வெனிசுலாவை உலுக்கிய இரட்டை நிலநடுக்கம்.. கட்டிடங்கள் தரைமட்டம் - 10,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு என அச்சம்
கரீபியன் கடலில் அமைந்துள்ள தென் அமெரிக்க தீவு நாடு வெனிசுலா. இங்கு உள்ளூர் நேரப்படி நேற்று மாலை வெறும் 40 நொடிகள் இடைவெளியில் 7.2 மற்றும் 7.5 என்ற ரிக்டர் அளவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த தொடர் நிலநடுக்கங்களால் நாட்டின் பல பகுதிகளில் வலுவான நில அதிர்வு உணரப்பட்டது. மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.
குறிப்பாக தலைநகர் கராகஸில் நிலநடுக்கங்களின் தீவிரம் அதீதமாக இருந்தது. பல கட்டடங்கள் இடிந்து விழுந்த காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இடிபாடுகளால் நகரம் முழுவதும் புழுதிப் படலம் சூழ்ந்துள்ளது.
நிலநடுக்கம் காரணமாக அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இந்த அடுத்தடுத்த நிலநடுகங்களில் அந்நாட்டில் சேதம் மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கக்கூடும் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) அச்சம் தெரிவித்துள்ளது.
10,000 பேருக்கு மேல் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வரும் நிலையில் சேதங்கள் கணக்கிடப்பட்டு அதிகாரபூர்வ உயிரிழப்பு எண்ணிக்கை விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
நிலநடுக்கத்திற்குப் பிறகு, அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம், நிலநடுக்க மையத்திலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவிற்குள் உள்ள கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையை விடுத்தது.
நிலநடுக்கத்தின் மையப்புள்ளி, வடக்குக் கடற்கரைக்கு அருகில், யூமாரே நகருக்கு வடமேற்கே சுமார் 23 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.
இப்பகுதியில் தான் வெனிசுலாவின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைந்துள்ளன. அங்கு ஏற்பட்ட சேதம் குறித்து இன்னும் தகவல் வெளியாவில்லை.





















