• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெனிசுலா எண்ணெய் முதல் முறையாக விற்பனை செய்த அமெரிக்கா

வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ (Nicolas Maduro) கைது செய்யப்பட்ட சில வாரங்களுக்குப் பின்னர், முதன்முறையாக அந்த நாட்டு எண்ணெயை அமெரிக்கா விற்பனை செய்துள்ளதாக வெளிநாட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த எண்ணெய் விற்பனையின் மதிப்பு 500 மில்லியன் டொலர் ஆகும் எதிர்வரும் நாட்களில் இதுபோன்ற மேலும் பல விற்பனைகள் எதிர்பார்க்கப்படுவதாக அடையாளம் தெரியாத அதிகாரி ஒருவர் ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

மற்றொரு அறிக்கையின்படி, இந்த விற்பனை மூலம் கிடைத்த வருமானம் கட்டாரில் உள்ள ஒரு வங்கி உட்பட அமெரிக்க வங்கி கணக்குகளில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த முழுத் தொகையும் தற்போது அமெரிக்க அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெள்ளை மாளிகையின் ஊடகத் தொடர்பாளர் டெய்லர் ரோஜர்ஸ் (Taylor Rogers) கூறுகையில், "போதைப்பொருள் பயங்கரவாதி என்று அறியப்படும் நிக்கோலஸ் மதுரோவின் கைதுக்குப் பின்னர், ஜனாதிபதி ட்ரம்ப் இந்த எரிசக்தி ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளார்," என்றார்.

இது அமெரிக்க மற்றும் வெனிசுவேலா மக்களுக்குப் பயனளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். ட்ரம்ப் நிர்வாகம் வெனிசுவேலாவில் தனியார் முதலீடுகளை ஊக்குவிக்கவும் பணியாற்றி வருகிறது.

வெனிசுவேலாவின் எண்ணெய் உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப, முன்னெப்போதும் இல்லாத வகையில் முதலீடு செய்ய முன்வரும் எண்ணெய் நிறுவனங்களுடன் ட்ரம்பின் குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ரோஜர்ஸ் மேலும் தெரிவித்தார்.

மேலும் கடந்த வாரம், பல அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்களை வெள்ளை மாளிகைக்கு அழைத்த ட்ரம்ப், வெனிசுவேலாவின் எண்ணெய் துறையில் முதலீடு செய்ய அவர்களை ஊக்குவித்தார்.

அந்தச் சந்திப்பில், நிறுவனங்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உறுதியளித்த ட்ரம்ப், அதற்கான தேவையான நிதியைத் தனியார் வணிகங்களே வழங்க வேண்டும் என்றும், அமெரிக்க அரசு அதற்காகப் பணம் செலவழிக்காது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
 

Leave a Reply