தரம் 06 பெற்றோர் ஒன்றியம் என்ற பெயரில் ஒன்றிணைந்த பெற்றோர்களால் அமைதிப் போராட்டம்
இலங்கை
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி, பெற்றோர்கள் குழுவொன்று கல்வி அமைச்சுக்கு முன்னால் தொடர் அமைதிப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.
“தரம் 06 பெற்றோர் ஒன்றியம்” என்ற பெயரில் ஒன்றிணைந்த பெற்றோர்களால் இன்று (19) காலை முதல் கல்வி அமைச்சுக்கு முன்பாக இந்த அமைதிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதே கோரிக்கையை முன்வைத்துப் பொலன்னறுவை மற்றும் காலி உள்ளிட்ட பல பிரதேசங்களிலும் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
எனினும் புதிய கல்வி மறுசீரமைப்புச் செயல்முறையில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறித்துச் சரியான புரிதல் இல்லாமலே குறித்த பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அதிபர் தர சங்கத்தின் செயலாளர் நிமல் முதுன்கொடுவ தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்துக் கருத்துத் தெரிவித்த அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் வணக்கத்துக்குரிய யல்வெல பஞ்ஞாசேகர தேரர், கல்வி மறுசீரமைப்புச் செயல்முறையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து, புதிய திருத்தங்கள் ஊடாக இதனை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
இதனிடையே, சிறந்த கல்வி மறுசீரமைப்பைக் கொண்டு வருமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தியினால் நேற்று (18) இரவு ருவன்வெல்ல, கன்னத்தோட்ட பகுதியில் தீப்பந்தப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது அவ்விடத்திற்கு வந்த குழுவினர் எதிர்ப்பாளர்களுக்கு இடையூறு விளைவித்ததால் அங்குச் சற்று அமைதியின்மை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.























