இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் இந்திய வௌியுறவுத்துறை செயலாளர்
இலங்கை
இலங்கைக்கான தமது உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்திய வௌியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தனது பயணத்தை நிறைவு செய்துகொண்டு , நேற்று (5) மாலை இந்தியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அவரது இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி, பிரதமர், வௌிவிவகார அமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடிருந்தார்.
இந்நிலையில், வெளிவிவகாரச் செயலாளரின் இந்த விஜயமானது இருதரப்பு உறவுகளின் முழுமையான பரிமாணங்களையும் மீளாய்வு செய்வதற்கான ஒரு வாய்ப்பை வழங்கிய அதேவேளை, பன்முகப்படுத்தப்பட்ட இந்தியா – இலங்கை பங்காளித்துவத்தின் வலிமையையும் மேலும் வலுப்படுத்தியுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இதன்போது , ‘டித்வா’ புயலின் பின்னர் இந்தியாவினால் வழங்கப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான புனரமைப்புப் பொதியின் ஒரு பகுதியாக, 350 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான இந்திய ரூபாய் கடன் திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டது.
அத்துடன், இருதரப்பு பாதுகாப்பு, அரசியல் நகர்வுகள், சிறுபான்மையினரின் நலன் திட்டங்கள், மீனவ பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.






















