• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அவல் கொடுத்து தன் ஏழ்மை நிலைமையை கிருஷ்ணனுக்கு உணர்த்தும் குசேலன் 

எம்.ஜி.ஆருடன் சம காலத்தில் பணியாற்றிய ஒரு சினிமா கதாசிரியர் தனது மகள் திருமணத்திற்கு தேதி குறித்து விட்டு அதை நடத்த முடியாமல் கஷ்டப்பட்டார்.

ராமச்சந்திரன்(எம்.ஜி.ஆர்) நம்முடன் ஒன்றாக வேலை பார்த்தவர்.நம் கஷ்டத்தை புரிந்தவர்.அவரிடம் போய் கேட்டால் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் எம்.ஜி.ஆரிடம் உதவி கேட்க புறப்பட்டார் கதாசிரியர்.

எம்.ஜி.ஆர் சத்யா ஸடுடியோவில் இருந்தார்.அவரைச் சுற்றி நிறைய விஐபிக்கள் இருந்தனர்.வந்த கதாசிரியர் வெளியே உட்கார்ந்தார். அப்போது எம்.ஜி.ஆரின் உதவியாளர் வந்து "என்ன...அண்ணே...?" என்று விபரம் கேட்டார். கதாசிரியருக்கு கொஞ்சம் வெட்கம்.விஷயத்தை இவரிடம் சொல்ல வில்லை.சின்னவரை(எம்.ஜி.ஆர்) பார்க்க வேண்டும்.வெளியே காத்திருக்கிறேன் என்று உட்கார்ந்து விட்டார்.

உள்ளே மீட்டிங் முடியவில்லை.எம்.ஜி.ஆரும் அழைக்க வில்லை. கதாசிரியர் உதவியாளரை அழைத்து துணியில் ஒரு #பொட்டலத்தை கட்டிக் கொடுத்து " இதை எம்.ஜி.ஆரிடம் கொடுத்து விடுங்கள்" என்று சொல்லி விட்டு, "எல்லா மனிதர்களும் ஒரு கட்டத்தில் மாறி விடுவார்கள் போலிருக்கு!!" என விரக்தியுடனும் ஏமாற்றத்துடனும் வீடு போய் சேர்ந்தார். மகள் திருமணத்துக்கு எம்.ஜி.ஆர். உதவ வில்லையே என்ற வருத்தத்துடன் வீட்டுக்குள் நுழைந்தவர் அங்கு எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மையார் அமர்ந்திருந்தார்.

ஜானகி அம்மையார் கதாசிரியரிடம் "எனக்கு சத்யா ஸடுடியோவிலிருந்து போன் வந்தது.உங்கள் மகளின் திருமணத்திற்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொள்கிறோம்.வேறு என்ன தேவை இருந்தாலும் சொல்லுங்கள்" என்று சொல்ல, அந்த கதாசிரியருக்கு கண்களில் கண்ணீர் தாரையாக வழிந்தது. எம்.ஜி.ஆரை தவறாக நினைத்து விட்டோமே என்று வருந்தினார்.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட மற்றவர்கள் கதாசிரியரிடம் " நீங்களோ எம்.ஜி.ஆரைப் பார்க்க வில்லை. உதவியும் கேட்கவில்லை. பின்னே எப்படி எம்.ஜி.ஆர் உங்கள் மகள் திருமணச் செலவை ஏற்றார்?" என்று கேட்டனர். அதற்கு கதாசிரியர் சொன்ன விபரம்.

சத்யா ஸ்டுடியோவில் ஒரு துணிப் பொட்டலத்தை எம்.ஜி.ஆர் உதவியாளரிடம் கொடுத்து அவரிடம் கொடுக்கச் சொன்னேன் அல்லவா? அந் பொட்டலத்தில் அவல் கட்டிக் கொடுத்திருந்தேன். ஒரு காலத்தில் நானும் அவரும் ஒரு நாடகத்தில் அவர் கண்ணனாகவும், நான் குசேலனாகவும் நடித்தோம்.அந்த நாடகத்தில் குசேலன் அவல் கொடுத்து தன் ஏழ்மை நிலைமையை கிருஷ்ணனுக்கு உணர்த்துவார். அதே போல் என்னிடம் இருந்து வந்த அவல் பொட்டலத்தைப் பார்த்து, என் நிலைமையை அவர் புரிந்துக் கொண்டார். எதுவும் பேசாமலேயே என் ஏழ்மையைப் புரிந்துக்கொண்டு , என் மகளுக்கு திருமணம் என்பதையும் தெரிந்து, ராமாபுரத்துக்கு போன் செய்து ஜானகி அம்மையாரை என் வீட்டுக்கு அனுப்பினார். நான்தான் அவரைப் புரிந்துக் கொள்ளாத பாவியாகி விட்டேன் என்று உருக்கமாக சொன்னார்..

நன்றி: தினமலர் நாளிதழ்-23-7-2013


 

Leave a Reply