2026 உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி ஓகஸ்டில் நடக்கும்- கல்வி அமைச்சு திட்டவட்டமான பதில்
இலங்கை
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சையை மேலும் ஒத்திவைக்குமாறு பல்வேறு தரப்பினரால் விடுக்கப்பட்டு வரும் கோரிக்கைகள் குறித்துக் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுத் தனது இறுதித் தீர்மானத்தைத் தெளிவுபடுத்தியுள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்குத் தயாராவதற்கு மாணவர்களுக்குப் போதிய கால அவகாசம் கிடைத்துள்ளதால், ஏற்கனவே திட்டமிடப்பட்ட பரீட்சை காலப்பகுதியை எக்காரணம் கொண்டும் திருத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை என அமைச்சு அந்த அறிக்கையில் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
தேசிய கல்வி நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ ஆசிரியர் வழிகாட்டிக்கு இணங்க, உயர்தரப் பாடத்திட்டங்களை முழுமையாகப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான மொத்த நாட்களின் எண்ணிக்கை 300 ஆகும்.
2026 உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகள் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் எதிர்வரும் ஓகஸ்ட் 07 ஆம் திகதி வரை பாடசாலைகள் நடத்தப்படும் நாட்களின் எண்ணிக்கை 343 ஆகும்.
எனவே, பாடத்திட்டங்களை முடிப்பதற்கும் மேலதிகமாக 43 நாட்கள் மாணவர்களுக்குக் கிடைத்துள்ளன.
புதிதாகப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு மட்டுமன்றி, மீளப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான கால அவகாசம் குறித்தும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது தடவை தோற்றவிருக்கும் மாணவர்களுக்காக, கடந்த பரீட்சையின் முடிவுகள் வெளியிடப்பட்ட நாள் முதல் இந்த முறை பரீட்சை ஆரம்பமாகும் நாள் வரையிலான இடைவெளி 4 மாதங்களும் 10 நாட்களும் ஆகும். சுயகற்றல் மற்றும் பரீட்சைக்குத் தயாராவதற்கு இந்த கால அவகாசம் முற்றிலும் போதுமானதாகும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி, அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் 2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தயாராவதற்குரிய முறையான மற்றும் தாராளமான காலம் கிடைத்துள்ளதை அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
எனவே, பரீட்சை நடத்தப்படும் காலப்பகுதியில் மாற்றம் செய்ய வேண்டிய எந்தவொரு தேவையும் எழவில்லை எனக் குறிப்பிட்டுள்ள கல்வி அமைச்சு, திட்டமிட்டபடி 2026 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி உயர்தரப் பரீட்சை நாடு தழுவிய ரீதியில் ஆரம்பமாகும் என மேலும் அறிவித்துள்ளது.























