• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இருவருக்கும் பிறந்த தினம்  ஒன்று என்பது தான் ஆச்சர்யம்!..

சினிமா

வாழ்க்கையில் சிலரை மட்டும் எப்படியாவது சந்திக்க வேண்டுமென துடிப்போம்.சிலரை தவிர்க்க வேண்டும் என்கிற லிஸ்டும் உண்டு.சந்திக்க விரும்பிய லிஸ்டில் இருவரை மட்டும்  தவிர்க்கவே முடியாது!..அந்த இருவருக்கும் பிறந்த தினம்  ஒன்று என்பது தான் ஆச்சர்யம்!..அந்த நாள் இன்று!..தமிழ்த் திரைத் துறையின் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கிய கவியரசும் மெல்லிசை மன்னரும்!..சந்திக்க முடியாத இடத்திற்குச் சென்று விட்ட இருவரைப் பற்றியும் நான் பக்கம் பக்கமாக எழுதியாச்சு!..ஆனாலும் எப்போதும் இவர்கள் எனக்கு புத்தம் புதிய புத்தகம் தான்.எடுத்துப் படிக்கத் தொடங்கினால் எங்குமில்லாத ஆனந்தம் தான்.இருவருமே கள்ளம் கபடமற்ற உள்ளங்கள் என்பது தான் இந்த ஆனந்தத்திற்குக் காரணம்!..உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாதவர்கள்!..கவிஞரைக் குறித்து ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கணக்கீடு இருக்கு!..அது அவரவர் பார்க்கும் கோணம்.ஆனால் அனைவருமே ஒப்புக்கொள்ளும் விஷயம் அவரொரு திறந்த புத்தகம்!..சில நேரங்களில் கோபக் கனல் வீசுவார்.பல நேரங்களில் பாசக் கணை வீசுவார்.பொதுவெளியில் சிரித்த முகம்.யாராயிருந்தாலும் மதிக்கும் குணம்.திறமை எங்கிருந்தாலும் மனம் திறந்து பாராட்டும் குணம்.அதே அச்சு அசலை நாம் மெல்லிசை மன்னரிடத்தும் பார்க்கலாம்!..சினிமாத் துறையில் இப்படியொரு நட்பு அரிதான விஷயம்!..திரைப் பாடல்களை ரசிக்கும் என்னற்ற ரசிகர்களுக்கு இருவருமே ஆதர்ஷ புருஷர்கள்!..ஐம்பதுகளில் தொடங்கிய நட்பு என்பதுகளில் நிறைவு பெறுகிற வரை எந்த சக்தியாலும் இந்த இருவரை மட்டும் பிரிக்கவே முடியவில்லை.அப்படியொரு பாசப் பிணைப்பை திரைத் துறை இது வரை கண்டதில்லை!..
சிறுகூடல் பட்டி எங்கேயோ இருக்கு!..எலப்புளி எங்கேயோ இருக்கு!..இருவருமே பிறந்த இடத்தை விட்டு பறந்து வந்த பறவைகள் தான்.சினிமா எனும் மாய உலகத்தில் முட்டி மோதி முன்னேறியவர்கள் தான்.அடுத்தவன் உழைப்பைச் சுரண்டாமல்  சொந்தத் திறமையில் முன்னேறியவர்கள்.இந்தத் திறமை தான் இன்றும் நம்மை வியக்க வைக்கிறது.எத்தனை ஆயிரம் பாடல்கள்.அவைகளில் விஞ்சி நிற்பது இசையா ?..மொழியா?.எதுவெனக் கேட்டால் .இருவரும் அடிக்க வருவார்கள்.மன்னர் கவிஞரை எந்த இடத்திலும் விட்டுத் தரமாட்டார்.கவிஞரும் இவரை எங்குமே குறைத்து மதிப்பிடமாட்டார்.இவருவரது உறவையும் நம்மால் புரிந்து கொள்ளவே முடியாது.நிலவென வளரட்டும் கவிதை வெள்ளம் என மன்னரும் நினைவுகள் தெளியட்டும் இளைய உள்ளம் என கவிஞரும் உறவாடிய காலங்கள் இனி எக்காலத்திலும் நமக்கு திரும்பக் கிடைக்காது!..கவிஞர் பிற இசையமைப்பாளர்களுக்கு பாடல் எழுத வந்தால் சீரியஸாகவே இருப்பார்.விச்சுவிற்கு எழுத வந்தால் முதலில் கிச்சுக் கிச்சு மூட்டுவார்.மன்னருக்கு ஒரு வீக்னஸ் உண்டு.சட்டென அவரது இடையைத் தொட்டால் கண்டபடி திட்டுவார்.கவிஞருக்கு சொல்லவே வேண்டாம்!..அசந்த நேரத்தில் ஒரு கிள்ளு!..ஏதோ ஒரு கெட்ட வார்த்தை மன்னரை அறியாமலேயே வரும்.அது தான் கவிஞருக்குத் தேவை!..இந்தாளோட ஒரே அக்கப் போராப் போச்சு!..கை நீட்டி காசு வாங்குறோம்.தொழிலை கவனிக்கலாமா?..அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்டா!..ஊர் நியாயம் பேசுவார்கள்!....கவிஞர் ஜாலியாக இருக்கும் நேரமது!..சரி சரி!..டியூன் போடு!..மன்னரின் விரல் ஆர்மோனியத்தில் விளையாடும்.ஆழ்ந்த யோசனைக்குப் போவார் கவிஞர்.திரைத் துறையில் யாருமே பின்பற்றாத பழக்கம்!..கவிஞர் பாடலை டிக்டேட் செய்வது!..விழியே விழியே உனக்கென்ன வேலை?..விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை!?..மன்னரின் தத்தகாரத்தில் கச்சிதமா போய் உட்காரும் அந்த வரிகள்!..கரெக்டா உட்காருதா?..அனு பல்லவி சரணம் என சொல்லிக் கொண்டே போவார்.ரொம்ப நுணுக்கமா பக்கத்தில உட்கார்ந்து கவனிச்சா ஆச்சய்யமா இருக்கும்!..பேப்பரும் பேனாவும் எடுத்து நாலு தடவை அடித்து நாலு பேப்பரைக் கிழிச்சு இருக்கும் இடத்தை குப்பையாக்கும் பஞ்சாயத்து அவருகிட்ட இல்லை!..உள்ளேயே வரிகள் ஓடும்.அவரது எழுத்துக்களில் ஒரு ரகசியம் இருக்கு!..
கவிஞரின் வெற்றியின் ரகசியம் அவர் எதுகையை கையாளும் முறை!..பொதுவா கவிதையில் முதலடி முதல் சீரிலும் இரண்டாம் அடி முதல் சீரிலும் எதுகை எட்டிப் பார்க்கும்.இலக்கணப்படி இது இயைபுத் தொடை!..கவிஞர் என்ன செய்வார் தெரியுமா?.இந்த ரெண்டாவது அடி எதுகையை முதலில் தீர்மானித்துவிடுவார்.முதலடி எதுகை அவருக்கு ரொம்ப ஈஸியா போயிடும்!..விழியே விழியே எடுங்க!..வேலையில எதுகை முடியுதா?.விருந்துக்கு வரவா நாளைக்கு மாலையை கவிஞர் முதலில் யோசித்து விடுவார்!..முதலடி அவருக்கு ஈஸியா வந்திடும்.கன்னிப் பெண்கள் கூட்டத்தை முதலில் யோசித்தால் அவருக்கு கங்கைக் கரைத் தோட்டம் ஈஸியா வந்துவிடும்.மற்ற கவிஞர்கள் கங்கை கரை தோட்டத்தை எழுதிவிட்டு கன்னிப் பெண்ணுக்கு யோசிப்பார்கள்.தும்பை விட்டு வாலைப் பிடிப்பது கவிஞருக்கு கை வந்த கலை!..உங்களுக்கு புரிவதற்காகச் சொல்கிறேன்.ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ!?..ஒரு சொல் கேளீரோ அவருக்கு எளிது!..அசாத்திய திறமை வேண்டும்.சொல்லாடலில் வல்லமை வேண்டும்!..அதனால் தான் அவருக்கு உட்கார்ந்து யோசிப்பது பிடிக்காது!..தூய வெள்ளை வேட்டியின் ஒரு தும்பைக் கையில் பிடித்துக் கொண்டு அன்ன நடை நடக்கத் தொடங்கினால் கவிதை வெள்ளமென பாயும்!..சில நேரங்களில் கண்ணை மூடிக் கொண்டு ஆழ்ந்த யோசனைக்குப் போவார்.வார்த்தைகள் தங்கு தடையின்றி வந்து விழும்! .தப்பும் தவறுமின்றி எழுதுவதற்கும் ஒரு தனித் திறமை வேண்டும்.பஞ்சு கண்ணப்பன் போன்ற ஆட்கள் பக்கத்தில் வேணும்.இந்த டிக்டேஷன் தென்றல் இதழில் தொடங்கியது!.

1955ல் தென்றலில் ராஜ தண்டனை எனும் தொடர் நாடகத்தை கவிஞர் எழுதி வந்தார்.மாடியில தான் அவரோட ரூம்!..அங்கே தான் எழுதுவார்.முடிச்ச உடன் கூப்பிடுவார்.ரெண்டு பக்கத்திற்கு கரெக்டா வரும்.கம்பாஸிட்டர்கிட்ட கொடுத்திடுங்க என்பார்.அது அச்சுக்குப் போகும் தென்றலில் வரும்.ஒரு தடவை பத்தே நிமிஷத்தில கூப்பிட்டார்.அதுக்குள்ள முடிச்சிட்டாரா?..உதவியாளர் ஓட கவிஞர் எழுதவே இல்லை.உதவியாளர் தமிழ் பித்தன் என்னாச்சுங்க என்றார்.நீங்க உட்காருங்க!.கவிஞர் தனது நாற்காலியை காட்ட தயங்கித் தயங்கி அவரும் உட்கார நான் சொல்றதை எழுதுங்க!.நாடக வசனம் அருவியா கொட்ட அதே வேகத்தில அவரும் எழுத 55ல் ஆரம்பிச்ச டிக்டேஷன் கவிஞரின் கடைசி பாடல் வரை தொடர்ந்தது!..ஆட்கள் மாறலாம்.கவிஞர் ஆற்றல் அதிகமானதே தவிர குறையவில்லை.கவிஞரின் பேனா வடித்தது என்பதை விட அவரது நா உதிர்த்தது என்பது தான் உண்மை!..அந்த நாவில் நாட்டியம் ஆடிய வரிகளை மன்னர் தனது விரல்களால் ஆடவிட்ட கானங்களை நாம்  கணக்கிலெடுத்தால் எண்ணிக்கையில் அடங்காத பாடல்களை நாம் பார்க்கலாம்.அதிலும் இருவரும் சேர்ந்து தாலாட்டத் தொடங்கினால் நமக்கு அப்படியே சொக்கும்.பாடலுக்கு இடையே ஆளாளுக்கு அடித்துக் கொள்வது இன்னொரு அழகு!..கவிஞர் எதையாவது சொன்னால் நல்லாத் தான் இருக்கு ஆனால் உங்க டச் இல்லையே என்பார்.அதெல்லாம் இருக்குடா!..இந்த பல்லவிக்கு என்னடா கேடு!..ஹிட்டாகுதா இல்லையா பாரு!..மன்னர் அடம் பிடிப்பார்.கவிஞர் சலித்துக்கொள்ளமாட்டார்.இது எப்படி இருக்கு பாரு?..இன்னொரு பல்லவி சொல்லுவார்!..ஓகே தான்!..ஆனாலும் இன்னும் கொஞ்சம் பெட்டரா சொல்லலாமே!.அப்படீங்கறையா?..இப்படி சொல்லாமா?..இது சூப்பரு!..மன்னர் வேண்டாம் என சொன்ன பல்லவிகள் ஹிட்டான வரலாறும் உண்டு.
சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே!..கவிஞர் தொகையறா சொல்லி பல்லவியாக செந்தமிழ் தேன் மொழியால் எழுதிய கவிஞர் இந்த டியூன்ல போடு என ஒரு பாட்டைச் சொன்னார்.அது பழைய இந்தி ஆன் பாடலின் தமிழாக்கம்.இது வேண்டாம்னே பாப்புலர் ஆகாது!..யார்ரா இவன்!..கொட்டாயே தாளம் போடும்டா!..போடாதுன்னே!..டேய்!..நான் எழுதறதையே நிறுத்திடுறேன்டா!..கவிஞர் சூடாயிட்டார்!..சரி!..சரி!..போட்டுத் தர்ரேன்!..படம் வெளியாகி அந்த பாடலுக்கு தியேட்டரில் ஆரவாரம்! .மன்னருக்குத் தெரியும் ஹிட்டாகும்னு!..எதுக்கு அடுத்தவன் டியூன்?..மாலையிட்ட மங்கை கவிஞரின் வைராக்கியம்.பாட்டெழுத கூப்பிடுறான்.ஒரு பாட்டோ ரெண்டு பாட்டோ தான் தர்ரான்!..நானே படம் எடுக்குறேன்டா!..ஆசை தீர பாட்டெழுதுறேன்!..மனுஷன் ஆசை தீர எழுதித் தள்ளி அட்டகாசம் செய்த படம் மாலையிட்ட மங்கை.57 ல் .கண்ணதாசன் புரடக்க்ஷன் தொடங்கி முதலில் எடுத்தது ஊமையன் கோட்டை தான்.கதை வசனம் பாடல் எல்லாமே கவிஞர் தான்.மன்னர்கள் தான் இசை.மஸ்தான் தான் இயக்கும் பொறுப்பை ஏற்றார்.பாட்டெல்லாம் எழுதினார்.படம் தான் தொங்கலில் நின்றது.அதில் வந்த பாடல்கள் மாலையிட்ட மங்கையில் வந்தது!..அதே போல் மகாதேவிக்கு எழுதிய பாடலும் இந்தப் படத்தில் இடம் பெற்றது.கவிஞருக்கு ஒரு பழக்கமுண்டு.தனக்குப் பிடித்தமான பல்லவி நிராகரிக்கப்பட்டால் அந்தப் பல்லவியை அனாதையாக விடமாட்டார்.ஏதாவது ஒரு படத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்வார்.தோதாக கிடைப்பவர் மெல்லிசை மன்னர்.டேய்!..விச்சு அந்தப் படத்திற்கு ஒரு பல்லவி போட்டோமே!..அது இந்த சிச்சுவேஷனுக்கு செட்டாகும் போல இருக்கேடா! ..எந்த படத்துக்கு என்ன பல்லவி சொன்னீங்க!?..அதான்டா நானன்றி யார் வருவார் இள நங்கை உனை வேறு யார் தொடுவார்?..மகாதேவிக்கு போட்டோமே!..ஓ...அதுவா?..மன்னர் மறந்தே போயிருப்பார்.கவிஞர் மறந்திருக்கமாட்டார்
மகாதேவி கண்ணயரும்போது மக்கள் திலகம் மெல்லத் தொடுவார்.சட்டென விழிக்கும்போது பாடல் பிறக்கும்.பொய்க் கோபத்தோடு பார்க்கும் நாயகியைப் பார்த்து நாயகன் பாடுவார்.நானன்றி யார் வருவார் இள நங்கை உனை வேறு யார் தொடுவார்!..பல்லவி எம்.ஜி.ஆருக்குப் பிடிக்கவில்லை.தூக்கிப் போட்டு இது எப்படி இருக்குண்ணு பாருங்க ஆண்டவரே!..!..கண் மூடும் வேளையிலும் கலை என்ன கலையே!..கண்ணே உன் பேரழகின் விலை இந்த உலகே!..அட!..இது நல்லாயிருக்கு கவிஞரே!..ஆனால் அந்த நானன்றி யார் வருவாரை கவிஞர் விடுவதா இல்லை!..மகாலிங்கமும் பண்டரிபாயும் தனிமையில் சந்திக்க அங்க கொண்டு போய் வெச்சாரு!..இம் மாதிரி நிறைய பாடல்கள் இடம் மாறியிருக்கு!..மன்னரின் குரு சுப்பையா நாயுடு இருவரையும் இதற்காகவே பாராட்டினார்.நல்ல பாட்டு நல்ல டியூனு வேஸ்ட் ஆகக் கூடாது.கண்ணதாசன் தமிழும் சாகக் கூடாது என்பார் நாயுடு!..காரணம் இலக்கியத்தரமான தமிழை யாரும் இழக்கத் தயாரா இல்லை!..இலக்கியத்தில் இருக்கும் அழிந்து போன சொற்களுக்கு அவரு தான் உயிர் கொடுத்தார்.பாவாணர் வாயில் உதிர்த்த வார்த்தைகளை பாமரன் வாயிலும் உதிர்க்க வைத்தவர் கவியரசு!..ஆடிய சாயல் ஆயிழை மடந்தை வாடிய மேனி கண்டுளம் வருந்தி!..மணிமேகலையை எத்தனை பேர் படிக்க  முடியும்?..ஆனால் அன்புள்ள அத்தான் வணக்கம் உங்கள் ஆயிழை கொண்டால் மயக்கத்தை நாம் மறக்க முடியுமா?..அந்த மறந்து போன ஆயிழையை மீட்டெடுத்தவர் கவிஞர் இல்லையா?..தென்னவனை மீட்டெடுத்தவர் கவிஞர்.தென்னவர் கையிருக்கும் திரு வாளை போலிருக்கும்.அநேக இடங்களில் இந்தத் தென்னவன் வந்திருக்கு!..நங்கை நம்பிகளை மீட்டெடுத்தவர் கவிஞர்.நாளாம் நாளாம் திருநாளாம் நங்கைக்கும் நம்பிக்கும் மண நாளாம்!..பூங்குழலியை காட்டியவர் கவிஞர்.சிறப்பு ழ கரத்தை பல பாடல்களில்  சிறப்பாகக் காட்டியவர்.பூ முடித்தாள் இந்த பூங்குழலி!..இந்தப் பாடல் கவிஞரின் புதல்விக்காக!..அட்டகாசமாக அமைத்திருப்பார் மன்னர்!..ஒரு பக்காவான கல்யாணத்தை பக்கத்திலிருந்து பார்த்த அனுபவம் இதிலிருக்கும்!..எத்தனை எத்தனை பாத்திரங்கள்.அவர்களுக்கான எத்தனையோ மெனக்கெடல்கள்.
வெளிநாட்டில் படித்து முடித்து தாயகம் திரும்பும் அத்தை மகனை நினைத்து இரண்டாம் நாயகி தோழியரோடு ஆடிப்  பாடுகிறார்.பாட்டு வேணும்.அத்தான் என் அத்தான் அன்புடன் வருவார் மகிழ்வேன் நான்!..மாலையிட்ட மங்கைக் காகத் தான்.என்னண்ணே!..அத்தான் பொத்தான்னு!..வேற போடுங்கண்ணே!..மன்னருக்கு பிடிக்கவில்லை!..சக்கரவர்த்தி திருமகள் தந்த கடுப்பு அவருக்கு!..அத்தானும் நீ தானே சட்டை பொத்தானும் நான் தானே!..ராமையதாஸ் மாதிரியே சொல்றீங்க!..சரிடா!..சரிடா!..வேறொன்னு தர்ரேன்!..அன்னம் போல பொண்ணிருக்கு ஆசை கொண்ட மனமிருக்கு!..அவரை மட்டும் ஏனோ இன்னும் காணோம்?..இது ஓகேவா?..இது எவ்வளவு டீஸண்டா இருக்கு!..அந்த நேரத்தில் ஏனோ மன்னருக்கு அத்தானைப் பிடிக்கவில்லை!..ஆனால் பாவமன்னிப்பில் ஒரு அத்தான் வந்தது!..அத்தான்!..என் அத்தான்!..அவர் என்னைத் தான்!..கவிஞர் வேண்டுமென்றே நிறைய அத்தான் தந்தார்!..எப்படிச் சொல்வேனடி?..மன்னருக்கு வேறு வழியில்லை!..செட்டியார் வேறு என்னப்பா இவ்வளவு இழுக்குறீங்க  வெத்தலை பாக்கு போடுற மாதிரி என்றார்.இவ்லைங்க!.. இந்தப் பாட்டு ஹிட்டாகும்!..என்னமோ சொல்றீங்க!..பார்த்து பண்ணுங்க.ஆனால் அந்த அத்தான் பட்டையை கிளப்புச்சு!..ஏன்டா!..அன்னைக்கு அந்த குதி குதிச்சே!..ஆனாலும் கவிஞர் மன்னர் முன்பாக அடங்கிய கணவனாக மாறிவிடுவார்!..அந்த அத்தானை விட இந்த அத்தான் நல்லாயிருக்கே!..அந்த பாவமன்னிப்பில் அத்தனை பாடல்களையும் ஹிட்டாக்கிவிட்டுத் தான் இந்த ஜோடி ஓய்ந்தது!..
கம்பன் கண்ட சீதையும் காளிதாசன் சகுந்தலையும் வந்து போன பாடல்கள்.உள்ளத்தில் வீடு கட்டி உள்ளே ஓர் தொட்டில் கட்டி சின்னப் பிள்ளைகளான நம்மை தாலாட்டிய பாடல்கள்.மனமெனும் மாளிகை திறந்திருக்க மையிட்ட கண்கள் சிவந்திருக்க இரு கரம் நீட்டி எமைத் தழுவிய பாடல்கள்.செண்டாடும் வடிவழகை கண்டாடும் கலைஞனாக நம்மை மகிழ்வித்த பாடல்கள்.மாநிட ஜாதியை ஆட்டி வைத்த அந்த காவியத் தாயின் இளைய மகனை பங்கமில்லாமல் பார்த்துக்கொண்டவர் மெல்லிசை மன்னர்.நதியெங்கே போகிறது நாளெங்கே போகிறது நிலவெங்கே போகிறது!?..எத்தனை எத்தனை கேள்விகள்.அத்தனைக்கும் பொறுமையாக விடை தந்த பொக்கிஷமான நிமிஷங்கள்.கண்ணா நீ கொண்டாடும் பிருந்தாவனம் கல்யாண பூப் பந்தல் எந்தன் மனம்!..நீராடும் யமுனா நதியாக நமது உள்ளம்!..கவிஞரே!..தேன் கூடு நீ என்றால் தேனீக்கள் நாங்கள் அல்லவா?..தீராத பசியோடு நின்றவர்களை தேனாற்றில் நீந்த விட்ட கவியல்லவா!..என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை!..தூக்கம் மறந்த இரவுகளில் அக்கறையோடு அணைத்த கரமல்லவா!..நினைக்கும்போதே இனிக்கும் கனியே!..மணக்கும் பூவில் செழிக்கும் தேனை சுவைக்கச் சுவைக்கத் தந்தவனே!..ஆசையெனும் மேடையிலே ஆடி வரும் வாழ்வினிலே ஓசையின்றி ஓராயிரம் சாதனைகள் புரிந்தவனே!..கருவூரில் குடி புகுந்து மண்ணூரில் விழுந்த என் மன்னவனே!..மெல்லிசை மன்னனோடு மல்லுக்கட்டிய உன்னை எப்படியய்யா மறக்க முடியும்?..தரணியில் தமிழ் உள்ளவரை உனக்கு தாழ்வென்பதே இல்லை!..இதைச் சொல்ல எங்களுக்கு எந்தவித  தயக்கமும் இல்லை!..

 

Abdul Samath Fayaz

Leave a Reply