சுவிசில் பெருந் துயராக மாறிய புத்தாண்டுக் கொண்டாட்டம்
சுவிற்சர்லாந்து நாட்டில் மிகவும் கோலாகலமாக நடைபெற்ற புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் மிகவும் துயரமான விபத்து ஒன்று நடைபெற்றிருக்கின்றது. வலே மாநிலத்தில் உள்ள பனிச்சறுக்கு விளையாட்டுக்குப் பேர்போன கிரான்-மொன்ரானா எனுமிடத்தில் அமைந்துள்ள மதுபான நிலையம் ஒன்றில் நடைபெற்ற புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது ஏற்பட்ட தீவிபத்தில் 40 பேர் மரணத்தைத் தழுவியதுடன் 116 பேர் வரை காயங்களுக்கும் இலக்காகி இருந்தனர். யனவரி முதலாம் திகதி அதிகாலை 1.30 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்துக்கு, கொண்டாட்டங்களின் போது ஏற்றப்பட்ட மெழுகுவர்த்தியே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொண்டாட்டத்தின் போது திறக்கப்பட்ட சாம்பெய்ன் போத்தலில் இருந்து வெளியான வாயு, தீயுடன் உரசிக் கொண்டதைத் தொடர்ந்து, நிகழ்வு நடைபெற்ற மூடப்பட்ட மண்டபத்தின் கூரையில் பற்றிக் கொண்ட தீ, அங்கிருந்த மதுபானங்கள் உள்ளிட்ட வெடிக்கக் கூடிய திரவங்கள் காரணமாக கண நேரத்தில் பெரும் வெடிப்பாக மாறி, பங்கேற்பாளர்கள் என்ன நடைபெறுகின்றது என உணர்வதற்கு முன்னதாகவே பெரும் அநர்த்தமாக மாறியது.
சுவிஸ் நாட்டின் வரலாற்றிலேயே மிக மோசமான விபத்தாகப் பதிவாகியுள்ள இந்த அநர்த்தத்தில் மரணத்தைத் தழுவிய மற்றும் காயங்களுக்கு இலக்கான அனைவரும் இளையவர்கள் என்பது கூடுதல் சோகத்துக்குக் காரணமாகியது. கொல்லப்பட்டவர்களில் 21 பேர் சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள். 9 பேர் பிரான்ஸ் பிரஜைகள். அறுவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்கள். பெல்ஜியம், போர்த்துக்கல், ருமேனியா மற்றும் துருக்கி நாட்டைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 40 பேர் மரணத்தைத் தழுவினர். கொல்லப்பட்டவர்கள் யாவரும் 14 வயது முதல் 39 வயதுடையோராக உள்ளனர். இதில் அரைவாசிப் பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காயமடைந்தோரில் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த 69 பேரும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 23 பேரும், இத்தாலி நாட்டைச் சேர்ந்த 10 பேரும் உள்ளனர். இது தவிர, சேர்பியா (04), போலந்து (02), மற்றும் பெல்ஜியம், போர்த்துக்கல், பொஸ்னியா, செக் குடியரசு, லக்ஸம்பேர்க், பிலிப்பைன்ஸ், அவுஸ்திரேலியா, கொங்கோ குடியரசு ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என 116 பேர் காயங்களுக்கு இலக்காகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களுள் 83 பேர் கடுமையான எரிகாயங்களுக்கு இலக்காகி உள்ளனர். இவர்களுள் 24 பேர் பெல்ஜியம், பிரான்ஸ், யேர்மனி, இத்தாலி மற்றும் போலந்து ஆகிய நாடுகளுக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
விபத்து நடைபெற்ற செய்தி கிடைத்ததும் காவல் துறையும், மீட்புக் குழுவும் ஒருசில நிமிடங்களிலேயே சம்பவ இடத்தைச் சென்றடைந்தன. 150 வரையான உத்தியோகத்தர்கள் கலந்து கொண்ட இந்த மீட்புப் பணியில் 13 உலங்கு வானூர்திகளும், 40 அம்புலன்ஸ் வண்டிகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. காயமடைந்தவர்கள் உடனடியாக அருகே இருந்த சியோன் மருத்துவமனைக்கும், தீக் காயங்களுக்கு உள்ளானவர்களைப் பராமரிப்பதற்கென விசேட வசதிகளைக் கொண்ட பிரெஞ்ச் பிராந்தியத்திலுள்ள லவுசான் மற்றும் யேர்மன் பிராந்தியத்தில் உள்ள சூரிச் மருத்துவமனைகளுக்கும் கொண்டு செல்லப்பட்டனர். தன்னார்வலர்களும் மீட்புப் பணிகளில் பேருதவி புரிந்தனர். இந்த மீட்புப் பணிகளில் அயல் நாடான இத்தாலிய விமானப் படையினரும் பங்கெடுத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவத்தையொட்டி குறித்த மதுபான நிலையத்தின் உரிமையாளரான ஜக்ஸ் மொராட்டி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் நடைபெற்று ஒன்பது தினங்களுக்குப் பின்னரேயே இவர் கைது செய்யப்பட்டமை பலத்த விமர்சனங்களைச் சந்தித்துள்ள அதேவேளை அவரது இணையரான ஜெசிக்கா மொராட்டி கைது செய்யப்படாமல் உள்ளமையும் கண்டனங்களை எதிர்கொண்டுள்ளது.
மறுபுறம், ஜக்ஸ் மொராட்டியின் குற்றப் பின்னணி தொடர்பாகவும், அவரிடம் உள்ள அளவுக்கு அதிகமான சொத்துகள் தொடர்பாகவும் ஊடகங்களில் செய்திகளும், கேள்விகளும் வெளியாகி உள்ளன.
பிரான்ஸ் நாட்டுக்குச் சொந்தமான மத்தியதரைக்கடல் பிராந்தியத்தில் உள்ள தீவான கோர்சிகாவில் பிறந்தவர் மொராட்டி. 49 வயது நிரம்பிய இவர் தனது 30 வயதில் சுவிஸ் நாட்டுக்கு வந்து ஜெனீவாவில் இரவு விடுதிகளில் பணியாற்றி உள்ளார். தொர்ந்து, நிலம் வாங்கி விற்றல் வர்த்தகத்தில் ஈடுபட்ட இவர் அது தொடர்பான முறைகேடுகள் காரணமாக காவல்துறையால் கைது செய்யப்பட்டு ஒரு வருட சிறைத் தண்டனைக்கு ஆளாகியுள்ளார். விடுதலையின் பின்னர் தனது இணையரோடு சேர்ந்து தற்போது உள்ள மதுபான விடுதியை ஆரம்பித்து நடத்தி வந்துள்ளார். பெயருக்கு மதுபான விடுதியை நடத்தி வந்தாலும் இவர் பாலியல் தொழிலாளிகளை வைத்து பெரும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இவரது உல்லாச வாழ்க்கையும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
கிரான்-மொன்ரானா அநர்த்தம் தொடர்பான செய்திகள் வெளியாகிய உடனேயே நாட்டில் நடைபெற்ற அனைத்துக் கொண்டாட்டங்களும் இரத்துச் செய்யப்பட்டன. நாட்டின் ஜனாதிபதியான கை பார்மலின் தனது புத்தாண்டுச் செய்தி வழங்கலை இரத்துச் செய்தார். இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நோக்குடன் நாட்டின் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டது. தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு துக்கதினம் பிரகடனம் செய்யப்பட்டது. 9ஆம் திகதி தேசிய நிகழ்வாக துக்கதினம் அனுட்டிக்கப்பட்டது. உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு நாட்டின் அனைத்துத் தேவாலயங்களிலும் மணியோசை எழுப்பப்பட்டது. அனைத்து அலுவலகங்கள் மற்றும் பணியிடங்களில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மார்ட்டினி நகரில் உள்ள கண்காட்சி மண்டபத்தில் நடைபெற்ற பிரதான அஞ்சலி நிகழ்வில் சுவிஸ் ஜனாதிபதி கை பார்மலின், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், இத்தாலிய ஜனாதிபதி சேர்கியோ மட்டரெல்லா, பெல்ஜிய பிரதமர் பாரட் டே வெவர் ஆகியோர் உள்ளிட்ட அரச பிரதிநிதிகளும், ராஜதந்திரிகளும் கலந்து கொண்டனர். பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் விபத்தையடுத்து துரிதமாக மீட்புப் பணியில் ஈடுபட்ட உத்தியோகத்தர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
விபத்துகள் எப்போதும் எதிர்பாராமல் சம்பவிப்பவையே. ஆனால், ஒவ்வொரு விபத்தும் மனித குலத்துக்கான படிப்பினையே. சுவிசில் புத்தாண்டு தினத்தன்று நடைபெற்ற விபத்தும் அத்தகையதே. இந்த விபத்தை ஒட்டி சுவிஸ் சமூகத்தில் பல்வேறு கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதைப் பார்க்க முடிகின்றது. குறிப்பாக உணவகங்கள், மதுபான விடுதிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட வேண்டிய பரிசோதனைகள், ஆய்வுகள் தொடர்பில் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் பல்வேறு தரப்பில் இருந்தும் முன்வைக்கப்பட்டு வருவதைப் பார்க்க முடிகின்றது. தொடர்ச்சியான கண்காணிப்பு ஒன்றே விபத்துக்களைத் தவிர்ப்பதற்கான முன்நிபந்தனையாகக் கருதப்படும் நிலையில், விபத்து நடைபெற்ற உணவகத்தில் முறையான கண்காணிப்புகள், பரிசோதனைகள் உரிய காலத்தில் நடத்தப் பட்டிருந்தால் விபத்து தடுக்கப்பட்டிருக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இது விடயத்தில் மதுபான விடுதியின் உரிமையாளருக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. தனது விடுதியில் கொண்டாட்டத்துக்கு இடமளித்த அவர் எதிர்பாராத விபத்து ஏற்படும் பட்சத்தில் குழுமியுள்ள விருந்தினர்கள் துரிதமாக வெளியேற வாய்ப்புகள் உள்ளதா என்பது தொடர்பில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். அளவுக்கு அதிகமாகப் பணம் சம்பாதிக்க நினைக்கும் ஒருவரிடம் இத்தகைய பண்பை எதிர்பார்க்க முடியாது என்பதே இது விடயத்தில் மக்களதும், ஊடகங்களதும் கருத்தாக இருக்கிறது.
மறுபுறம், தனியாக வெளியே சென்று புத்தாண்டு உள்ளிட்ட கொண்டாட்டங்களில் நண்பர்களோடு கலந்து கொள்ளும் இளையோரின் வயது வரம்பு தொடர்பாகவும் சமூகத்தில் விவாதங்கள் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகின்றது. மரணமடைந்தவர்களில் அரைவாசிப் பேர் 18 வயதுக்கும் குறைவானவர்களாக உள்ள நிலையில் இந்த இளையோரின் பெற்றோரின் பொறுப்பு தொடர்பான கேள்விகளும் எழுப்பப்பட்டு உள்ளன.
உலகின் பாதுகாப்பான நாடுகளுள் ஒன்றாகக் கருதப்படும் சுவிஸ் நாட்டில் நடைபெற்ற இந்த அநர்த்தம் நம்ப முடியாத ஒரு நிகழ்வாகப் பலருக்கும் உள்ளது. அதேவேளை, அநர்த்தம் நிகழ்ந்த உணவகத்தில் தீ விபத்துக் கட்டுப்பாட்டுப் பரிசோதனைகள் 2019ஆம் ஆண்டின் பின்னர் மேற்கொள்ளப்படவில்லை என வெளியாகிய தகவல் அதிர்ச்சி தருவதாக உள்ளது.
எதிர்பாரத விதமாக ஒரு அநர்த்தம் நிகழ்ந்துவிட்டது. பெறுமதியான மனித உயிர்கள் பலியாகி விட்டன. நடந்த சம்பவத்தில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, இது போன்ற அநர்த்தம் ஒன்று மீளவும் நடைபெறாமல் இருப்பதை உறுதிப்படுத்துவது ஒன்றே மரணத்தைத் தழுவியோருக்குச் செய்யக் கூடிய உண்மையான அஞ்சலியாக அமைய முடியும்.
சுவிசிலிருந்து சண் தவராஜா
























