாவுல கலர் ப்ராசஸ் லேப் வசதி அப்ப இல்ல.
சென்னையில ஷூட் பண்ணிட்டு, அந்த பிலிம் சுருள்களை அப்படியே பாதுகாப்பா பேக் பண்ணி லண்டன்ல இருக்குற டெக்னிகலர் லேப்க்கு பிளைட்ல அனுப்புவாங்க.
பிலிம் அங்க போய் சேர்ற வரைக்கும் டைரக்டருக்கோ, சிவாஜி சாருக்கோ தாங்கள் நடிச்சது எப்படி வந்திருக்குன்னு தெரியாது. அங்க இருந்து "பிரிண்ட் ஓகே"ன்னு தந்தி (Telegram) வந்தாதான் இவங்களுக்கு உயிரே வரும். ஒருவேளை அங்க ஏதாவது தப்பாயிருந்தா, மறுபடியும் இங்க செட் போட்டு முதல்ல இருந்து எடுக்கணும். அவ்ளோ காஸ்ட்லியான ப்ராசஸ் இது!
படத்துல கட்டபொம்மனோட கலர் டிரஸ் கண்ணை பறிக்கிற மாதிரி இருக்கும்.
காரணம்: டெக்னிகலர் முறையில எடுக்கும்போது கலர்ஸ் ரொம்ப "சாச்சுரேட்டடா" (Saturated) இருக்கும். அதாவது, உண்மையான கலரை விட இன்னும் கொஞ்சம் தூக்கலா, ராயலா காட்டும். இதனாலதான் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையோட மதில் சுவர்கள், அந்த காலத்து ராஜ உடைகள் எல்லாம் 65 வருஷம் கழிச்சு இப்போ டிவில பார்த்தா கூட புதுசு மாதிரியே ஜொலிக்குது.
.
1964-லேயே ஹாலிவுட் படங்களுக்கு டஃப் கொடுத்த 'புதிய பறவை'
அந்த காலத்துல முக்கால்வாசி படங்கள் கறுப்பு-வெள்ளையில தான் வரும். ஆனா, இந்தப் படத்தை Eastmancolor-ல எடுத்தாங்க. இது சாதாரண கலர் கிடையாது; கலர் ரொம்ப நேர்த்தியா, நிஜமா தெரியுற மாதிரி இருக்கும். படத்தோட ஆரம்பத்துல வர்ற அந்த ஊட்டி லொகேஷன் ஆகட்டும், இல்ல அந்த பங்களா ஆகட்டும்... அந்த கலர் டெக்னாலஜி தான் படத்துக்கு ஒரு ராயல் லுக் கொடுத்துச்சு.
இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படம்ங்கறதால, சும்மா வெளிச்சமா எடுக்காம 'Film Noir' அப்படின்னு சொல்லப்படுற இருட்டும் வெளிச்சமும் கலந்த டெக்னாலஜியைப் பயன்படுத்தினாங்க.
பேய்ப் படம் மாதிரி இல்லாம, ஒரு மர்மமான சூழலை உருவாக்க நிழல்களை (Shadows) ரொம்ப அழகா கேமராவுல பிடிச்சிருப்பாங்க.
இந்தக் கால பாஷையில் சொல்லனும்னா மிரட்டி இருப்பாங்கன்னு சொல்லலாம்.
மியூசிக்ல அப்போவே ஒரு பெரிய புரட்சி பண்ணாங்க.
"எங்கே நிம்மதி" பாட்டுல நூற்றுக்கணக்கான இசைக்கருவிகளை ஒண்ணா வாசிக்க வச்சு அதை மிக்ஸ் பண்ணாங்க. அந்த பாட்டுல வர்ற அந்த ரீ-ரிக்கார்டிங் தரம் அப்போதைய இந்திய சினிமாவுல ரொம்ப அட்வான்ஸ்டு.
இந்தப் பட மேக்கிங்கை பத்தி
சுருக்கமா சொல்லணும்னா, 1964-லேயே ஒரு 20 வருஷம் அட்வான்ஸா யோசிச்சு எடுத்த படம் இது!
'நவராத்திரி' படத்தோட கிளைமேக்ஸ் சீன்ல ஏழு சிவாஜியும் ஒரே ரூம்ல ஒன்னா உக்காந்து பேசுறதை இப்ப பார்த்தாலும் ஆச்சரியமா இருக்கும். கம்ப்யூட்டர் கிராபிக்ஸே இல்லாத அந்த காலத்துல இதை எப்படி எடுத்தாங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?
ஒரே ரூம்ல ஏழு பேரும் ஒண்ணா இருக்குற மாதிரி தெரிஞ்சாலும், நிஜத்துல அந்த இடத்துல ஒரு நேரத்துல ஒரு சிவாஜி மட்டும்தான் ஒரு குறிப்பிட்ட இடத்துல உக்காந்து நடிப்பாரு. மத்த இடம் காலியா இருக்கும். மத்த கேரக்டரை பார்த்து பேசுறதுக்காக செட்ல அங்கங்க 'மார்க்' (Marks) வச்சிருப்பாங்க. அதை பார்த்துதான் சிவாஜி பேசுவாரு. இதுக்கு அவரோட அபாரமான நடிப்புதான் முக்கிய காரணம்.
ஆப்டிகல் பிரிண்டர் (Optical Printer):
கம்ப்யூட்டர் வர்றதுக்கு முன்னாடி உலக சினிமாவுல இருந்த ஒரே பெரிய ஆயுதம் இந்த மெஷின்தான். இது பாக்குறதுக்கு ஒரு பெரிய ப்ரொஜெக்டர் மாதிரியும், கேமரா மாதிரியும் இருக்கும்.
ஒவ்வொரு சிவாஜியும் நடிச்ச பகுதியைத் தனித்தனி 'ஃபிலிம் ரீல்'ல படம் பிடிப்பாங்க.
அப்புறம் ஒரு புது ரீலை எடுத்து, அதுல முதல்ல ஒரு சிவாஜியை பிரிண்ட் பண்ணுவாங்க. திரும்ப அதே ரீலை ரீ-வைண்ட் பண்ணி ரெண்டாவது சிவாஜியை பிரிண்ட் பண்ணுவாங்க. இப்படி ஒன்பது பேரையும் ஒண்ணுக்கு மேல ஒண்ணா 'லேயர்' பண்ணி ஒரே ஸ்கிரீன்ல வரவழைப்பாங்க.
மேட் ஷாட்ஸ் (Matte Shots):
ஒன்பது பேரும் உக்காந்திருக்கும் போது ஒருத்தரோட உருவம் இன்னொருத்தர் மேல 'மங்கலா' (Ghost effect) தெரியக்கூடாது. அதுக்காக 'மேட் ஷாட்ஸ்' முறையில ஒரு சிவாஜி இருக்குற இடத்தை மட்டும் தனியா பிரிச்சு (Masking), மத்த இடத்துல மத்த சிவாஜிகளைத் துல்லியமா உக்கார வைப்பாங்க.
இந்த மெஷின்ல வேலை செய்றது ரொம்ப கஷ்டம். ஒன்பது முறை பிரிண்ட் போடும்போது ஒரு சின்ன தூசு லென்ஸ்ல விழுந்தா கூட மொத்த மெயின் ரீலும் வீணாகிடும்.
அதனாலதான் ரொம்ப கிளீனான ஏசி ரூம்ல (Dark room) வச்சு இந்த வேலையை செஞ்சாங்க.
சுருக்கமா சொல்லப்போனா: நவராத்திரி படத்தோட அந்த சீன் சிவாஜி சாரோட அசாத்திய நடிப்புக்கும், அந்த காலத்து டெக்னீஷியன்களோட அறிவாற்றலுக்கும் ஒரு சான்று!
1969-லேயே தெய்வமகன் படத்துல மிரட்டலான சில டெக்னாலஜி யூஸ் பண்ணியிருக்காங்க.
மூணு சிவாஜியும் சந்திக்கிற மாதிரி ஒரு சீன் வரும். அதுல கையும் கையும் கரெக்டா மீட் பண்ணனும். இதுக்கு எடிட்டர் ரொம்ப நுணுக்கமா ஒர்க் பண்ணியிருப்பாரு. ரொம்ப அசர வெச்ச மாஸ்க் ஷாட் இது.
அந்த காலத்துல கம்ப்யூட்டர் கிடையாதுங்கிறதால, ரீலை கையாலயே வெட்டி ஒட்டி இந்த மேஜிக்கை பண்ணியிருக்காங்க.
சுருக்கமா சொல்லணும்னா, அந்த காலத்துல இது ஒரு டெக்னாலஜிக்கல் மார்வெல்!
சங்கர் ,'கண்ணன்' கேரக்டரோட அந்த விகாரமான முகத்தை உருவாக்குறதுக்கு அந்த காலத்துல இருந்த பெஸ்ட் மேக்கப் மெட்டீரியல்ஸ் யூஸ் பண்ணிருக்காங்க. நேச்சுரலா வர்றதுக்காக லேடெக்ஸ் (Latex) மாதிரியான பொருட்களை வச்சு ஒரு 'புரோஸ்தெடிக்' லுக் கொடுத்திருப்பாங்க.
1970-கள்ல தியேட்டர் ஸ்கிரீன் ரொம்ப பெருசாச்சு. அதுதான் 'சினிமாஸ்கோப்' (CinemaScope). இதோட முதல் தமிழ் படம் 'ராஜராஜ சோழன்'.
ஸ்கிரீன் பெருசானா நடிகர் சின்னதா தெரிவாங்கன்னு அந்த காலத்துலே ஒரு தப்பான பேச்சு உண்டு. ஆனா உண்மை அது இல்ல! ஸ்கிரீன் பெருசாகும்போது பின்னணி (Background) அதிகமா தெரியும். அந்தப் பிரம்மாண்டமான திரையில தன்னைத் தொலைச்சுடாம, தன் உடல் மொழியால (Body Language) அந்த முழு ஸ்கிரீனையும் ஆக்கிரமிச்சவர் தான் நம்ம நடிகர் திலகம். அதுக்குச் சிறந்த உதாரணம் 'ராஜராஜ சோழன்
கேமரா ரொம்ப தூரத்துல (Wide Shot) இருந்தாலும், அவரோட கம்பீரமான நடை, கைகளை விரிச்சுப் பேசுற அந்த 'பாடி லாங்குவேஜ்' அந்த டெக்னாலஜிக்கு ஒரு புது உயிர் கொடுத்துச்சு.டெக்னாலஜி வளர வளர சிவாஜியும் அந்த டெக்னாலஜிக்கு தகுந்தபடி தன்னை மாத்தி நடிச்சார் .
தொழில்நுட்பம் என்பது வெறும் கருவிதான். ஆனால், அந்த கருவியையே தன் நடிப்புத் திறமையால் மிரள வைத்தவர் நடிகர் திலகம்.
மைக்ரோபோன் எங்கே இருக்கிறது என்று தேடிய காலத்திலேயே, தன் குரலால் ஒலியை அளந்த 'ஆடியோ இன்ஜினியர்' அவர்! கேமரா லென்ஸின் நுணுக்கம் தெரியாத காலத்திலேயே, 'ஜூம்' லென்ஸுக்கும் 'வைட் ஷாட்'டிற்கும் ஏற்ப தன் உடல்மொழியை மாற்றிக்கொண்ட 'விஷுவல் எடிட்டர்' அவர்!
இன்று ஏகப்பட்ட கிராபிக்ஸ் வசதிகள் வந்திருக்கலாம். ஆனால், எந்த தொழில்நுட்பமும் இல்லாத அந்த காலத்திலேயே, வெறும் உணர்ச்சிகளால் நம் கண்களுக்கு மல்ட்டி எஃபெக்ட் கொடுத்தவர் சிவாஜி கணேசன்.
"தொழில்நுட்பம் வளர வளர... அது மனிதனை மிஞ்சும் என்பார்கள். ஆனால், தொழில்நுட்பம் வளர வளர... அதைத் தன் கைக்குள் அடக்கி, ஒவ்வொரு பிரேமிலும் ஒரு சரித்திரத்தைப் படைத்தவர் தான் இந்த சிம்மக்குரலோன்!"
சினிமாவுல எத்தனையோ 'டெக்னாலஜி '' வரலாம், போகலாம். ஆனா, தமிழ் சினிமாவுக்கு கிடைச்ச மிகச்சிறந்த 'நேச்சுரல் டெக்னாலஜி' நம்ம நடிகர் திலகம் மட்டும்தான்!
செந்தில்வேல் சிவராஜ்























