உலக நாடுகள் அதிர்ச்சி - அமெரிக்க விசா கொள்கையில் பெரிய மாற்றம்
இலங்கை
ஜனவரி 21 முதல் ஈரான், ரஷ்யா மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 75 நாடுகளுக்கான குடியேற்ற விசா வழங்கும் நடைமுறைகளை அமெரிக்கா இடைநிறுத்தவுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை திணைக்களம் வெளியிட்டுள்ள குறிப்பாணையின்படி, ஜனவரி 21 முதல் 75 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு குடியேற்ற விசாக்கள் வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் ஈரான், ஈராக், ரஷ்யா, ஆப்கானிஸ்தான், பிரேசில், எகிப்து மற்றும் நைஜீரியா உள்ளிட்ட முக்கிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
விசா விண்ணப்பதாரர்களைப் பரிசோதிக்கும் முறைகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை மறுஆய்வு செய்யும் வரை, தற்போதைய சட்டங்களின் கீழ் விசாக்களை நிராகரிக்குமாறு தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சர்வதேச செய்தி நிறுவனங்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன. இருப்பினும், இந்த இடைநிறுத்தம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை.
இதேவேளை தற்போதைய தகவல்களின்படி, அமெரிக்கா விசா நடைமுறைகளை நிறுத்தி வைத்துள்ள 75 நாடுகளின் பட்டியலில் இலங்கை அதிகாரபூர்வமாக இடம்பெறவில்லை.
இலங்கை இந்தப் பட்டியலில் இல்லாவிட்டாலும், அமெரிக்காவின் புதிய நிர்வாகம் (ட்ரம்ப் நிர்வாகம்) அனைத்து நாடுகளுக்குமான “Extreme Vetting” எனப்படும் தீவிர பாதுகாப்புப் பரிசோதனைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனால் இலங்கை மாணவர்களுக்கான மற்றும் சுற்றுலா (B1/B2) விசா நேர்காணல்கள் மற்றும் அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம் என கூறப்படுகிறது.
பட்டியலில் உள்ள நாடுகளுடன் (உதாரணமாக ஈரான், நைஜீரியா, ரஷ்யா) வர்த்தகம் அல்லது கல்வித் தொடர்பு வைத்திருக்கும் இலங்கையர்களுக்கு விசா பெறுவதில் கூடுதல் கேள்விகள் கேட்கப்படலாம். அமெரிக்காவைத் தொடர்ந்து பல வளர்ந்த நாடுகளும் தங்களது குடியேற்றக் கொள்கைகளை இறுக்கமாக்கியுள்ளன.
தற்காலிகக் குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை (International Students & Work Permits) 20% ஆல் கனடா குறைத்துள்ளது. குறிப்பாக, குறைந்த வருமானம் கொண்ட மாணவர்களுக்கு விசா வழங்குவதை கனடா மட்டுப்படுத்தியுள்ளது.
மாணவர் விசாக்களுக்கான ஆங்கில மொழித் தகைமையை (IELTS/PTE) அவுஸ்திரேலியா அதிகரித்துள்ளதுடன், போலி கல்வி நிறுவனங்கள் மூலம் விசா பெறுவதைத் தடுக்க ‘Genuine Student’ என்ற புதிய கடுமையான சோதனையை அமல்படுத்தியுள்ளது.
சுகாதாரப் பணியாளர்கள் தங்களது குடும்பத்தினரை அழைத்து வருவதற்கான தடையை பிரித்தானியா தொடர்ந்து நீடித்து வருகிறது. மேலும், வேலை விசா பெறுவதற்கான குறைந்தபட்ச ஊதிய வரம்பையும் கணிசமாக உயர்த்தியுள்ளது.






















