ஜனநாயகன் படம் பகவந்த் கேசரி ரீமேக் தான்.. - மனம் திறந்த இயக்குநர் அனில் ரவிபுடி
சினிமா
ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'ஜன நாயகன்' ஜனவரி 9 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருந்த நிலையில் தணிக்கை சான்று வழங்கப்படாததால் கடைசி நேரத்தில் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். மேலும் 'ஜன நாயகன்' படத்திற்கு தணிக்கை சான்று வழங்கப்படாததற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
'ஜனநாயகன்' திரைப்படத்தின் டிரெய்லரின் பல காட்சிகள் பகவந்த் கேசரி படத்துடன் ஒத்துப்போனது. இதனையடுத்து 'ஜனநாயகன்' படம் சுமார் 80% 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் எனும் கருத்து சமூக வலைதளங்களில் வைரலானது
இதனால் பாலகிருஷ்ணா நடிப்பில் தெலுங்கில் மாபெரும் வெற்றியை பெற்ற பகவந்த் கேசரி Amazon Prime OTT தளத்தில் டிரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்து அசத்தியது.
இந்நிலையில், 'பகவந்த் கேசரி' படத்தின் அடிப்படை கருவை மட்டும் வைத்துக்கொண்டு `ஜனநாயகன்' படத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்று 'பகவந்த் கேசரி' இயக்குநர் அனில் ரவிபுடி தெரிவித்துள்ளார்.
அண்மையில் கொடுத்த நேர்காணலில் பேசிய அனில் ரவிபுடி, "'பகவந்த் கேசரி' படத்தின் முதல் 20 நிமிடங்கள், இடைவேளை மற்றும் இரண்டாம் பாதியின் சில பகுதிகள் என சில விஷயங்கள் மட்டுமே ஜன நாயகன் படத்தில் அப்படியே இருக்கும். மற்றபடி வில்லன் கதாபாத்திரத்தை முழுமையாக மாற்றி, ரோபோ மற்றும் Sci-Fi அம்சங்களைச் சேர்த்துள்ளனர். தமிழ் ரசிகர்களுக்கு அது கண்டிப்பாக ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும்" என்று தெரிவித்தார்.























