பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை - வானிலை அவதானநிலையம் எச்சரிக்கை
இலங்கை
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (16) காலை 10.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிக்கை, நாளை (17) காலை 10.30 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, காங்கேசன்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக சிலாபம் வரையான கடற்பரப்புகளிலும், மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 55 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.
இதனால் குறித்த கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
அதேவேளை, நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 45 முதல் 50 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என்பதால், அப்பகுதிகளும் அவ்வப்போது கொந்தளிப்பான நிலையிலிருக்கும்.
எனவே, குறித்த கடற்பரப்புகளில் கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்கள் மற்றும் கடற்படைச் சமூகத்தினர் இதுகுறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.






















