பணிக்கு தாமதமாக வந்ததை போட்டுக்கொடுத்த AI மேனேஜர் - ஊழியர் பணிநீக்கம் - வரலாற்றில் முதல்முறை!
மனித ஊழியர் ஒருவரை செயற்கை நுண்ணறிவு மேலாளர் மதிப்பிட்டுப் பணிநீக்கம் செய்யப் பரிந்துரைத்தது வரலாற்றிலேயே இதுவே முதல் முறை எனக் கூறப்படும் நிலையில், இது தொடர்பான செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் ‘ஆண்டன் மார்க்கெட்’ என்ற சில்லறை விற்பனைக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் நிர்வாகத்தை கவனிக்க ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் 'கிளாட்' தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட ஏ.ஐ. மேலாளரை உருவாக்கி உள்ளனர். அதற்கு ‘லூனா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த ஏ.ஐ. மேலாளருக்கு வரவு-செலவு கணக்கு பார்ப்பது, இணைய வசதியை அணுகுவது மற்றும் நிர்வாகம் செய்யவும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த கடையில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் 17 முறை பணிக்கு தாமதமாக வந்துள்ளார். மேலும், பணிநேரத்தில் வெளியே சென்றது உள்ளிட்ட விதிமீறல்களிலும் அவர் ஈடுபட்டுள்ளார். இந்தச் செயல்களைக் கவனித்த ஏ.ஐ. மேலாளர் லூனா, அந்த ஊழியரைப் பணி நீக்கம் செய்ய பரிந்துரை செய்தது.
அந்த பரிந்துரையை, ஆண்டன் லேப்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மீண்டும் ஒருமுறை சரிபார்த்து, ஊழியரை பணிநீக்கம் செய்தனர். மனித ஊழியர் ஒருவரை செயற்கை நுண்ணறிவு மேலாளர் மதிப்பிட்டுப் பணிநீக்கம் செய்யப் பரிந்துரைத்தது வரலாற்றிலேயே இதுவே முதல் முறை எனக் கூறப்படும் நிலையில், இது தொடர்பான செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.























