சீனாவில் தொழிற்சாலை ஒன்றில் பாரிய வெடிப்பு சம்பவம்
சீனாவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற பாரிய வெடிப்பு சம்பவத்தில் இரண்டு பேர் பலியானதுடன் , 84 பேர் காயமடைந்து, எட்டு பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த வெடிப்பு சம்பவம் மங்கோலிய எல்லையின் உட் பகுதியிலுள்ள இரும்பு தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி சுமார் 3:00 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
இந்த வெடிப்பு சம்பவத்தை அடுத்து வானத்தில் பாரிய புகை மூட்டங்கள் சூழ்ந்ததோடு, தொழிற்சாலையின் கூரைகள் இடிந்து விழுந்துள்ளன. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஐந்து பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
இந்த தொழிற்சாலை சீன அரசாங்கத்துக்கு சொந்தமான இரும்பு தொழிற்சாலை ஆகும். வெடிப்பு சம்பவத்துக்கான காரணத்தை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
சீனாவில் தொழிற்சாலை வெடிப்புகள், சுரங்க இடிபாடுகள் முதல் மண் சரிவுகள் வரை தொழில்துறை சார்த்த விபத்துக்களுக்கு நீண்ட வரலாறு உள்ளது.
2015 ஆம் ஆண்டில், தியான்ஜின் துறைமுகத்தில் நடந்த இரண்டு பெரிய வெடிப்பு சம்பவங்களில் 173 பேர் உயிரிழந்ததோடு, நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். அத்துடன், நகரத்தின் பெரிய பகுதிகள் சேதமடைந்தன.
அதேவேளை கடந்த ஆண்டு மே மாதம், கிழக்கு மாகாணமான ஷான்டாங்கில் உள்ள இராசாயன தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதோடு, சுமார் 19 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.























